தீவகத்திற்கான கடல்பயணத்தை ஒழுங்குபடுத்துவது கட்டாயமானது
Share
தீவகத்தில் நெடுந்தீவு, நயினாதீவு, அனலை தீவு, எழுவைதீவு ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கு கடல் வழிப்பயணம் மட்டுமே உண்டு.
அதிலும் குறித்த இடங்களுக்கான கடல் வழிப்பயணம் என்பது ஆழ்கடலாக இருப்பதனால் ஒவ்வொரு பயணத்தின் போதும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
அதிலும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக் கானவர்கள் பயணம் செய்கின்றனர்.
தவிர, நயினாதீவு நாக விகாரைக்கு வருகின்ற சிங்கள மக்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகிறது.
இது ஒரு புறமிருக்க, நயினாதீவு நாகபூசணி அம்மனின் மகோற்சவம் ஆரம்பித்து விட்டால், பல்லாயிரக்கணக்கான அடியார்கள் நயினாதீவுக்குச் செல்வார்கள்.
தனித்து நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு மட்டுமெ அடியார்கள் செல்கின்றார்கள் என்றால் இல்லை. இந்த நோக்கத்தில் தான் நயினாதீவு நாக விகாரைக்கும் தென்பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் வருவார்கள்.
இதனால் குறிகாட்டுவான் இறங்குதுறையில் பயணிகள் அலை மோதுவர்.
எனினும் கடந்த காலங்களில் நயினாதீவு மகோற்சவ காலத்தில் இறுக்கமான ஒழுங்கு படுத்தல்கள் செய்யப்பட்டிருக்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பக்தர்கள் ஆலயத்திற்குச் செல்லக் கூடியதாக இருக்கும்.
ஆயினும் இந்த வருடம் நயினாதீவு மகோற்சவத்தின் தேர்த்திருவிழாவின் போது ஒழுங்கு கட்டுப்பாடுகள் சீர்குலைந்துஇ நிலைமை எல்லை மீறிப் போனதை அவதானிக்க முடிந்தது.
ஆம், திருவிழாவிற்கு வருகின்ற பக்தர்கள் வரிசையாகச் சென்று படகுகளில் ஏறுவதற்கான ஒழுங்குபடுத்தலில் ஏற்பட்ட சீரின்மைகள் அடியார்கள் மத்தியில் பெரும் அல்லோல கல்லோலமாயிற்று.
இது தவிர நயினை நாகவிகாரைக்குச் செல்கின்றவர்களுக்கு வரிசை கட்டுப்பாடு விதிக்காததன் காரணமாக நிலைமை மோசமானதென்றே கூற வேண்டும்.
இங்கு நாம் இவற்றைப் பிரஸ்தாபிப்பதற்குக் காரணம் 2026 ஆம் ஆண்டில் நயினாதீவு நாகபூசணி அம்மனின் மகோற்சவத்தின் போது ஏற்பட்ட குழப்பங்கள் அதற்கான காரணங்கள் எவ்விதம் அதை ஒழுங்குபடுத்தியிருக்கலாம் என்பன தொடர்பில் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட தரப்புகளும் கூடி இருந்து ஆராய்ந்து அத்தகைய குழப்பங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பது தொடர்பில் முன்னாயத்தங்களை – திட்டமிடல்களை இப்போதே செய்ய வேண்டும்.
இது விடயத்தில் ஏனோதானோ என்ற நிலைமை இருக்குமாயின், கடல் வழிப்பயணம் பேராபத்தாகிவிடும். அப்போது அதற்கான முழுப்பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அதி காரிகளும் உத்தியோகத்தர்களுமே பொறுப்பேற்க வேண்டிவரும்.
ஆகையால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய்வது ஒரு சிறந்த முகாமைத்துவத்தின் பண்பாகும்.
அதேபோல் இத்தகைய மீளாய்வுக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள், கடற்படையினர், ஆலய பரிபாலன சபையினர் ஆகியோரின் பிரசன்னம் மிகவும் முக்கியமானதென்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


