இன்று ஒரு தகவல்
Share
நிரந்தர ஏதிரிகள்
ஒரு நண்பன் எதிரியாக ஆகிவிடுறது சகஜம், எதிரி நண்பனாக ஆகுறதும் சகஜம். நேற்று வரைக்கும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவன் இன்றைக்குத் திடீர் என்று பேச்சை நிறுத்திக் கொள்வான். இன்றைக்கு வரைக்கும் விரோதியாக இருந்தவன் நாளைக்குத் திடீர் என்று வந்து ஒட்டிக் கொண்டு நண்பனாகி விடுவான். இது சகஜமான ஒரு விடயம்.
இப்படி இருக்கின்றபோது தமக்கு ‘நிரந்தரமான எதிரி என்று யாராவது உண்டா” என்று கேட்டால் ‘உண்டு” என்று சொல்கிறார்கள் பெரியவர்கள்.(சாய்பாபா)
நிரந்தர எதிரி என்பதைத்தான் ‘நித்ய சத்ரு” என்கிறார்கள். அந்த ‘நித்யசத்ரு” யார் என்று கேட்டால் ஆசைதான் அது என்று சொல்கிறார்கள்.
ஆசைகள் இருக்க வேண்டியதுதான், ஆனால் அதெல்லாம் ஒரு கட்டுக்குள்ளே இருக்க வேண்டும். ஆசை அளவுக்கு மீறும் போகும் போது மனிதனும் பாதை மாறிப் போக வேண்டியதாகிப்போய்விடுது.
தவறான ஆசை-துராசை! அளவுக்கு மீறிய ஆசை-பேராசை! இது மனிதனைக் கீழே இறக்கிவிட்டு விடும்!
நாம் சாதாரணமாக எதை எதையெல்லாம் துக்கம், வருத்தம் என்று நினைக்கின்றோமோ அதெல்லாம் அப்படி இல்லை என்கிறார்கள்.
மனிதனுடைய துக்கத்துக்குக் காரணம் என்ன? ஆசைகள் நிறைவேற வில்லை என்றதினாலே எழுந்த வேதனையா? முயற்சி செய்த காரியம் முடியாமல் போச்சே என்றதினாலே ஏற்பட்ட வருத்தமா? தேர்விலே வெற்றி கிடைக்கவில்லை என்றதினாலே ஏற்பட்ட சோகமா? பணம் சேர்க்க முடியவில்லை, பங்களா வாங்க முடியவில்லை என்றதினாலே உண்டான இயலாமை கலந்த துக்கமா? லாட்டரி சீட்டு வாங்கினோம் – முதல் பரிசு விழவில்லையே என்ற வருத்தமா?
இதையெல்லாம் தான் துக்கங்கள் வருத்தங்கள் என்று நாம் நினைக்கிறோம் அது தப்பாம்! இதெல்லாம் துக்கம் இல்லையாம்! தேகாபிமானம்தான் துக்கமாகி உடம்போடு தன்னை இணைத்துப் பார்க்கின்ற அறியாமை இருக்கு பாருங்கள்.
அதுதான் துக்கம்! நான், எனது இந்த இரண்டு வார்த்தை தான் மனிதனுடைய துக்கத்துக்கு காரணம்! ஒன்று அகங்காரம்! இன்னொன்று மகோரம்! ஆசைகள் மனிதனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம் ஆனால் அதுவேதான் மனிதனை துக்கத்திலேயும் ஆழ்த்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இது என்ன அவ்வளவு சுலபமான காரியமா என்று நீங்கள் யோசிக்கலாம். ரயில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு இலட்சம் பேர் அதை எதிர்த்து நின்றாலும் அதை நிறுத்த முடியாது! ஆனால் அந்த எஞ்சினுக்கு உள்ளே இருக்கின்ற ஒரு கருவியை இயக்கினால். பிரேக் போட்டுவிட முடியுது! இலட்சக் கணக்கானவர்கள் சாதிக்க முடியாததை ஒரு சின்ன ‘பிரேக்” சாதித்து விடுகிறது! இதுமாதிரித்தான் மனமும்! மனதுக்கு பிரேக் போட்டால் எல்லா துன்பமும் காணாமல் போய்விடும்!
சூரியனுடைய ஒளியை மேகம் மறைத்து விடுகிறது. இருளை உண்டாக்கி விடுகிறது! ஆனால் காற்று வீசும்போது மேகம் விலகிப் போய் விடுகிறது! மறுபடியும் சூரியன் பிரகாசிக்கிறது.
அதே மாதிரிதான். மனிதனுக்கு உள்ளே சுயப்பிரகாசமாக ஒளிவீசுகிற ஆத்ம தத்துவத்தை ஆசை என்கிற மேகம் சூழ்ந்து விட்டுத் திரை போட்டு மறைக்கிறது! அன்பு என்ற காற்று வீசும்போது அகங்கார, மமகார மேகங்கள் விலகிப் போய் விடுகிறது! ஆத்ம தத்துவத்தின் வெளிச்சம் புலப்படுகிறது!
அதனாலே ego, attachment அதாவது நான், எனது என்கின்ற எண்ணங்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்பது பெரியோர்களுடைய அறிவுரை! இது எந்த அளவுக்கு நமக்கெல்லாம் சாத்தியம் என்பது தெரியவில்லை.
இருந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்லி வைப்போமே! மனிதனுடைய ஆசைகள் எப்படி இருக்கிறது என்று தெரிவதற்காக ஒரு தடவை கடவுள் இறங்கி வந்தாராம். மூன்று மனிதனைப் பார்த்தார். “உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள் தருகிறேன்!” என்றார்.முதல் ஆள் ஒரு துறவி: அவர் கேட்டார்.’எனக்கு சொர்க்கம் வேண்டும்!’ என்று. ‘சரி தருகிறேன்” என்று விட்டார்.அடுத்த ஆள் ஒரு சம்சாரி. அவன் கேட்டான்: “எனக்கு 10 இலட்சம் ரூபா பணம் வேண்டும்!” என்றார். சரி தருகிறேன் என்று விட்டார்.அடுத்த ஆளைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும்” என்றார். அவர் மெதுவாக கிட்ட வந்து கடவுள் காதோடு
“அந்த இரண்டாவது ஆளுக்கு பத்து இலட்சம் பணம் தருகின்றதாக சொன்னாயே… அவனுடைய வீட்டு அட்ரஸை மட்டும் கொடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்!
தென்கச்சி கோ.சுவாமிநாதன்


