இன்று ஒரு தகவல்
Share
அன்பும் ஆணவமும்
ஒரு பெரிய மா மரம் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. அதிலே நிறைய பூக்கள், கனிகள், பறவைகள். ஒரு சின்னப் பையன் அந்த மரத்தடியிலே விளையாடுவது வழக்கம்.
அந்த மரத்துக்கு அந்தப் பையன் மேலே ஒரு பாசம் உண்டாக ஆரம்பித்து விட்டது. பையன் அந்த மரத்திலே உள்ள பூக்களைப் பறிக்க வேண்டும், பழங்களைப் பறிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காகவே அந்த மரம் தன்னுடைய கிளைகளை வளைத்து அவனுக்கு எட்டுகிற அளவுக்குத் தலை சாய்த்தது. பையன் பூக்களைப் பறித்தான். மரம் சந்தோஷப்பட்டது.
மரம் அன்பின் அடையாளம். அதனாலே அது கொடுப்பதில் சந்தோஷப்பட்டது. மனிதன் ஆணவத்தின் அடையாளம். அதனால் இவன் பறிப்பதில் சந்தோஷப்பட்டான்.
பையன் வளர்ந்தான். அந்த மரத்தின் மடியிலே படுத்தும் தூங்கினான். பூக்களைப் பறித்து மலர்க்கிரீடம் செய்து தலையிலே சூடிக்கொண்டான். பழங்களை பறித்து சாப்பிட்டான். அதைப் பார்த்து அந்த மரம் சந்தோஷப்பட்டது. கொஞ்ச நாளானது. பையன் இன்னும் கொஞ்சம் பெரியவனாக ஆனான், அந்த மரத்தில் ஏறி கிளையிலே உட்கார்ந்து ஊஞ்சலாட ஆரம்பித்தான்.
அவனுக்கு சௌகரியத்தைக் கொடுப்பதில் மரத்துக்கு ஆனந்தம். மரத்துக்கு அசௌகரியத்தைக் கொடுப்பதில் அவனுக்கு ஆனந்தம். இது அன்புக்கும் ஆணவத்துக்கும் உள்ள வித்தியாசம். பையன் இன்னும் கொஞ்சம் வளர்ந்தான். அவனுக்கு கடமை, இலட்சியம் எல்லாம் வந்து சேர்ந்தது. படித்து பரீட்சை எழுதி சித்தியடைய வேண்டியிருந்தது.
ஆனால், மரம் இவனுக்காக காத்துக்கொண்டிருக்கு. இவன் உலக விடயங்களிலே மூழ்கிவிட்டான். தற்செயலாக ஒரு நாள் அந்தப் பக்கமாக போனான்.
மரம் அவனைப் பார்த்தது. மறந்துவிட்டாயா? என்னை, நான் உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தேன். இவன் பார்த்தான். நீ என்ன வைத்திருக்கிறாய், நான் உன்னிடம் ஏன் வரவேண்டும்!” உன்னிடம் பணம் இருக்கிறதா? சொல், வருகிறேன்! என்றான். ஏனென்றால் நான் இப்போது பணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கேன் என்றான்.
“உனக்குப் பணம்தானே வேண்டும் என்னுடைய பழங்களைப் பறித்துக்கொள். அதை விற்பனை செய். பணம் கிடைக்கும்!” என்றது மரம். உடனே இவன் மரத்திலே ஏறினான். பழங்களைப் பறித்தானபழுக்காத காய்களையும் பறித்து விட்டான். தன்னோட கிளை கொம்புகள் உடைந்தால்க்கூட அதற்காக அந்த மரம் கவலைப்பட வில்லை. சந்தோஷப்பட்டது. இவன் பழங்களைப் பொறுக்கிக்கொண்டு அந்த மரத்திற்கு நன்றிகூடச் சொல்லாமல் அவன் போய் விட்டான்.
அதற்கு பிறகு அந்தப் பக்கமே திரும்பவில்லை. பணம் சம்பாதிக்கிறதிலேயே குறியாக இருந்தான். மரத்துக்கு மறுபடியும் வருத்தம். ‘அவன் வரலையே என்று! பல வருடம் கழித்து வந்தான். “வா மகனே.. என்னை வந்து கட்டிப் பிடித்துக்கொள்!” என்றது அந்த மரம்.
“நான் இன்னும் சின்னப் பிள்ளையா? உன்னை வந்து கட்டிப் பிடிக்க!” என்றான் அவன். “நான் இப்போது ஒரு வீடு கட்டப் போகிறேன். அதற்கு உன்னாலே உதவ முடியுமா?” என்றான். “என்னுடைய கிளைகளை வெட்டிக்கொள்!” என்றது மரம். கொஞ்ச நேரத்திலே மரத்தை மொட்டை அடித்து விட்டான். மறுபடியும் கொஞ்சகாலம் கழித்து அந்த மனிதன் வயசாகிக் கிழவனாகி வந்தான்.
“நான் தூரதேசங்களுக்குப் போய் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் பிரயாணம் செய்ய ஒரு படகு தேவை. அதற்கு நீ உதவ முடியுமா?” என்றான்.“அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. என் அடி மரத்தை வெட்டிக்கொள்!” என்றது மரம். அவன் வெட்டினான். படகு செய்தான். போய் விட்டான். இனிமே திரும்பி வருவானோ வரமாட்டானோ தெரியாது. ஆனால் இந்த அடிமரம் அவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.
ஏனென்றால் இது அன்பின் அடையாளம். அவன் ஆணவத்தின் அடையாளம். அன்பு கொடுப்பதற்குத்தான் ஆசைப்படும். ஆணவம் வாங்குவதற்குத்தான் ஆசைப்படும்.
இப்படி ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் ஒரு பேரறிஞர் (ஓஷோ). நம் ஆள் ஒருவன், கடல் கடந்து போயிருக்கின்ற என் சிநேகிதன் வரப்போகிறான். அவனுக்காக இந்தக் கடற்கரையிலே காத்துக்கொண்டிருக்கிறேன் என்றான். “அவ்வளவு பிரியமா அவன் மேலே” என்றான். “அப்படி இல்லைங்க அவன் போகும்போது நான் இங்கே கட்டி வைத்திருந்த என்னுடைய படகை கடத்திக்கொண்டுப் போய்விட்டான்.
திரும்ப வந்ததும் அவனைச் கொஞ்சம் கவனிக்க வேண்டும் அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
தென்கச்சி கோ.சுவாமிநாதன்


