Type to search

Articles Headlines தரிசனம்

தரிசனம்

Share

யாழ்.போதனா வைத்தியசாலை 4

தரிசனம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்திய சாலைத் தரிசனம் நிறைவுற்றதும் ஏனைய நிறுவனங்கள், அரச அமைப்புகள் தொடர்பில் தரிசனம் வெளிவரும்.

யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பில் எழுதப்படுகின்ற விடயங்கள் பற்றி பலரும் தொடர்பு கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நீங்கள் எழுதுவது முற்றிலும் உண்மை என்பதாகப் பொதுமக்களின் கருத்துக்கள் உள்ளன.

அதேவேளை யாழ். போதனா வைத்தியசாலை என்ற ஒரு பரந்த நிறுவனம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அங்கு பணியாற்றுகின்ற மருத்துவர்கள், இதர பணியாளர்களின் மனங்களைப் பாதிக்கலாம் என்ற கருத்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன.

இங்குதான் தரிசனம் குறித்தான விளக்கத்தை முன்வைக்க வேண்டியுள்ளது.

ஆம், தரிசனத்தின் திரை விலகிய முதல் நாளில் தரிசனம் பற்றிய விளக்கங்களைப் பதிவு செய்திருந்தோம்.

தரிசனம் என்பது எவருக்கும் எதிரானதன்று. தவிர, மற்றவர்களுடைய கருத்துக்களுக்கும் விளக்கங்களுக்கும் உரிய களம் கொடுக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் மிகவும் உறுதியாக உள்ளோம்.

இங்கு யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பிலான தரிசனங்கள், யாருக்கேனும் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்துமாக இருந்தால் அது கண்டு நாம் மனம் வருந்துகின்றோம்.

உண்மையில் யாழ். போதனா வைத்தியசாலை எங்கள் உயிர் காக்கும் உன்னதமான ஆலயம்.

அங்கு கடமையாற்றுகின்ற மருத்துவர்களே கடவுளர்கள். அங்கு பணியாற்றும் துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் ஆலயத்தில் இருக்கக்கூடிய பரிவார மூர்த்திகள்.

வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆலயத்தை வழி நடத்துகின்ற அறம்காவலர்.

ஏனைய நிர்வாகத் தரப்பினர் ஆலயத்திற்கு வருகின்ற அடியார்களுக்கு (நோயாளர்கள்) உரிய கடவுள் தரிசனம் கிடைக்கப்பெற்று சுகத்துடனும் மன ஆரோக்கியத்துடனும் வீடு செல்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்பவர்கள்.

இங்கு ஆலயத்திற்கு வருகின்றவர்கள் அனைவரும் சுகம் பெற்று வீடு செல்வதென்பது நடைமுறைச் சாத்தியமன்று.

சிலர் முத்திப்பேறும் அடைவர். அஃது தவிர்க்க முடியாததே.

ஆயினும் ஒருவரின் இறப்பு என்பது அவரின் உறவுகளுக்கு இழப்பே.

தவிர, அந்த இழப்பு திடீரென ஏற்பட்டதாகவோ அன்றி இளம் வயதில் நடந்து விட்டதாகவோ இருந்தால், அந்த இழப்பை உற்ற உறவுகளால் நிச்சயம் ஜீரணிக்க முடியாது.

இங்கு தான் உயிரிழந்த நோயாளி தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அணுகுமுறையும் அரவணைப்பும் எவ்வாறாக இருந்தது எனப் பார்க்கப்படுகிறது.

உண்மையிலேயே மருத்துவர்களும் இதர மருத்துவ உத்தியோகத்தர்களும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை எனும் போது, விதியை நோவதைத் தவிர வேறு வழியில்லை.

உண்மை. யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பல னின்றி உயிரிழந்தவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலி யோடு கூடிய நன்றி நவிலல் பத்திரிகைகளில் வெளிவருவதைப் பார்த்திருக்கின்றோம்.

அதில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், தேவையான அத்தனை உதவிகளையும் வழங்கிய வைத்திய சாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என மரணித்தவரின் குடும்பத்தினர் வெளிப்படுத்துகின்ற அந்தப் பதிவை எவரும் சாதாரணமாகக் கருதி கடந்து விடக் கூடாது.

மாறாக, அந்த நன்றி கூறல் என்பது யாழ்.போதனா வைத்தியசாலை அளித்த சிகிச்சையை-உயிரைப் பாதுகாக்க அவர்கள் எடுத்த முயற்சியை இதயத்தால் ஆரா திக்கின்ற வார்த்தைகள் என்பதைத் தயவுசெய்து யாழ். போதனா வைத்தியசாலைச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆம், இவ்வாறான நன்றி கூறல்; ஒரு தனியார் வைத்தியசாலைக்குக் கிடைத்திரு க்குமா? என்றால் இல்லவே இல்லை.

தவிர, இவ்வாறு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் இதர பணியாளர்களுக்கும் நன்றி கூறுகின்ற பண்பாட்டை தென்பகுதியிலோ அன்றி உலகின் வேறு எந்த நாடு களிலோ நாம் காண முடியாது.

ஆக, மருத்துவர்களை கடவுளாகவும் அவர்களை உயரிய இடத்திலும் வைத்து ஆராதிக்கின்ற பெருந்தன்மை நம் தமிழ் மக்களிடம் மட்டுமே உண்டு. இந்த உண்மையை யாழ்.போதனா வைத்திய சாலையினர் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இருந்தும் ஒரு குறிப்பிட்ட மருத்துவர்கள்-குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஒரு பகுதி சுகாதாரப் பணியாளர்கள், நோயாளர்களை மதிக்காதவர்களாகவும்-கண்டபாட்டில் ஏசுகின்றவர்களாக இருக்கின்றனர் என்ற இந்த உண்மையை தயவு செய்து சுயநலம் சார்ந்து எவரும் நிராகரித்து விடாதீர்கள்.

தொடரும்…

Previous Article
Next Article

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link