தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 25
திருகோணமலை கன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் ஆலயம் தொடர்பில் எழுந்த சர்ச்சை நீதிமன்றுக்குச் சென்ற போது, பிள்ளையார் ஆலயத்தை அமைப்பதற்கான இடத்தை கன்னியா வெந்நீருற்று வளாகத்தில் ஒதுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டார் என்பதும் அதனை அவர் இலவசமாகவே செய்து முடித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும் நீதிமன்றம் இடத்தை ஒதுக்குவதற்கான தீர்ப்பை வழங்கிய போதிலும் இன்னமும் அங்கு பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் நடை பெறவில்லை.
வெடுக்குநாறி சிவன் ஆலயம்
இதேபோன்று தான் வவுனியா வெடுக்குநாறி மலையில் உள்ள சிவன் ஆலயத்தின் வழிபாட்டிற்கும் தொல்லியல் திணைக்களம் ஊறு விளைவித்தமை யாவரும் அறிந்ததே.
வெடுக்குநாறி மலையானது தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு உட்பட்டதென்ற அடிப்படையில், தொல்லியல் திணைக்களம் அங்கு மூக்கை நுழைத்துள்ளது.
காலாகாலமாக பூசை வழிபாடுகள் இடம்பெற்ற வெடுக்குநாறி மலையில் பொங்கல் செய்து வழிபாடாற்றுவதற்கு தொல்லியல் திணைக்களம் தடைவிதித்தது.
கூடவே வெடுக்குநாறி மலையில் பூசை வழிபாடுகளை நடத்த முற்பட்டவர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.
இங்குள்ள விக்கிரகங்களை இனந்தெரியாதவர்கள் உடைத்தனர். ஏலவே கூறிய குருந்தூர் மலை மற்றும் கன்னியா வெந்நீருற்றுப் போல, வவுனியா வெடுக்குநாறி மலை விவகாரமும் நீதிமன்றுக்குச் சென்றது.
காலாகாலமாக நடந்த பொங்கல் வழிபாடுகளைத் தடுக்க முடியாதெனும் அடிப்படையில் அங்கு பொங்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இருந்தும் நிலத்தில் நெருப்புப் படாதவாறு பொங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளை விதித்த தொல்லியல் திணைக்களம், தன்னை ஒரு சிங்களப் பேரினவாத அமைப்பாகக் காட்டிக் கொண்டது.
எனினும் அப்பகுதி மக்களின் கடும் பிரயத்தனம் காரணமாகவும் சிவபூமி அறக்கட்டளையின் கடும் முயற்சி காரணமாகவும் வெடுக்குநாறி மலையில் தெய்வ விக்கிரகங்கள் மீளவும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஆயினும் அந்த ஆலயத்தின் பூசகர்கள் மீதான வழக்கு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் என்ற இத்தரிசனம் இதுகாலும் சைவ சமயத்திற்கு அந்நியர்களாலும் பெளத்த சிங்களப் பேரினவாதத்தாலும் இழைக்கப்பட்ட அநீதி பற்றி பிரஸ்தாபித்திருந்தது.
ஆனால் ஈழத்தின் சைவசமயம் மதமாற்றிகளாலும் ஆலய பரிபாலன சபைகளாலும் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்து இவ்விடத்தில் பிரஸ்தாபிப்பது கட்டாயமாகிறது.
ஆம், ஈழவளநாடு சிவபூமி எனப் போற்றப்படும் திருநாடு. மிகச்சிறந்த சிவபக்தனாகிய இராவணேஸ்வரன் இந்த நாட்டை ஆட்சி செய்தான் என்பதான விட யங்களை முன்னைய அத்தியாயங்களில் கண்டோம்.
அதேநேரம் கெளதம புத்தபிரான் இந்து சமயத்தவர் என்ற உண்மையையும் நாம் இங்கு கூறியாக வேண்டும். அதாவது பெளத்த மதத்தின் தோற்றுவாய் இந்து மதம் என்பது மறுதலிக்க முடியாத உண்மை.
