இன்று ஒரு தகவல்
Share
அதிர்ச்சி வைத்தியம்
ஒரு சீடன். வெளியூர் புறப்படுவதற்குத் தயாராக இருந்தான். ரொம்ப தூரம் போகப் போகிறான்.
திரும்பி வர நாளாகும். புறப்படுவதற்கான ஆயத்த வேலைகளிலே ஈடுபட்டிருந்தான்.
அந்த சமயம் பார்த்து இன்னொரு சீடன் அவனிடம் வந்தான்.
“நம் குரு உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னார். வா!” என்று கூப்பிட்டான்.
இவன் உடனே புறப்பட்டுப் போனான். குருநாதரைப் பார்த்தான் அவர் காலிலே விழுந்து வணங்கினான்.
வணங்கிவிட்டு எழுந்தான். அவ்வளவுதான். குரு ஏதாவது உபதேசம் செய்வார் என்று எதிர்பார்த்தான். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? குரு அவனுக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்தார்.
எதிர்பாராமல் இந்த அடியை வாங்கியதும் அந்தச் சீடன் அதிர்ந்து போய் விட்டான்.
பக்கத்திலே இருந்த மற்ற சீடர்களும் திகைத்துப் போய் நின்று விட்டார்கள்.
அடி வாங்கிய சீடனுக்கு மனதுக்குள்ளே குழப்பம்.
“நாம் என்ன தவறு செய்தோம். புறப்படும் நேரத்திலே இப்படி குருவிடம் அடி வாங்குவதுபோல ஆகிவிட்டதே!” என்று நினைத்து மனதுக்குள்ளே ரொம்ப வேதனைப்பட்டான். கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு குரு நாதரிடமேயே கேட்டு விட்டான்.
“சுவாமி! நான் என்ன தவறு செய்தேன்! என்னை இப்படி எதிர்த்து அடித்து விட்டீர்களே! ஒரு வார்த்தைகூட உங்களை எதிர்த்து நான் பேசியதில்லையே!
இவ்வளவு காலமாக உங்கள் விருப்பத்துக்கு விரோதமாக ஒன்றும் கூட நான் செய்ததில்லையே! வந்ததும் வராததுமாக ஒன்றுமே சொல்லாமல் என்னை அடித்து விட்டீர்களே! குருவே! நான் செய்த குற்றம்தான் என்ன?” என்று கண்ணீரோடு பரிதாபமாக கேட்டானாம் அந்தச் சீடன்.
ஆனால் அந்த குரு முகத்திலே கொஞ்சம்கூட கோபம் இல்லை! அவர் சிரித்துக்கொண்டே நின்று கொண்டிருந்தாராம. அதன் பிறகு சொன்னாராம்!
“என் அருமைச் சீடனே! நீ ஒரு தவறும் செய்யவில்லை. நான் உன்னை அடித்தது. நீ ஏதோ தவறு செய்துவிட்டாய் என்பதற்காக அல்ல! நீண்ட பயணம் போகப் போகிறாய். ஞாபகமாக ஏதாவது கொடுத்தனுப்ப வேண்டாமா? நீ ஞானம் பெற்ற பிறகுதான் திரும்பி வரப்போகிறது எனக்குத் தெரியும்.
அதற்குப் பிறகு உன்னை அடிக்க முடியுமா? அதனாலே இப்போது கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். அப்போதைக்கு இப்போதே அடித்து விட்டேன். அவ்வளவுதான்… வேறு ஒன்றுமில்லை!” என்றாராம்.
குரு சிரித்துக்கொண்டே இப்படிச் சொன்னார். இருந்தாலும் இதுவும் ஒரு உபதேசம்தான்.
அதிர்ச்சிகளாலே ஒருவழிதான். ஜென் வழி! விழிப்படைய வைக்கிறதும் பெரும்பாலும் அதிர்ச்சியின் மூலமாகவே ஞான தரிசனத்தை அருள்கிறவர்கள் ஜென் குருமார்கள்.
நம் ‘தியானம்” தான் ‘ஜென்”. இந்தியாவிலே இருந்து இது சீனாவுக்குப் போய் கொஞ்சம் பேர்மாறி வளம் பெற்று ஜப்பானிலே ‘ஜென்” ஆகி வளர்ந்திருக்கு! அவ்வளவுதான்.
‘ஜென்” என்பது தியானம். எதை நினைத்தும் தியானிப்பதில்லை. எல்லாவற்றிலும் இருக்கிறதாகச் சொல்கிறது ‘ஜென்”! தியானம்.
பேசுவது, இருக்கிறது, நடக்கிறது, சாப்பிடுவது, சிரிக்கிறது, தூங்குகிறது, தொழில் செய்வது அல்லது சும்மா இருக்கிறது எல்லாமே தியானம் ஜென் ஒரு சுயதரிசனம்!
தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்வதுதான் அது, இல்லாத எதையும் தேடிக் கண்டுபிடிப்பதில்லை! ஜென் மார்க்கத்தைப் பற்றி ஓஷோ என்ன சொல்கிறார் தெரியுமா?
“காணாமல் போன தன் மூக்குக் கண்ணாடி, தன் மூக்கின் மேல் இருப்பதைக் கண்டுகொள்வது போன்றது ஜென்”. என்கிறார்.
நம் ஆள் ஒருவர் இன்னொருவர் முகத்தை ரொம்ப நேரமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“என்ன பார்க்கிறீர்கள்?” என்றார் அவர்.நீங்கள் போட்டிருக்கிறீர்களே மூக்குக் கண்ணாடி அதைத்தான் பார்க்கிறேன்!” என்றார் இவர்.
“நீங்கள் அப்படிப் பார்க்கிறதுக்கு விசேஷ காரணம் ஏதாவது உண்டா?” என்று கேட்டார் அவர்.
“உண்டு!” என்றார் இவர். “என்ன” என்று கேட்டார்.
“நேற்றுக் காணாமல் போன என்னுடைய மூக்குக் கண்ணாடி அது என்றார் இவர்.
தென்கச்சி .கோ .சுவாமிநாதன்


