தரிசனம்
Share
இந்து ஆலயங்ககளும் அவற்றின் பரிபாலனமும் 31
நம் எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அதனாலேயே நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
ஆக, எண்ணங்கள்-சிந்தனைகள் எப்போதும் நேரியதாக, பெறுமதி உடையதாக இருக்க வேண்டும்.
மாறாக, எதிர்ச் சிந்தனைகள்-எதிர்மறையான எண்ணங்கள் பாதகமான விளைவைத் தரக்கூடியவை.
எனினும் துரதிஷ்டவசமாக ஈழத்தமிழர்களாகிய எங்களிடம் எதிர் மறைச்சிந்தனைகள் உச்சம் பெற்று விட்டன என்றே கூற வேண்டும். எதைக் கூறினாலும் அதனை எதிர்மனப்பாங்குடன் பார்க்கின்ற மன நிலைக்கு நாம் ஆளாகி விட்டோம்.
இதுவே எங்களிடம் இருக்கக்கூடிய பெரும் பலவீனமாகும்.
இதனாலேயே எந்த நல்ல விடயங்களையும் நாம் நிறைவேற்ற முடியாதவர்களாக உள்ளோம்.
உதாரணத்திற்கு இந்திய மத்திய அரசினால் யாழ்ப்பாண மக்களுக்காக அமைத்துத் தரப்பட்ட திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யார்? நிர்வகிப்பதென்பது தொடர்பில் இன்னமும் ஒரு முடிவுக்கு வரமுடியாதவர்களாக நாம் உள்ளோம்.
அதுபோல யாழ்ப்பாணம் ஆரியகுளம் புனரமைக்கப்பட்டு மிக அழகாக மாற்றப்பட்டிருந்தது. எனினும் அதனை நிறைவேற்றிய யாழ் மாநகர சபை நிர்வாகம் பதவி இழந்தபோது, ஆரியகுளமும் பழைய நிலைக்கு வந்துவிட்டது.
இங்குதான் எங்களிடம் இருக்கக்கூடிய எதிர்ப்பு உணர்வுகள் எங்களை அதலபாதாளத்திற்கு இட்டுச் செல்கிறது எனலாம்.
உண்மை. பலாலி விமான நிலையத்தில் நடேசர் சிலையை நிறுவுவதற்கு அமைச்சர் சந்திரசேகர் தடை செய்வதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.
அதேநேரம் பலாலி விமான நிலையத்தில் நடேசர் சிலையை நிறுவுவதற்கு பெளத்த சாசன அமைச்சு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
இங்குதான் பலாலி விமான நிலையத்தில் நடேசர் சிலையை நிறுவுவதற்கு அமைச்சர் சந்திரசேகர் எதிர்ப்புத் தெரிவிப்பது எதற்காக? என்ற கேள்வி எழும்.
பலாலி விமான நிலையத்தில் நடேசர் சிலையை பிரதிஷ்டை செய்தால், அது மதப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதாக அமைச்சர் சந்திரசேகர் கருத்துரைக்கிறார்.
அப்படியானால், நடேசரை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடியவர்கள் தமிழ் கிறிஸ்தவர்கள் என்பதை சந்திரசேகர் மறைமுகமாகக் கூறுகிறார்.
ஆம், நடேசர் சிலை தொடர்பில் கத்தோலிக்க-கிறிஸ்தவ மக்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை ஆனால், நடேசர் சிலையை பலாலி விமான நிலையத்தில் வைத்தால் கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பார்கள் என்ற மனப் பிரமை அமைச்சர் சந்திர சேகரிடம் ஏற்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் எல்லாவற்றையும் எதிர்க்கின்ற-எல்லாவற்றையும் எதிர் மனப்பாங்குடன் நோக்குகின்ற எங்கள் மனநிலையை அமைச்சர் சந்திரசேகர் அறிந்து கொண்டதால், நடேசர் சிலை குறித்த விடயம் வெளிவந்த போது, அதற்கு மதரீதியாக எதிர்ப்பு ஏற்படலாம் என அவர் ஊகித்துக் கொண்டு கருத்துரைத்தார் என்பதுதான் உண்மை.
இதுபோலவே நயினாதீவுக்குச் செல்கின்ற குறிகட்டுவான் இறங்குதுறையின் சுற்று வட்டத்தில் நிறுவக்கூடிய சிலை தொடர்பிலும் இப்போது பொதுவெளியில் விவாதங்கள் களைகட்டியுள்ளன.
உண்மையில் குறிகட்டுவான் இறங்குதுறை சுற்றுவட்டத்தில் நயினை நாகபூசணி அம்பாளின் சிலையை நிறுவுவது தான் ஏற்புடையது.
அதாவது குறிகட்டுவான் என்பது எங்கள் தமிழர் தாயகத்தின் முக்கிய இடம்.
அதேநேரம் குறிகட்டுவான் இறங்குதுறை என்பது நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குச் செல்வதற்கான ஓர் அடையாளம்.
அதேநேரம் சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகின்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் வரலாற்றுத்தொன்மையும் சிறப்பும் மிக்கது.
ஆம், உலகம் முழுமையிலும் நயினைத்தாயை நினைந்து கொண்டு நம்மவர்கள் வாழ்கினறனர் என்ற மிகப்பெரும் மகத்துவத்திற்குள், இரண்டாம் பேச்சுக்கு இடமில்லாமல், நயினை நாகஇராஜேஸ்வரித் தாயாரின் சிலையை குறிகட்டுவான் சுற்றுவட்டத்தில் நிர்மாணிப்பதுதான் நியாயமானது.
எனினும் எங்களுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருப்பதால், அப்படி… இப்படி… எனக் கடுமையாகச் சிந்தித்து எல்வாற்றையும் இழந்து போகின்றோம்.
இதுதான் எங்களின் யதார்த்தமான நிலைமை.
இதைநாம் இவ்விடத்தில் கூறுவதற்குக் காரணம்; நாம் ஒன்றுபட்டு-எங்கள் இடத்தில்-எங்களுக்காக-குரல் கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. இதனாலேயே எங்கள் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.
இந்த இடத்தில்தான் தையிட்டி விகாரை குறித்த எதிர்ப்புப் பற்றி நாம் அலசி ஆராயவேண்டியவர்களாக உள்ளோம்.
ஆம், தையிட்டி விகாரை சட்டவிரோதமாக அமையப் பெற்றதென்பது உண்மை. அவ்விதம் சட்டவிரோதமாக அமையப்பெற்ற விகாரைக்கான எங்களின் எதிர்ப்பும் நீண்டுவிட்டதென்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.
அதாவது, தையிட்டி விகாரைக்கான எதிர்ப்பு என்பது நீண்டு செல்லும் போது அது எங்கள் தொட ர்பில் பெளத்த சிங்கள மக்களிடம் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தவே செய்யும்.
ஆம், இன்றைய சமகால சூழ்நிலையில் சிங்கள மக்களின் ஆதரவை நாம் ஏதோவொரு வகையில் பெற வேண்டியவர்களாக உள்ளோம். ஆயினும் அது பற்றி நம் சிந்தனை நேரியதாக இல்லை என்பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும்.
தொடரும்…


