உயர்கல்வி நிறுவனங்கள் தங்களை வெளிப்படுத்த வேண்டும்
Share
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி யுள்ளன.
பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்களைத் தவிர, ஏனைய மாணவர்களில் ஒரு பகுதியினர் இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவர்.
தவிர வசதி படைத்த மாணவர்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளை ஆரம்பித்து விடுவர்.
இங்குதான் உயர்தரப் பரீட்சையில் போதுமான பெறுபேறுகளைப் பெறவுமில்லை தனியார் கல்வி நிறுவனங்களில் இணைந்து கல்வியைத் தொடர்வதற்கு வசதியுமில்லை என்ற நிலைமையுள்ள மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை, பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கென அரச உயர்கல்வி நிறுவனங்கள் அமையப் பெற்றுள்ளன.
உதாரணத்துக்கு தொழில்நுட்பக் கல்லூரி, உயர்தொழில்நுட்ப நிறுவகம், பல்கலைக் கழகக் கல்லூரி, தேசிய கல்வியியல் கல்லூரி, திறந்த பல்கலைக்கழகம் என அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உயர் படிப்புக்கான நிறுவனங்கள் உள்ளன.
எனினும் அந்த நிறுவனங்களில் மேற்கொள்ளக்கூடிய கற்கைநெறிகள் பற்றிய போதிய விளக்கங்கள் மாணவர்களுக்குக் கிடைக்கப் பெறாத காரணத்தால், அந்த வாய்ப்பை நம் மாணவர்கள் இழந்து போகின்றனர்.
உண்மையில் உயர்தரத்தில் சித்தியடையாமல் அல்லது உயர்தரத்தில் கற்காமல் க.பொ.த சாதாரண தரத்துடன் பட்டப்படிப்பை மேற்கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் கூட உண்டு.
ஆம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துக்குட்பட்ட திறந்த பல்கலைக்கழகத்தில் இத்தகைய ஏற்பாடுகள் உள்ளன.
இருந்தும் அதுபற்றி எவரும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறாததன் காரணமாக, அத்தகைய அருமந்த சந்தர்ப்பங்களை நம் மாணவர்கள் இழந்து போகின்றனர்.
எனவே பல்கலைக்கழகத்துக்குப் புறம்பாக பட்டப்படிப்புகளை – தொழில்நுட்பத்துறைகளைத் தெரிவு செய்து, உயர் தகைமைக்குரிய கல்வியை நம் மாணவர்கள் தொடர்வதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட உயர்கல்வி சார் நிறுவனங்கள் பொது வெளியில் விளம்பரப்படுத்தல்களைச் செய்ய வேண்டும்.
இதற்கும் மேலாக, பாடசாலைகளுக்குச் சென்று உயர்தர வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, பட்டப்படிப்பை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை எடுத்துக்கூறுவதன் மூலம் எங்கள் மாணவர் சமூகத்தை ஆளுமை மிக்க சமூகமாக ஆக்க முடியும்.
ஆகையால் இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.


