Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

கனவு கண்டது யார்?

ஒருநாள் காலை நேரம். ஒரு குரு (சுவாங் ட்சு) படுக்கையை விட்டு எழுந்தார்.

உடனே சீடர்களைப் பார்த்து, “எல்லோரும் இப்படி வாருங்கள்” என்றார். எல்லோரும் வந்தார்கள் வேகமாக!

“என்ன வேண்டும் உங்களுக்கு” என்ற மாதிரி எல்லோரும் பய பக்தியோடு குருவைப் பார்த்தார்கள்.

குரு அந்த சீடர்களைப் பார்த்து “இதோ பாருங்கள். இப்போது நான் ஒரு சிக்கலான விவகாரத்திலே மாட்டிக்கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் தீர்த்து வைத்தால் நல்லது!” என்றார் குருநாதர்.

சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன இது – இவர் இப்படி சொல்கிறார். நமக்கு உள்ள எல்லா விவகாரங்களையும் தீர்த்து வைக்கிறவர் நம் குருநாதர். அவருடைய விவகாரத்தை நாம் தீர்த்து வைக்கிறதா. ஆச்சரியமாக இருக்குதே.

குருநாதருக்கே சிக்கலா ?” என்று யோசித்தார்கள்,இருந்தாலும் ரொம்பப் பணிவாக கேட்டார்கள்.

“சுவாமி, உங்களுக்கே சிக்கலா? இந்த உலகத்து சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் அப்பாற்பட்டவர் அல்லவா தாங்கள்? அப்படிப்பட்ட உங்களுக்கு சிக்கல் என்றால் அது எப்படி?” என்றார்கள்.

“எனக்கு ஏற்பட்டிருக்கின்ற சிக்கல் அவ்வளவு பெரிது. ரொம்பப் பெரிய விவகாரம் அது?” என்றார் குரு.

இவர் ‘கொஞ்சம் விபரமாக சொல்லுங்கள்!” என்றார். இப்போது அந்த குரு விபரத்தை சொன்னார்.

“அதாவது நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன்.

அந்தக் கனவிலே நான் ஒரு பட்டாம்பூச்சியாக மாறிவிட்டேன். அப்படி மாறி ஒவ்வொரு மலராகப் பறந்து போய் அமர்ந்து தேன் சாப்பிட்டேன்!” என்றார்.

சீடர்கள் இதைக் கேட்டதும் ரொம்பத் திகைத்துப் போய் விட்டார்கள்.

“என்ன இது ஒரு பெரிய பிரச்சனையா? ஒரு சாதாரணக் கனவு கண்டதற்காகவா இந்த காலை வேளையிலே நம்மையெல்லாம் குருநாதர் இவ்வளவு அவசரமாக கூப்பிட்டிருக்கிறார்!” என்று நினைத்தார்கள் .

“இதிலே என்ன சிக்கல் சுவாமி , கனவு என்கிறது எல்லோருக்கும் வரத்தானே செய்யும்!” என்றார் ஒரு சீடர்.

“சீடர்களே! பிரச்சினை அது இல்லை , நான் இன்றைக்கு காலையிலே கண் முழித்துப் பார்த்தப்போது, நான் நானாக மறுபடியும் மாறிவிட்டேன் என்பதைத் தெரிந்து கொண்டேன். இப்போது இதிலே சிக்கல் என்ன என்றால், இப்போது அந்தப் பட்டாம் பூச்சிதான் நானாக ஆகிவிட்டதாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறதுதான்.

ஒரு மனிதன் பட்டாம்பூச்சியாக ஆகிறதாக கனவு காண முடியும்போது அந்தப் பட்டாம்பூச்சியும் மனிதனாக ஆகிறதாக கனவுகாண முடியும் இல்லையா? இப்போது எனக்கு யதார்த்த நிலை தெரிய வேண்டும்.

எது நிஜம் என்று தெரிய வேண்டும். நேற்று இரவு நான் கண்டது கனவா? அல்லது இது பட்டாம்பூச்சி கண்டுகொண்டிருக்கின்ற கனவா?” இது தான் குரு கேட்ட கேள்வி?

இதைக் கேட்டதும் சீடர்கள் ரொம்பக் குழம்பிப் போய் விட்டார்கள்.

“சுவாமி… இது வரைக்கும் நாங்கள் தூங்கும்போது பார்ப்பது கனவு என்றும் முழித்துக்கொண்டிருக்கிறப்போது பார்க்கிறது நனவு என்றும் நம்பிக்கொண்டிருந்தோம்.

இப்போது எங்களை நீங்கள் குழப்பி விட்டீர்கள் , இதற்குப் பதில் சொல்ல எங்களுக்கு சக்தி இல்லை!” என்று சொல்லிவிட்டார்கள்! அதன்பின்பு அந்த குரு சொன்னார்.

நினைவு தான் முக்கிய அம்சம் – முடிவுக் கட்டம் என்றால் பகலின் நினைவுகளை விட இரவின் கனவுகளே ரொம்பவும் உண்மை. ஒருவன் தூங்கப் போனால்,

தூங்கிக்கொண்டே இருந்தால் அவன் காணும் கனவு பொய் என்பதை அவன் உணர மாட்டான். ஒவ்வொரு கனவும் காணும் போது ரொம்பவும் உண்மையாகத்தான் தெரியுது.

ஒரு கனவுகூட உண்மை இல்லை என்று கனவிலே தோன்றுவதே இல்லை!” என்றார் குரு. “அகில வாழ்வு அத்தனையும் சொற்பனம் கண்டாய்” என்கிறார் தாயுமானவர்.

ஆகையினாலே நம் கனவிலேயிருந்த நாம் என்றைக்கு முழிக்கப் போகிறோம் என்பது தான் முக்கியம், ஒருவர் வந்தார். காலிலே கட்டோடு வந்தார். “என்னங்க காலிலே கட்டு?” என்றேன்.

“நான் நேற்று இரவு தூக்கத்திலே எங்கள் வீட்டுக் கூரையிலே ஏணியை சாத்தி வைத்து இறங்கியபோது வழுக்கி விழுந்து காலை உடைத்துக்கொண்டேன்” என்றார்.

“உங்கள் வீட்டிலே தான் ஏணியே கிடையாதே சார்!” என்றேன்.

“உண்மை தான் சார். நான் கீழே விழுந்து விழித்துக் கொண்ட பின்பு தானே ஏணி இல்லை என்று எனக்கு ஞாபகம் வந்தது!” என்றார்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link