Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

பணியில் நேர்மை

ஒருவர் ஓடி வந்தார். இன்னொருத்தரைப் பார்த்து, “சார், உங்கள் சைக்கிளை ஒரு நாள் இரவல் கொடுங்களேன்.

பக்கத்து ஊருக்குப் போய்விட்டு வர வேண்டியிருக்கு” என்றார்.

இவர் சைக்கிளைக் கொடுத்து ‘பத்திரமாகக் கொண்டு போங்கள் என்றார். சார்.

இதைப் பத்திரமாகக் கொண்டு போகிறேன். கவலையே வேண்டாம். ஏனென்றால் இதை உங்களுடைய சைக்கிளாக நான் நினைக்கவில்லை என்னுடைய சைக்கிளாக நினைக்கிறேன்!” என்றார்.

இவருக்கு உண்மையாகவே பயம் வந்தது. ஏனென்றால் அவர் சொன்னது மாதிரி அதை தன்னோட சைக்கிளாகவே நினைத்து தள்ளிக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது?

எது எதை நம்முடையதாக நினைக்க வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கு. சில பேர் ஆபிசையே வீடாக நினைத்துவிடுவது உண்டு. அப்படிப்பட்டவர்கள் வீட்டை அலுவலகமாக நினைப்பதில்லை!

ஏன்னென்றால் வீட்டிலே இவர் அலுவலராக நடக்க முடிவதில்லை!

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது விடயத்துக்கு வருவோம். பொறியியல் மேதை டாக்டர் விசுவேசுவரய்யா இருந்தார் இல்லையா? பாரத ரத்னா விருது எல்லாம் கொடுத்தார்களே! ஆபீஸ் வேலை வேறு – சொந்த வேலை வேறு என்பதற்கு ஒரு உதாரணமாக இருந்தவர் அவர்.

மைசூர் மகாராஜாவிடம் திவானா இருந்தார். அவர் ஒருநாள் அரசாங்க வேலை காரணமாக வெளியூர் போய் இருந்தார்.

ஹாசன் என்ற ஊருக்குப் பக்கத்திலே ஒரு பயண மாளிகை. அங்கே தங்கிவிட்டார்.

இரவு அங்கே தங்கியிருந்து விட்டு விடிந்ததும் ஊருக்குத் திரும்புவதாக திட்டம்.

இரவு தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகிவிட்டது. ரொம்ப நேரம் வரைக்கும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அரசாங்க ஃபைல்கள் நிறைய இருந்தது. அதையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்தார் படித்துப் பார்த்தார். பரிசீலனை செய்தார். அதிலே எழுத வேண்டியதை எழுதினார்.

கையெழுத்துப் போட்டார். ஒரு வழியாக வேலையெல்லாம் முடிந்தது. அதுக்கப்புறம் என்ன எண்ணினார் என்றால்.

தன்னுடைய சூட்கேஸைத் திறந்தார். அதிலேருந்து இரண்டு மெழுகுவர்த்தியை எடுத்துக் கொளுத்தி வைத்தார்.

அந்தப் பயண மாளிகையிலே அதுவரைக்கும் எரிந்து கொண்டிருந்த மின்சார விளக்குகளை அணைத்து விட்டார்.

அதற்குப் பிறகு அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்திலே.. சில புத்தகங்களைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த பயண மாளிகையிலே பணியாளராக இருந்தவர் இதைப் பார்த்துவிட்டு ஓடி வந்தார். மறுபடியும் மின்விளக்கைப் போடுவதற்காக போனார்.

விசுவேசுவரய்யா அதைப் பார்த்துவிட்டு போட வேண்டாம் என்று விட்டாராம்.

“இதுவரைக்கும் நான் அரசாங்க அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அதனாலே மின்விளக்குக்கள் அப்படி எரிந்ததிலே தவறில்லை! இப்போது நான் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன் – இது என் சொந்த வேலை.

ஏன் இங்கேயிருக்கின்ற மின் விளக்கு எதற்காக எரிய வேண்டும்?” என்று கேட்டாராம்.

இப்போது இருக்கின்ற நில அரசுப் பணியாளர்களிடம் இந்த சம்பவத்தை பேச்சோடு பேச்சாக சொல்லிப் பார்த்தேன். அவர்களாலே இதை ஜீரணிக்கவே முடியவில்லை.

‘நேர்மை தேவைதான். அதுக்காக அவ்வளவு தூரத்துக்கு அது தேவையா?” என்று தோன்றுகிறது அவர்களுக்கு!

விசுவேசுவரய்யா அப்படி செய்தது ‘தான் ஒரு நேர்மையாளர்” என்று இந்த உலகத்துக்கு நிரூபிக்கவேண்டும் என்பதற்காக இல்லை! தான் அப்படி நடந்துக் காட்டி தன்னை சுற்றியிருக்கிறவர்களும் அதை கேள்விப்படுவர்களும் முடிந்த அளவுக்கு பொதுவாழ்விலே, அரசபணியிலே நேர்மையை கடைபிடிக்க முயற்சி செய்யலாமே என்பதற்காகத்தான்!

இப்பவும் சில பேர் இருக்கிறார்கள்!

இவர்கள் அலுவலகம் வேறு வீடு வேறு என்று நினைப்பதில்லை! அவ்வளவு உரிமை. ஒருவர் அப்படித்தான்.

அவருக்கு அவசரமாக 5000 ரூபா தேவைப்பட்டது. அலுவலகப் பணத்தை எடுத்துக்கொண்டார். அந்த நேரம் பார்த்து ‘ஆடிட்” வந்துவிட்டது மாட்டிக் கொண்டார். விசாரணை நடக்குது!

அவர் சொல்றார்: “சார்… நான் நேரம் காலம் பார்க்காமல் ஆபீசிலே வேலை செய்வேன். ஏனென்றால் அதை என்னுடைய ஆபீசாக நினைக்கிறேன்.

அவசரத்துக்கு அந்தப் பணத்தை எடுத்தேன்.மறுபடி வைத்து விடலாம் என்று தான் இருந்தேன்! அதற்குள்ளே இப்படி ஆகிவிட்டுது! நீங்கள் என்ன நினைத்தாலும் சரி… நான் அலுவலகம் வேறு வீடு வேறு என்று நினைக்கவில்லே! அது என்னுடைய சுபாவம்!” என்றார்.

விசாரணை செய்தவர் தீர்ப்பு வழங்கினார்:

“உங்கள் சுபாவத்துக்கு மதிப்பு கொடுத்து நானும் தீர்ப்பு வழங்குகிறேன். நீங்கள் கொஞ்ச நாள் ஜெயிலிலே இருந்துவிட்டு வாங்கள்! அது உங்களுக்கு கஷ்டமாக இருக்காது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அங்கே போனாலும் நீங்கள் – உங்கள் சுபாவப்படி வீடு வேறு ஜெயில் வேறு என்று நினைக்க மாட்டீர்கள்!” என்றார்.

தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link