Type to search

Articles Headlines தரிசனம்

தரிசனம்

Share

யாழ்.போதனா வைத்தியசாலை 5

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற வெளிநோயாளர்கள் மற்றும் கிளினிக் சிகிச்சையாளர்களைத் தவிர, வைத்தியசாலை விடுதிகளில் தங்குகின்ற நோய்நிலையுடன் வருகின்றவர்கள் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் மிகவும் விழிப்பாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும்.

ஏனெனில் இங்கு தான் நோயாளர்களின் ‘விதி’ தீர்மானிக்கப்படுகிறது.

ஆம், வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளி மயக்க முற்ற நிலையில் அல்லது ஸ்ரெச்சரில் வருகின்ற போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி க்கப்படுகின்றார்.

அதன் காரணமாக அவர் மருத்துவர்களின் உடனடிக் கண்காணிப்புக்கு ஆளாகுவதுடன் அவசரமாக சிகிச்சையும் வழங்கப்படுகின்றது.

இங்குதான் சம்பந்தப்பட்ட நோயாளி உயிர் பிழைப்பதற்கான -சுகமடைவதற்கான விதிக்கு ஆளாகின்றார்.

அதேநேரம் நோயாளி நடந்து சென்றால் அல்லது சற்று உசாராக இருந்து விட்டால், அவ்வளவு தான். அவரை விடுதியில் அனுமதிக்கின்ற முடிவு; அனுமதிப் பிரிவில் இருக்கக்கூடிய மருத்துவர்களால் எடுக்கப்படுகிறது.

இங்கு ஒரு பெருங் குறைபாடு இருந்தது என்பதை அனுபவத்தில் கண்டறிந்த யாம் கூறுவது பொருத்துடையதே.

உண்மை. சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் என் உறவினரான நோயாளி ஒருவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றேன். அனுமதிப் பிரிவில் இருந்த மருத்துவர் எழுந்து நோயாளிக்குக் கிட் டவும் வரவில்லை. பதினைந்து அடி தூரத்தில் இருந்து கொண்டு வெறுப்போடு நோயாளியிடம் கேள்வி கேட்டார்.

பிரஸ்தாப நோயாளி ஒரு தகைமை பெற்ற பொறியியலாளர். தவிர, அவரது குடும்பத்தினர் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லலாம் எனக் கூறியிருந்தனர்.

நான் அதை மறுத்தேன். என்னதான் இருந்தாலும் யாழ்ப்பாணம் போதனா வைத் தியசாலை தான் ஒரே இடம். அங்கு செல்வது தான் பொருத்தம் எனக் கூறினேன். என் கஷ்ட காலமோ அல்லது நோயாளியின் விதியோ தெரியவில்லை அதனை குடும்பத் தினர் ஏற்றுக் கொண்டனர்.

அந்த நம்பிக்கையோடு சென்றபோது தான் அனுமதிப் பிரிவில் கடமையில் இருந்த மருத்துவர் ஏலவே கூறியது போல நடந்து கொண்டார்.

இதற்கு முன்னதாக, நோயாளியை அமர வைத்துக் கொண்டு செல்வதற்கான வீல் செயாரை தேடிப் பெற்றுக் கொள்வதிலேயே பெரும் இடர்பாடாயிற்று.

இது மற்றவர்களுக்குப் பெரிய விடயமாகத் தெரியாவிட்டாலும் அவஸ்தைப் படுகின்ற நோயாளியோடு உடனிருந்த எனக்கு பதற்றமாகவும் ஏக்கமாகவும் இருந்தது.

அங்கு கடமையாற்றும் ஓர் இளம் ஆண் பரிசாரகரிடம் வீல் செயார் எங்கே எடுக்கலாம் எனக் கேட்டேன்.

அந்த இளம் பரிசாரகர் தன்னை அரச பணியாளராகவோ அன்றி தான் ஒரு வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற அரச ஊழியராகவோ இம்மியும் நினை க்காமல், அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்ற பாங்கில் பதிலளித்தார்.

அவரின் பதில் எனக்கு திகைப்பாக இருந்தது. பரவாயில்லை. ஒரு வீல் செயாரைத் தேடி எடுத்து அதில் நோயாளியை இருத்தி உருட்டினேன். அன்று எனக்கு சந்திராஷ்டமம் போலும்.

வீல் செயாரின் சில்லுகள் காற்றை இழந்திருந்தன.

காற்றில்லாத வண்டியை, ஏற்ற இறக்கம் கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை சீமெந்துத் தரையில் நீண்ட தூரம் உருட்டுவதன் கடினம் எத்தகையது என்பது அனுப வப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.

என்ன செய்வது காலம் வகுத்த விதி போல ஒரு பொது மருத்துவ நோயாளி 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

24 ஆம் விடுதி என்பதாலோ என்னவோ அங்கு 24 மணித்தியாலங்கள் தங்கி இருக்க வேண்டியதாயிற்று.

24 மணிநேரம் முடிய 24 ஆம் விடுதியில் இருந்து பொது மருத்துவம் சார்ந்த இரண்டு விடுதிகளுக்கு குறித்த நோயாளி ஓரிரு மணித்தியால இடைவெளியில் மாற்றப்பட்டார்.

அவ்வாறு மாற்றப்பட்டு சில நிமிடங்களில் 60 வயதான அந்த பொறியியலாளரின் உயிர் பிரிந்தது.

சிலவேளை; நோயாளர்களை விடுதியில் அனுமதிக்கின்ற பிரிவில் கடமையாற்றிய மருத்துவர் ஒரு நிமிடம் எழுந்து வந்து, அந்த நோயாளியை பார்த்திருந்தால்-அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருந்தால் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்புக் கிடைத்திருக்குமோ என்று எம் ஏழை மனம் இன்றுவரை எண்ணுகிறது.

குறித்த நோயாளியை 24 ஆம் விடுதியில் அனுமதித்ததில் ஏற்பட்ட தவறு தான் வைத்தியசாலைக்கு சென்றும் மருத்துவ சிகிச்சை எதுவும் கிடைக்காமல் உயிரிழந்து போகின்ற பரிபாத நிலை ஏற்பட்டது என்பது சர்வநிச்சயமான உண்மை.

அதேநேரம் 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க முடியாதா? என வைத்தியசாலை நிர்வாகத்திடம் வினவிய போது, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 8 கட்டில்கள் மட்டுமே உள்ளன. அது முழுமை பெற்று விட்டது. ஆகையால் எதுவும் செய்ய முடியாது எனப்பதில் கிடைத்தது.

இங்குதான் விடுதியில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்களில்; அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் யாவர் என்ற தீர்மானத்தை எடுப்பது தொடர்பில் ஒரு சரியான பொறி முறை தேவையென்ற கருத்தை இங்கு முன்வைக்கின்றோம்.

தொடரும்…

Previous Article
Next Article

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link