இன்று ஒரு தகவல்
Share
தைரியம்
ஒரு சின்ன பையன் என்னைத் தேடி வந்தான்.
“மாமா! ஒரு கதை சொல்லுங்கள்!” என்றான். “சொந்தமாக எதுவும் தெரியாதே!” என்றேன். “உங்களுக்கு சொந்தமாக எதுவும் தெரியாது என்பது எங்களுக்கும் தெரியும்!” என்றான்.
இந்த பையன் அடிக்கடி என்னிடம் வந்து கதை கேட்கிறவன். அதனாலே என்னுடைய இரகசியம் எல்லாம் அவனுக்கு அத்துபடி!
அதனாலேதான் அவ்வளவு தெளிவாக அடித்து விட்டான்.
“சரி, இப்போது என்ன செய்யலாம்?” என்றேன். “பழைய கதை எதையாவது சொல்லுங்களேன்!” என்றான். “உனக்கு கிருஷ்ண தேவராயரைத் தெரியுமா?” என்றேன்
“அவரிடம் நேரிலே பழக்கமில்லை! ஆனால் அவரைப் பற்றி புத்தகத்திலே படித்திருக்கிறேன்!” என்றான்.
“சரி. இவனிடம் மேற்கொண்டு பேச்சுக் கொடுத்தால் நம்மை ஒரு மாதிரி ஆக்கி விடுவான்” என்பதை ஊகித்துக்கொண்டு அவனை உட்கார வைத்து கடைசி வரை குறுக்கே பேசக்கூடாது என்று ஒரு கண்டிஷனையும் போட்டு விட்டு அந்தக் கதையை சொல்ல ஆரம்பித்தேன்.
ஒரு சமயம் கிருஷ்ணதேவராயர் சமஸ்தானத்துக்கு ஒரு பெரிய வித்துவான் வந்து சேர்ந்தார். “என்னுடன் போட்டி போட இந்த ஊரிலே யாராவது இருக்கிறீர்களா?” என்று சவால் விட்டார்.
அந்த ஊரிலே இருந்த பெரிய பெரிய வித்துவான் எல்லாம் இது என்ன வம்பாப் போச்சு என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.யாரும் அந்த ஆளோடு போட்டி போடுவதற்குத் தயாராக இல்லை! எல்லோரும் நடுங்கிக்கொண்டிருந்த அந்த நேரத்திலே ஒருவன் மட்டும் தைரியமாக முன்னுக்கு வந்தான். அது யார்? தெனாலிராமன்.
அந்த சமஸ்தானத்திலே விகடகவி அவர்! “என்னை அனுப்புங்கள் போட்டிக்கு! நான் ஜெயித்துக் காட்டுகிறேன்” என்றான். “உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?” என்று கேட்டார்கள். “தைரியம் மட்டும்தான் என்னிடம் இருக்கு! ஆனால் தைரியம் இருந்தால் அதிர்ஷ்டம் தேடிக்கொண்டு வரும் என்பது எனக்குத் தெரியும்!” என்றான். அடுத்த நாள் போட்டி ஆரம்பமாகியது.
அந்த பெரிய வித்துவான் தெனாலிராமன் எதிரிலே வந்து நின்றான். அந்த வித்துவான் ஒரு விரலை காட்டினார.; தெனாலிராமன் இரண்டு விரலை நீட்டினான் வித்துவான் மூன்று விரலைக் காட்டினார். இவன் உடனே நான்கு விரலைக் காட்டினான்.
அவர் ஐந்து விரலை நீட்டினார், தெனாலிராமன் உடனே தன் கை முஷ்டியைக் காட்டினான். அவ்வளவுதான் அந்த பெரிய வித்துவான், கிருஷ்ணதேவராயர் காலிலே விழுந்தார். “நான் தோற்றுவிட்டேன்! என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்!” என்று சொல்லிவிட்டார்.
கிருஷ்ணதேவராயர் அவரைத் தனியாக அழைத்துக்கொண்டுப் போய் என்ன நடந்தது என்று விசாரித்தார். அந்த வித்துவான் விளக்கம் கொடுத்தார். ஆண்டவன் ஒருவன்தான் உண்டு என்பதை விளக்கு வதற்காக நான் ஒரு விரலைக் காட்டினேன்.
“அப்படி இல்லை. சக்தியை சேர்த்தால் சக்தி சிவன் என்று இரண்டு பேர் உண்டு!” என்று உங்கள் வித்துவான் இரண்டு விரலைக் காட்டினார். “மூர்த்திகள் மூன்று பேர்!” என்று நான் மூன்று விரலைக் காட்டினேன். “வேதங்கள் நான்கு” என்று அவர் நான்கு விரலைக் காட்டினார்.
“பஞ்ச பூதங்கள் ஐந்து!” என்று நான் ஐந்து விரலைக் காட்டினேன்; “அதையெல்லாம் அடக்கி ஆளணும்!” என்று சொல்லி அவர் முஷ்டியைக் காண்பித்தார். அடடா உங்கள் வித்துவானுக்கு எப்பேற்பட்ட அறிவு? அவர்தான் ஜெயித்தார். நான் தோற்று விட்டேன்!” என்றார் அவர். அப்படி சொல்லிவிட்டு அவர் போய் விட்டார்? தெனாலிராமனைக் கூப்பிட்டு ‘நடந்தது என்ன” என்று விசாரித்தார்கள். அதற்கு தெனாலிராமன் விளக்கம் கொடுத்தான்:
‘என்னைக் கொன்றுவிடுவேன் என்று அந்த வித்துவான் ஒரு விரலைக் காட்டினார். ‘உன் கண் இரண்டையும் தோண்டி விடுவேன் என்று” நான் இரண்டு விரலைக் காட்டினேன்.
‘உனக்கு நாமம் போட்டுவிடுவேன்!” என்று அவர் மூன்று விரலைக் காட்டினார். ‘அதை அழித்துவிடுவேன்!” என்று நான் நான்கு விரலைக் காட்டினேன். “உன்னை அறைந்து விடுவேன்!”என்று அவர் ஐந்து விரலைக் காட்டினார். ‘நான் உங்களை குத்திவிடுவேன்” என்று முஷ்டியைக் காட்டினேன்!” என்றான்.
இப்போது பாருங்கள். ஜெயித்தது யார்? தைரியம் மட்டும் இருந்துவிட்டால் அதிர்ஷ்டம் தானாகத் தேடி வருவது எவ்வளவு உண்மையாகிப் போனது!
அதனாலே நாம் எப்பவும் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு என் எதிரிலே கதை கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த சின்னப் பையனைப் பார்த்தேன்! அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் தன்னோட கை-கால் இரண்டையும் ஒரு மாதிரி என் முன்னாலே தூக்கி 20 விரலை காட்டினான். எனக்கு ஒன்றும் புரியவில்லை! “இதற்கு என்னப்பா அர்த்தம்?” என்று கேட்டேன்.
“இதே கதையை, இதற்கு முன்னாடி எங்களிடம் இருபது தடவை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!” என்றான்.
தென்கச்சி கோ.சுவாமிநாதன்


