குருதியை உறைய வைக்கும் செம்மணி மனிதப் புதைகுழி
Share
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் போது புதிது புதிதாகக் கண்டறியப்படும் மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கைகளை அறியும் போது, குருதி உறைந்து போகிறது. அந்தளவிற்கு செம்மணி மனிதப் புதைகுழி மிகப்பயங்கரமானதாக உள்ளது.
உண்மை. செம்மணியில் மனிதப் புதைகுழி உண்டென கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றிருந்த லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக் தெரிவித்திருந்த நிலையில்,
இப்போது செம்மணியில் இடம்பெறும் அகழ்வில் மனித என்புக் கூடுகள் நாளுக்கு நாள் கிடைத்த வண்ணமுள்ளன.
அதிலும் சிறுவர்களின் என்புக் கூடுகளும் உயிரிழந்தவர்களைக் கூட்டாகப் புதைத்ததை வெளிப்படுத்தும் வகையில் என்புக்கூடுகள் குவியலாகவும் கிடைக்கப் பெறுவது எங்கள் மண்ணில் நடந்த அக்கிரமத்தின் சாட்சியமாகும்.
எனினும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் ஆரம்ப கட்டத்தில் மனித என்புக் கூடுகள் மீட்கப்பட்ட போது, எம்மிடையே இருந்த பதட்டமும் பதகழிப்பும் செம்மணி மனிதப் புதைகுழியை மையப்படுத்திய போராட்டமும் இப்போது தணிந்து விட்டனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
உண்மை. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 20 ஆவது நாள் அகழ்வு நேற்றையதாக இருக்க, இதுவரையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 327 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 311 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வானது சாதாரணமான விடயமன்று. இதனை எந்த வகையிலும் நாம் கடந்து செல்ல முடியாது.
அகழ்வு நடப்பது உண்மை. அதில் என்புக் கூடுகள் மீட்கப்படுவது உண்மை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் யாழ்ப்பாண நீதிவான் நீதி மன்ற நீதிபதி லெனின்குமார் அவர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவது உண்மை.
ஆயினும் குறித்த செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து எவரும் எதிர்பாராத வகையில் என்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருவதானது எங்கள் மண்ணில் நடந்த தமிழின அழிப்பின் ஓர் அங்கம் என்பதை சான்றுப்படுத்துகிறது.
எனவே செம்மணி மனிதப் புதைகுழி நீண்டு செல்கிறது.அகழ்வில் கிடைக்கின்ற என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
ஆகையால் இது விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அல்லது சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அல்லது சர்வதேச நாடுகளின் பிரசன்னம் இருப்பது மிகவும் அவசியம் என்பதை நாம் வலியுறுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.
இருந்தும் இது விடயத்தில் நம்மவர்களின் அமைதி எதற்கானது என்பதுதான் புரியாமல் உள்ளது.
ஆகையால், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதான நடவடிக்கைகள் மிகவும் தேவையானவை.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


