Type to search

Headlines News World News

நெதர்லாந்தில் இறைச்சி மற்றும் எரிபொருள் விளம்பரங்களுக்கு தடை!

Share

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம், பொது இடங்களில் இறைச்சி மற்றும் படிம எரிபொருள் தொடர்பான விளம்பரங்களை தடை செய்த உலகின் முதல் தலைநகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கடந்த மே மாதம்  முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதியின்படி, நகரின் முக்கிய பகுதிகளில் பர்கர்கள், சிக்கன் நக்கட்ஸ் போன்ற இறைச்சி சார்ந்த உணவுகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாகனங்கள், பெற்றோல் மற்றும் டீசல் கார்கள், எஸ்யுவி (SUV) ரக வாகனங்கள், குறைந்த கட்டண விமான பயணங்கள் மற்றும் சொகுசு கப்பல் பயண விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இனி பஸ் நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் விளம்பர பலகைகளில் இந்த தயாரிப்புகளுக்கு பதிலாக அருங்காட்சியகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரங்களே நடைபெறும்.

“காலநிலை மாற்றம் என்பது மிகவும் அவசரமான ஒரு பிரச்சனை” என ஆம்ஸ்டர்டாம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் இலக்கு: 2050-ஆம் ஆண்டிற்குள் ஆம்ஸ்டர்டாமை ‘கார்பன் நியூட்ரல்’ நகரமாக மாற்றுவது, நகர மக்களின் இறைச்சி நுகர்வை பாதியாக குறைப்பது,  புகைபிடித்தல் எவ்வாறு ஒரு காலத்தில் நாகரீகமாகக் கருதப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டதோ, அதேபோல் அதிக கார்பனை வெளியேற்றும் தயாரிப்புகளையும் சமூகத்தின் பார்வையிலிருந்து அகற்றுவதே இதன் நோக்கமாகும்.

இந்த தடையானது நுகர்வோரின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்றும், வணிக சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கை என்றும் இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால் சமூக ஆர்வலர்கள் இதை வரவேற்றுள்ளனர். “விளம்பரங்கள் மூலம் பெரிய நிறுவனங்கள் நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று கட்டளையிடுவதை இது தடுக்கும். இது மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை அளிக்கும்” என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே நெதர்லாந்தின் ஹார்லெம் போன்ற நகரங்கள் இத்தகைய தடையை அமல்படுத்தியுள்ள நிலையில், தற்போது தலைநகர் ஆம்ஸ்டர்டாமும் இதில் இணைந்துள்ளது. எடின்பர்க், ஸ்டாக்ஹோம் மற்றும் புளோரன்ஸ் போன்ற உலகளாவிய நகரங்களும் இத்தகைய முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.

இந்த நடவடிக்கை மக்களிடையே ஆரோக்கியமான மற்றும் சூழல் நட்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link