Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

தலையின் விலை

அசோக மன்னர் வந்துகொண்டிருக்கிறார். அவருடைய ஆலோசகர்கள் எல்லாம் பக்கத்திலே வந்துகொண்டிருக்கிறார்கள்.
அந்த சமயத்திலே எதிரிலே ஒரு புத்த பிக்கு வந்தார். அசோகர் பார்த்தார்.


ஓடிப் போய் அவர் காலில் விழுந்து வணங்கினார். அசோக மன்னரின் தலை அந்த புத்தத் துறவியின் பாதத்திலே பட்டது.


பக்கத்திலே நின்றுகொண்டிருந்த அமைச்சருக்கு இது ரொம்ப சங்கடமாகிப் போனது ரொம்ப வருத்தப்பட்டார். நம் அசோகச் சக்கரவர்த்தி எப்பேர்பட்டவர்.


தலை ஒரு சன்னியாசியின் பாதத்திலே படுவதா? என்று நினைத்து ரொம்பக் கவலைப்பட்டார்.
அரண்மனைக்குத் திரும்பியதும் அமைச்சர் மெதுவாக ஆரம்பித்தார்.


அரசே! எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு!” என்றார். “எதற்கு?” என்றார் மன்னர்.
“அசோகச் சக்கரவர்த்தியின் சிரம் மதிப்புமிக்க ஒன்று. அது ஒரு சன்னியாசியின் காலிலே படுவதா?” என்றார்.


அசோகர் பதில் சொல்லவில்லை. சிரித்தார். போய் விட்டார். அதன்பின் ஒரு சரியான சந்தர்ப்பத்துக்காகத் காத்துக்கொண்டிருந்தார்.
ஒருநாள் அமைச்சரைக் கூப்பிட்டார்.


“எனக்கு மூன்று சிரங்கள். அதாவது மூன்று தலைகள் வேண்டும்!” என்றார்.


“சொல்லுங்கள், கொண்டு வருகிறேன்!” அமைச்சர். அசோகர் சொன்னார். “முதலில் ஒரு ஆட்டின் தலை இரண்டாவது ஒரு புலியின் தலை. மூன்றாவது ஒரு மனிதனின் தலை” இதுதான் அசோகர் கேட்டது.

“எங்கேயிருந்தாலும் கொண்டு வாருங்கள்” என்றார்.


அமைச்சர் புறப்பட்டார். ஆட்டுத் தலை, புலித்தலை கிடைத்து விட்டது. அப்புறமாக ஒரு சுடுகாட்டுக்குப் போய் ஒரு மனிதத் தலையும் சேகரம் செய்து கொண்டு ராஜாவிடம் வந்து சேர்ந்தார்.


அரசே! உங்கள் ஆணைப்படி மூன்று சிரங்களையும் கொண்டு வந்திருக்கிறேன்” என்றார்.


அசோகர் பார்த்தார். “ரொம்ப நல்லது! இப்போது இது மூன்றையும் எடுத்துக்கொண்டு போய் சந்தையிலே விற்றுவிட்டு வாருங்கள்” என்றார். அமைச்சர் அவைகளை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போனார்.


முதலிலே ஆட்டுத் தலை விற்றுப் போனது. நல்ல விலை கொடுத்து வாங்கிக்கொண்டுப் போய்விட்டார்கள்!


அடுத்தபடியாக புலித்தலையை ஒருவர் வாங்கிக்கொண்டார். படம் செய்து வீட்டிலே மாட்டி வைக்கலாமே என்று நினைத்து வாங்கிக் கொண்டுப் போய்விட்டார்.


மனிதத் தலையை மட்டும் வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. எல்லோரும் பார்த்துவிட்டு விலகி விலகிப் போய்விட்டார்கள்!

அமைச்சர் திரும்பி வந்தார். “அரசே! இந்தத் தலையை மட்டும் யாரும் வாங்க மாட்டோம் என்கிறார்கள்!” என்றார்.


“பரவாயில்லை! இனாமாகவே கொடுத்து விடுங்கள்” என்றார். அமைச்சர் மறுபடியும் சந்தைக்குப் போனார்.


“இலவசமாகத் தருகிறேன். இதை வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். அப்பவும் அதை யாரும் வாங்கிக்க மாட்டோம் என்றுவிட்டார்கள்.
மறுபடியும் திரும்பி வந்து மன்னரிடம் விபரத்தைச் சொன்னார்.


இப்போது மன்னர் சொன்னார்: ‘அமைச்சரே! உயிர் இருக்கின்ற வரைக்கும் தான் இந்தத் தலைக்கு மதிப்பு. ஜீவன் போன பிறகு அதன் மதிப்பும் போய்விடுது.


ஆகையினாலே மதிப்பு இருக்கும் போதே பெரியவர்கள் பாதம் பணிந்து அந்தப் புனிதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.


பணிவு என்பது வேறு. அடிமைத்தனம் என்பது வேறு பெரியவர்களைப் பணிவது நமக்குப் பெருமை தரக்கூடியது.


இதை மனதிலே வைத்துக்கொண்டு எப்போது காலிலே விழ வேண்டும், எப்போது காலிலே விழக்கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒரு சாதரண ஆள் நடந்து வந்துகொண்டிருந்தார்.


எதிரிலே வந்த ஒரு பெரிய மனிதன் ஓடிப் போய் அவர் காலிலே விழுந்து தன் தலையை அவர் பாதத்திலே கொண்டு போய் வைத்தார் கொஞ்ச நேரம் கழித்து எழுந்து வந்துவிட்டார்.


வந்த பிறகு இவரைக் கேட்டேன்.


“ஏன் திடீர் என்று ஓடிப் போய் அந்த ஆள் காலிலே விழுந்தீர்கள்” என்றேன்.


“அவர் போட்டிருக்கிறது என்னோட காணாமப் போன செருப்பா என்று கண்டுபிடிப்பதற்காக அப்படி விழுந்தேன்!” என்றான்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link