கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டு இணையக் குற்றவாளிகள் விளக்கமறியலில்!
Share
கணினி சார்ந்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இணையத்தைப் பயன்படுத்தி பணம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த 120 வெளிநாட்டு கடத்தல்காரர்கள் நேற்று (03) வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது தப்பிச் சென்ற மேலும் 12 பேர் கைது செய்யப்படவுள்ளனர்.
உலகின் பல நாடுகளின் தரவு அமைப்புகளுக்குள் நுழைந்து இந்த குழுவினர் சூட்சுமமான முறையில் பண மோசடி செய்துள்ளனர்.
சுற்றுலாத்துறையில் சுற்றுலா வணிக நடவடிக்கைகளை முன்னெடுப்பது மற்றும் சுற்றுலா குழுக்களுக்கு வழிகாட்டிகளாக செயற்படுவதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பல மோசடிகளை இவர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கணினி தொடர்பில் விசேட அறிவு கொண்ட இந்த குழுவினர், மெதவெலிக்கடை வீதியிலுள்ள மாடி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கியிருந்துள்ளனர்.


