கடவுள் நாஸ்திகத்தை ஏற்பான் அதர்மத்தை ஒருபோதும் ஏற்கான்
Share
நாஸ்திகம் என்பது கடவுள் மறுப்புக் கொள்கையை உடையது.
அதாவது கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டை உடையவர்களை நாஸ்திகர்கள் என்பர்.
இங்கு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடைய ஆஸ்திகர்களை எந்தளவு தூரம் கடவுள் நேசிக்கின்றாரோ அந்தளவு தூரம் கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்களையும் கடவுள் நேசிக்கின்றான்.
ஆக, இங்கு அறத்தின் பாற்பட்டே கடவுளின் தீர்ப்பு அமைகிறது.
ஆம், கடவுள் ஒருபோதும் மனிதன் தன்னை வழிபட வேண்டும் என்று கட்டளையிட்டது கிடையாது.
ஆனால், மனிதன் மனுதர்மத்தைப் பின்பற்ற வேண்டும். புண்ணியம் – பாவம் எனும் நல்வினை – தீவினைப் பயனை உணர்ந்து மனித வாழ்வில் அறத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இறைக்கொள்கை.
ஆம், நாஸ்திகனாக இருப்பதும் ஆஸ்திகனுக்கு அவலத்தை ஏற்படுத்துவதும் ஒன்ற ல்ல.
அதாவது, நாஸ்திகராக இருப்பதும் ஆஸ்திகராக இருப்பதும் அவரவர் விருப்பமும் கொள்கையுமாகும்.
இங்கு ஆஸ்திகனுக்கு எதிராக நாஸ்திகரோ, நாஸ்திகருக்கு எதிராக ஆஸ்திகரோ தீங்கிழைப்பது அறத்தின்பாற்பட்டதன்று.
உண்மை. அறத்தின் பாற்படாததை இறைவன் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டான்.
ஆக, அறத்தைப் பின்பற்றி கடவுளுக்கு நன்றியுடையவர்களாக நாம் இருக்க வேண்டும்.
இங்குதான் “அறம்” பற்றி பலரும் கருசனை கொள்ளாமல் இருக்கின்றனர்.
உதாரணத்துக்கு தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகம் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டதாகத் தன்னைக் காட்டிக் கொண்டது.
அறிஞர் அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி என்ற வரிசையில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வரை தங்களைக் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களாகக் காட்டிக் கொண்டனர்.
ஆயினும் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடவுள் மறுப்புக் கொள்கையை இந்து மத எதிர்ப்பாக – சனாதன தர்மத்துக்கு விரோதமாகச் செயற்படுவது எனப் பொருள்படுத்திக் கொண்டனர்.
அதேநேரம் ஏனைய சமயங்களுக்கு அவர்கள் உயர் மதிப்புக் கொடுத்ததுடன் அச்சமயங்கள் மீது நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.
இங்குதான் நாஸ்திகம் விலகி அதர்மம் வெளிப்படுகிறது. ஆம், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதைத் தடுத்து முருக பக்தர்களை வேதனைப்படுத்திய மு.க.ஸ்டாலின் இப்போது தன் சொந்தத் தொகுதியிலேயே தோற்று, ஒரு முதலமைச்சராக இருந்த ஒருவர் தன் தொகுதியில் தோற்ற வரலாற்றைத் தனதாக்கியுள்ளார்.
இதுதான் அதர்மத்துக்கான கடவுளின் பாடமும் படிப்பினையுமாகும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


