Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

இரு வழிப்பறிக் கொள்ளையர்கள்

ஒரு வெளியூருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்துகொண்டிருக்கிறோம். இருட்டிப் போனது! காட்டுப்பாதை! கையிலே ஒரு ‘டார்ச்லைட்” வைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த வெளிச்சத்தைக் கொண்டு வழியைப் புரிந்து கொண்டு நடந்து வருகிறோம்! திடீர் என்று வந்து வழிமறிக்கிறார்கள் இரண்டு பேர்! வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள்.


நம்மிடம் இருக்கிறது எல்லாத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விடுகிறார்கள்.


அந்த சமயத்திலே நமக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்? அதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! எதற்கு நினைத்துப் பார்க்கச் சொல்கிறேன் என்றால் அதே வேதனை நம்முடைய ஆன்மிகப் பயணத்திலேயும் ஏற்படுவதற்குச் ‘சான்ஸ்” இருக்கு என்று சொல்கிறார்கள் பெரியவர்கள்! (சுவாமி பரமார்த்தானந்தா)


ஏன்னென்றால் ஆன்மிகப் பயணத்திலேயும் நடுவிலே வழிப்பறி செய்பவர்கள் இரண்டு பேர் வருவார்களாம்! அந்த இரண்டு பேரும் யார் என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.


ஆன்மிகப் பயணத்திலே நாம் ஒரு எல்லையை (மோட்சம்) நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டு இருக்கிறோம்!


‘விவேகம்” என்ற விலை உயர்ந்த பொருளை கையிலே வைத்துக்கொண்டுப் போய்க் கொண்டிருக்கிறோம்.


அதைக் கொண்டுதான் நாம் எது சரி. எது சரியல்ல. என்பதைத் தீர்மானம் செய்து கொண்டு பிரயாணத்தைத் தொடர முடியும்!
விவேகம் இல்லை என்றால் நாம் அந்தப் பிரயாணத்தைத் தொடர முடியாது. அப்படி இருக்கின்றபோது திடீர் என்று இரண்டு கொள்ளைக்காரர்கள் குறுக்கே வந்து அந்த விவேகத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுப் போய்விட்டால் என்ன ஆவது?


அப்படித்தான் சார் ஆகிவிடுது! சரி – யார் அந்த இரண்டு கொள்ளைக்காரர்கள்! ஒருவர் பெயர்: மோகம் அதாவது ஆசை! இன்னொருத்தர் பெயர்: குரோதம். அதாவது கோபமும் ஆசையும் சினமும் சேர்ந்துதான் நம்மிடம் இருக்கின்ற விலை உயர்ந்த பொருளான விவேகத்தைப் பறித்துக்கொண்டுப் போய்விடுது.


அது ரொம்ப வேதனையைக் கொடுக்கக்கூடிய ஒரு விடயம்.


டார்ச்லைட்டை தவறவிட்டுட்டு இருட்டிலே முழித்துக் கொண்டு நிக்கின்ற மாதிரி!
ஆசை – சினம் இது இரண்டும் மனதிலே உண்டாகியது என்றால் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட வேண்டுமாம்!
வளரவிட்டால் ஆபத்து! அப்படி கிள்ளி எறிவதற்கு நாம் ஒரு கத்தியை உபயோகப்படுத்த வேண்டுமாம்.

அந்த கத்திக்குப் பெயர்தான் புத்தி. நாமெல்லாம் வழக்கமாக என்ன செய்கிறோம்? முதலிலே கோபப்பட்டு விடுகிறோம். அதன்பின் வருத்தப்படுகிறோம். இனிமேல் கோபமே படக்கூடாது என்று நினைக்கிறோம். இதே தீர்மானத்தை முன்னாடியே செய்திருக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.


ஆசையையும் கோபத்தையும் ஆரம்பத்திலேயே எடுத்தெறிய வில்லை என்றால் நம் அனோசக்தி குறைந்துகொண்டே போய்விடும். கடைசியிலே நாம் மிருகங்களாகிவிடுவோம்! இது பெரியவர்கள் நமக்குக் கொடுக்கின்ற எச்சரிக்கை! சிலபேர் எந்த சந்தர்ப்பத்திலேயும் கோபப்படுவதில்லை. அதை பார்த்துவிட்டு நாம் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது!


ஒரு பிரயாணி விமான நிலையத்திலே ஒரு பணியாளரிடம் ரொம்ப கோபமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த பிரயாணி ஜப்பான். வேண்டியவர் அந்த சிப்பத்தி பிரயாணிகள் கொண்டு வருகின்ற பெட்டிகளையெல்லாம் வாங்கி ஒழுங்குபடுத்தி விமானத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியவர்.

அந்தப் பிரயாணி இந்த சிப்பத்தியை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தார். இவர் பதிலுக்குக் கோபப்பட வேண்டுமென்று இல்லை! ரொம்பப் பொறுமையாக புன்முறுவலோடு அவருக்குப் பதில் சொல்லிக்கொண்டிருத்தார்.

இது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. பார்க்கிறவர்களுக்கு! கொஞ்ச நேரத்திலே விமானம் வந்தது. இந்தப் பிரயாணி புறப்பட்டுப் போய் விட்டார். அதன் பின்பு அந்த சிப்பந்தியைக் கூப்பிட்டார் ஒருவர்: “ஏங்க அந்த ஆள் அவ்வளவு கோபமாகத் திட்டினார். உங்களாலே எப்படி சிரித்துக்கொண்டே பதில் சொல்ல முடியுது? உங்களுக்கு கோபமே வராதா?” என்று கேட்டார்.


“என்னுடைய சினத்தை நான் வெளியிலே காட்டிக்க மாட்டேன். நான் அதைக் கையாள்கிற விதமே தனி!” என்றார் அந்த ஆள்.
“அது எப்படி” என்றார் இவர்.


“இப்போது அந்தப் பிரயாணி ஜப்பானுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்! அவருடைய பெட்டி படுக்கையெல்லாம் அமெரிக்காவுக்குப் போய்க்கொண்டு இருக்கு!”


என்று நிதானமாக பதில் சொன்னார் அந்த ஆள்!

தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link