இன்று ஒரு தகவல்
Share
கருவியை விழுங்கலம்!
ஒரு டாக்டரிடம் போகிறீர்கள்! வயிறு வலிக்கிறது என்று சொல்கிறீர்கள்! அவர் உங்களை சோதித்துப் பார்க்கிறார்! பார்த்துவிட்டு, ஏதாவது ஒரு மாத்திரையைக் கொடுத்து ‘விழுங்கு!” என்று சொன்னால் விழுங்கி விடுவீர்கள்! மாத்திரைக்குப் பதிலாக டாக்டர் ஒரு ‘தையல் மிஷினை”க் கொடுத்து அதை விழுங்கு என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?
நீங்கள் முழிப்பீர்கள். அல்லது டாக்டரையே சந்தேகமாகப் பார்ப்பீர்கள்!
ஆனால் வருங்காலத்திலே நோயாளி தையல் மிஷினை விழுங்குவது ரொம்ப சர்வ சாதாரணமாக போய்விடும் போல இருக்கு!
என்ன இது- நீங்கள் எல்லாம் என்னையே சந்தேகமாக பார்க்கிறது மாதிரி தெரியுது! சந்தேகப்படாதீர்கள்!
நான் சொல்வது தையல் மிஷின் ரொம்பப் பெரிதாக இருக்காது! சின்னதாக இருக்கும். விழுங்கக் கூடிய அளவிலேதான் இருக்கும். இது துணியைத் தைக்காது. வயிற்றுக்குள்ளே போய் தையல் போடும். இதை நுண்ணிய தையல் இயந்திரம் என்று சொல்லலாம்! ஒரு நோயாளிக்கு வயிற்றிலே தையல் போட வேண்டியிருக்கு என்று வையுங்கள். அவரிடம் இந்த சிறிய கருவியைக் கொடுத்து விழுங்கச் சொல்லுவார்கள். அவர் அதை சரியாக செய்து விடுவார். கருவி உள்ளே போகும். டாக்டர் வெளியிலே இருந்துகொண்டே அதற்கு உத்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார்.
வயிற்றுக்குள்ளே எந்த இடத்திலே தையல் போட வேண்டுமோ அந்த இடத்திலே சரியாக அந்தக் கருவி தையல் போட்டுவிடும். நைலான் நூலாலேயே தையல் போடும்.
பிரிட்டிஷ் டாக்டர்கள் இந்த கருவியை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த கருவியுடைய நீளம் 5 செ.மீற்றர். குறுக்களவு சுமாராக 11 மில்லி மீற்றர், அவ்வளவுதான். கடுமையான வயிற்றுப் புண்.. அல்சர் இதுமாதிரி விடயத்துக்கெல்லாம் வயிற்றுக்குள்ளே தையல் போட வேண்டிய அவசியம் வரும்போது, இது ரொம்ப உபயோகமாக இருக்கும்.
அறுவை சிகிச்சையே தேவையில்லாமல் போய்விடுகிறதே. அது ஒரு பெரிய வசதி இல்லையா?
வயதானவர்களுக்கு வயிற்றுப்புண் வந்து அறுவை சிகிச்சை செய்தால் அது குணமாக அதிக நாளாகும். அவர்களுக்கெல்லாம் இந்தக் கருவி ரொம்ப உபயோகம்!
இந்தத் தையல் கருவியின் நுனியிலே ஒரு அகநோக்குக் கருவி இருக்கும் – endoscope! கண்ணாடி இழையாலே ஆன மெல்லிய குழாய் இது. இதனுடைய வெளி முனையிலேயிருந்து பார்த்தால் வயிற்றுக்குள்ளே உள்ள நிலைமை என்ன, எப்படி என்கிறது தெரிந்துவிடும்!
டாக்டர் இது மூலமாக பார்த்து விடயத்தைத் தெரிந்து கொள்வார். அதன்பின்பு வயிற்றுக்குள்ளே இருக்கிற கருவிக்கு ஆணையிடுவார். உடனே அந்த தையல் கருவி தானாகவே வேலை செய்ய ஆரம்பிக்கும்! வயிற்றுப்புண் உள்ள இடத்திலே இரண்டு பக்கத்திலேயிருந்தும் திசுக்களை உள்ளே இழுத்து, நைலான் நூலைக் கொண்டு, தையல் போட்டுவிடும்.
இதே அடிப்படையிலே இன்னொரு கருவியை தயாரிப்பதற்கும் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களாம்.
ஸ்ரெப்ளர்…பேப்பர் அல்லது புத்தகங்களை சேர்த்து பின் போடுவதற்கு உபயோகப்படுத்துகிறோம். அது மாதிரி ஒரு கருவி.
வயிற்றுக்குள்ளேயே ஒரு சின்ன மருந்துக் குப்பியை கொண்டு போய் தேவையான இடத்திலே வைத்து தைத்து விடுவது அதாவது stapler Pin போடுவது மாதிரி போட்டு விட்டுவிடுவது!
அது அங்கேயே இருந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சம் மருந்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். பல வியாதிகளுக்கு இது உபயோகப்படும்.
ஆகக்கூடிய மாத்திரை விழுங்குவது மாதிரி வருங்காலத்திலே சின்ன சின்ன கருவிகளையெல்லாம் விழுங்குவதற்கு நோயாளிகள் தயாராக இருக்க வேண்டும். அதற்கு பயிற்சி எடுத்துக்கொள்வது மாதிரி.. இப்பல்லாம் சிலபேர் தவறுதலாக சிலதை விழுங்கிவிடுவது உண்டு.
ஒரு பையன், இப்படித்தான் ஒரு நாள், அவங்க குடும்ப டாக்டருக்கு ஃபோன் செய்தான் – ரொம்ப அவசரமாக!
“டாக்டர்… நீங்கள் உடனே புறப்பட்டு எங்கள் வீட்டுக்கு வர வேண்டும்… ரொம்ப அவசரம்… எங்கள் வீட்டு சாப்பாட்டு மேசையிலே நான் வைத்திருந்த சின்ன பென்சிலை எங்கள் அப்பா தவறுதலாக எடுத்து விழுங்கிவிட்டார் டாக்டர்.. உடனே வாருங்கள்! என்றான்.
டாக்டர் உடனே அதற்கான உபகரணங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அதற்குள்ளேயே மறுபடியும் ஃபோன்கால். அதே பையன் தான் பேசினான்: “டாக்டர்! நீங்கள் வரவேண்டியதில்லை. பிரச்சினை தீர்ந்து விட்டது!” என்றான். “எப்படி?” என்று கேட்டார் டாக்டர். “நான் எழுதுவதற்கு வேறு ஒரு பென்சில் கிடைத்து விட்டது!” என்றான் பையன்!
தென்கச்சி கோ.சுவாமிநாதன்