அதிலும் பெளத்தத்தை ஒரு மதமாக ஆய்வாளர்கள் கருத வில்லை. உண்மையில் பெளத்தம் என்பது ஒரு தத்துவமே. ஆனாலும் ஒரு தத்துவம் மதமாகி விட்டது. அதற்கான மதபீடங்கள் வலிமையுடன் உள்ளன. அதேநேரம் பெளத்த விகாரைகளில் விநாயகர், இலக்குமி, காளி, கிருஷ்ணபரமாத்மா ஆகிய தெய்வங்கள் பரிவாரங்களாக வைக்கப்பட்டு வழிபாடாற்றப்படுகின்றன.
இதற்கும் மேலாக, முருக வழிபாட்டில் பெளத்த சிங்களவர்கள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். கதிர்காமம் முருகன் ஆலயத்தில் பூசை செய்கின்றவர்களைக் கப்புறாளை என்று அழைக்கின்றனர். இவர்கள் சிங்களவர்கள் என்பது இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது.
ஒரு காலத்தில் கதிர்காமக் கந்தன் ஆலய பரிபாலனம் நம் தமிழ் மக்களிடம் இருந்ததாயினும் சில சூழல்கள் காரணமாக கதிர்காமக் கந்தனை சிங்களவர்கள் தத்தெடுத்துக் கொண்டனர்.
இவ்வாறு பெளத்த சிங்களவர்கள் கதிர்காமத்து முருகன் ஆலயத்தை நிர்வகிப்பதென்பது அவர்கள் சைவ வழிபாட்டை அங்கீகரிப்பதாக-ஏற்றுக்கொள்வதாக அமைகிறது.
ஆக, இந்து-பெளத்த மதங்கள் ஒரு நேர்கோட்டில் உள்ளவை. அவை கொல்லாமை, புலால் உண்ணாமை எனும் அறத்தை வலியுறுத்துகின்றன.
பாவபழிகளை இரண்டு சமயங்களும் நம்புகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, ஊழ்வினைப் பயனை ஏற்றுக்கொள்கின்றன.
ஒட்டுமொத்தத்தில் இந்து பெளத்த சமயங்கள் என்பன ஒன்றில் இருந்து ஒன்று விலக முடியாதவை. அதிலும் இரண்டு சமயங்களும் கொண்ட கொள்கைகள் ஒன்றாக உள்ளன.
மேலும் இந்து சமயமோ அன்றிப் பெளத்தமோ மத மாற்றம் பற்றி இம்மியும் சிந்தித்ததில்லை. அவரவர் சமயங்களை அவரவர் பின்பற்றுவதை மேற்குறித்த இரண்டு சமயங்களும் நூறு வீதம் அங்கீகரிக்கின்றன.
அதே நேரம் எம் நாட்டில் உள்ள கிறிஸ்தவமும் இஸ்லாமும் மதமாற்றத்தில் தீவிரம் காட்டுகின்றன. இவற்றின் ஆதிக்கம் சைவ சமயம் என்ற எல்லை கடந்து, பெளத்தத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் கத்தோலிக்கர்களை கிறிஸ்தவ சபைகள் தங்களின் பக்கம் வரவழைக்கின்றனவாயினும் அஃது கொள்கை-கோட்பாடு-நம்பிக்கை சார்ந்த வேறுபாடேயன்றி மற்றும்படி இயேசு பிரானே அவர்களின் வழிபடு தெய்வமாக உள்ளார்.
அவர்களுக்குள் நடக்கின்ற மதமாற்றம் என்பது பிதாவை-சுதனை-பரிசுத்த ஆவியை வழிபாடாற்றுகின்ற வித்தியாசத்தில் மட்டுமே தங்கியுள்ளது.
அதன்காரணமாக கத்தோலிக்க-கிறிஸ்தவ மதங்களுக்குக்கிடையே முரண்பாடுகளோ அன்றி பேதங்களோ ஏற்படுவதில்லை ஏற்படப் போவதுமில்லை. ஆனால் இந்து சமயப் பின்னணியைக் கொண்ட பெளத்தர்கள் எதற்காக சைவ சமயத்துடன் மோது கின்றனர்.
சைவ சமயத்தவர்கள் எதற்காக பெளத்த விகாரைகளை எதிர்க்கின்றனர் என்பது பற்றி ஆராய்வது இங்கு அவசியமான விடயமாகிறது.
தொடரும்…


