இன்று ஒரு தகவல்
Share
எனக்குள் நான்
ஒரு பெரியவர் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். “நீ ஒரு ஆளா? இரண்டு ஆளா?” என்றார்.
இப்படிக் கேட்டதும் அந்தப் பெரியவர் மேலேயே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.
“அவர் இப்போது நிதானத்திலேதான் இருக்கிறாரா இல்லையா?” என்று! பார்ப்பது எல்லாம் இரண்டு இரண்டாக தெரிந்தால் அது சந்தேகத்துக்குரிய ஒரு விடயம்தானே?
அதனாலே சந்தேகப்பட்டேன்.
இருந்தாலும் பெரியவர் மறுபடியும் கேட்டார் “நீ ஒருத்தனா?, இரண்டு பேரா.” என்று. “நான் ஒரு ஆள்தான்!” என்றேன்.
“இல்லை! இப்படித்தான் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் ஒவ்வொருத்தருக்குள்ளேயும் மூன்று பேர் இருக்கிறோம்!” என்றார்.
தலையைப் பிச்சிக்கலாம் போல இருந்தது! இருந்தாலும் அதை வெளியிலே காட்டிக்கொள்ளாமல் “எப்படிங்க அது?” என்றேன்.
நம்மைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கோமே.அது ஒரு விதம்! நம்மைப் பற்றி அடுத்தவங்க நினைக்கிறாங்களே.. அது ஒரு விதம்! நம்மைப் பற்றி நமக்கும் தெரியாமல் அடுத்தவர்களுக்கும் தெரியாமல் இருக்கிறது ஒரு விதம்! அதைப் பற்றி விபரமாகச் சொல்லணும் என்றால்.
என்னைப் பற்றி நான் எப்படி நினைத்துக்கொண்டிருக்கேனோ அது ஒரு மனிதன்!
என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ – அது ஒரு மனிதன்! இதைத் தவிர எனக்கும் தெரியாமல் உங்களுக்கும் தெரியாமல் எனக்குள்ளே ஒரு மனிதன் இருக்கிறான்!
ஆக ஒவ்வொருவருக்குள்ளேயும் மூன்று மனிதன் இருக்கிறான் என்பது அந்தப் பெரியவருடைய அபிப்பிராயம்!
இது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு பெரியவர் என்ன சொல்கிறார் என்றால் நம்மைப் பற்றியே நமக்குத் தெரியாத உண்மைகள் நான்கு விதம் என்கிறார்.
ஒன்று: நமக்கும் தெரியும்.மற்றவர்களுக்கும் தெரியும்!
இரண்டு: நமக்குத் தெரியாது. மற்றவர்களுக்குத் தெரியும்!
மூன்று: நமக்குத் தெரியாது. மற்றவர்களுக்குத் தெரியும்!
நான்கு: நமக்கும் தெரியாது. மற்றவர்களுக்கும் தெரியாது.
இதை நன்றாக புரிந்துகொண்டால் கருத்து வேறுபாடு வராது. மனித நேயம் வளரும்!
முதல் விடயத்தை எடுத்துக்கொள்வோம். நமக்கும் தெரியும் அடுத்தவர்களுக்கும் தெரியும்.
உதாரணத்துக்கு நான் கொஞ்சம் குள்ளம் என்று வையுங்களேன்…! இது நமக்கும் தெரியும் அடுத்தவர்களுக்கும் தெரியும். இரண்டு பேருக்கும் தெரிந்த உண்மை இது!
அதனாலே என்னைப் பற்றி யாராவது… அந்த ஆள் அவ்வளவு உயரம் கிடையாது! என்று சொன்னால் அதைத் தப்பா எடுத்துக்கக்கூடாது! இரண்டாவது விடயம்.
நமக்குத் தெரியும், அடுத்தவர்களுக்குத் தெரியாது.
ஒருவருக்குப் பரிசு கிடைக்கிறது. அதைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன்! இருந்தாலும் அதை வெளியிலே காட்டிக்காமல். முகத்திலே சிரிப்பை வரவழைத்துக்கொண்டு அவரைப் பாராட்டுகிறேன்! இது… எனக்குத் தெரியும் அடுத்தவர்களுக்குத் தெரியாது!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது இந்த ரகம்.
மூன்றாவது விடயம். ‘நமக்குத் தெரியாது மற்றவர்களுக்குத் தெரியும்.” கோபப்படுவது இதற்கு ஓர் உதாரணம்
நமக்குத் தெரியாத ஒரு குறையை அடுத்தவர்கள் சுட்டிக் காட்டும் போது நமக்குக் கோபம் வருகிறது!
நான்காவது விடயம் என்னவென்றால் நமக்கும் தெரியாது மற்றவர்களுக்கும் தெரியாது!
ஒருவன் எரிந்து விழுகிறான். அவனுக்கு இரத்த அழுத்தம்! அதனாலே அப்படி விழுகிறான்.
அவனுக்கு அது இருக்கு என்கிறது அவனுக்கும் தெரியாது. அடுத்தவனுக்கும் தெரியாது!
அதனாலே அடுத்தவனும் பதிலுக்கு இவன்மேல் கோபப்படுகிறான்.
அதனாலே நாம் மனித நேயத்தோடு வாழவேண்டும் என்றால் நம்மையும் புரிந்து கொள்ள வேண்டும்!
அடுத்தவர்களையும் புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிய வேண்டும் அதுதான் பகுத்தறிவு!
இந்தக் தகவலைக் கேட்டுவிட்டு நம் ஆள் ஒருவன் சொன்னான்.
“நீங்கள் சொல்வது எல்லாம் வாஸ்தவம் சார். அந்த நான்காவது விடயம் சொன்னீர்களே. அதை சரியாக புரிந்துகொள்ளாத தினாலேதான்.
எனக்கும் என் சிநேகிதனுக்கும் நேற்று பெரிய சண்டையாகப் போனது!” என்றான்.
“என்னடா விடயம்?” என்றேன். “ஒரு நூறு ரூபா பணம் அதை யார் எடுத்துக்கொள்வது என்பதினாலே எங்களுக்குள்ளே தகராறு” என்றான்.
“இதிலே என்னப்பா தகராறு பணம் யாருடையதோ அவர்கள் எடுத்துக்க வேண்டியதுதானே!” என்றேன்.
“அது யாருடையது என்றது எனக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது! அதனாலே தான் சார்” தகராறு என்கிறான்.
தென்கச்சி.கோ.சுவாமிநாதன்


