இன்று ஒரு தகவல்
Share
குருவும் சீடனும்
ஒரு ஊரிலே ஒரு பெரியவர் இருந்தார். அவர் ஒரு குரு அவர் தொடர்ந்து தியானக் கூட்டங்கள் நடத்துவார். அந்தக் கூட்டத்திலே கலந்து கொள்வதற்காக பல ஊர்களிலேயிருந்து சீடர்கள் நிறையப் பேர் வருவார்கள். போவார்கள்.
ஒருநாள் அங்கே கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்திலே சீடர்களிலே ஒருவன் எதையோ திருடிவிட்டான்.
மற்ற சீடர்கள் அதை கவனித்து விட்டார்கள். இவன் அகப்பட்டுக் கொண்டான். கூட்டம் முடிந்த பிறகு இவன் திருடிய விடயத்தை அந்த பெரியவரிடம் போய் சொன்னார்கள்.
அவர் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள்.
ஆனால் அவர் இதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை, கண்டுக்கவே இல்லை! போய் சொன்ன சீடர்களுக்கெல்லாம் ஏமாற்றமாகப் போனது.
“என்ன இது – இவ்வளவு தூரம் நாம் கண்டுபிடித்துப் போய் சொல்கிறோம். அவர் கண்டுக்கவே மாட்டேன் என்கிறாரே! என்று ஒரு மாதிரியாக ஆகிவிட்டார்கள்.
இருந்தாலும் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லிக் கொள்ளவில்லை. பேசாமல் இருந்து விட்டார்கள்.
கொஞ்ச நாள் ஆனது. அதே ஆள் மறுபடியும் ஒரு திருட்டிலே மாட்டிக் கொண்டான்.
சீடர்கள் மறுபடியும் அந்த குருவிடம் விடயத்தைச் சொன்னார்கள். அவர் அப்போதும் வழக்கம்போல சும்மாவே இருந்து விட்டார்.
இவர் இப்படி இருப்பதைப் பார்த்ததும் அந்த சீடர்களுக்குக் கோபம் வந்துவிட்டது.
உடனே அந்த சீடர்கள் எல்லோரும் ஒன்று கூடிப் பேசினார்கள். எல்லோருமாக சேர்ந்து ஒரு விண்ணப்பம் தயார் செய்தார்கள்.
அதை குருநாதரிடம் கொண்டு போய்க் கொடுத்தார்கள்.
அந்த விண்ணப்பத்திலே இவர்கள் என்ன எழுதியிருந்தார்கள் தெரியுமா?
“குருநாதர் அவர்களே! உடனே திருடியவன் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவனை இங்கே சேர்க்கக் கூடாது! இந்த மடத்தை விட்டே அவனைத் துரத்தி விட வேண்டும்.
நீங்கள் அவனை வெளியே அனுப்புங்கள்! இல்லை என்றால் நாங்கள் அத்தனை பேரும் வெளியே போய் விடுகிறோம்! இப்படித்தான் அந்த விண்ணப்பத்திலே எழுதியிருந்தார்கள்.
குரு அந்த விண்ணப்பத்தை வாங்கி படித்துப் பார்த்தார். அதன்பின் அதை எழுதிய அத்தனை பேரையும் கூப்பிட்டார்.
“எல்லாரும் இப்படி வாருங்கள்!” என்றார். வந்தார்கள்!
“இப்படி என் எதிரிலே உட்காருங்கள்!” என்றார். உட்கார்ந்தார்கள். அதன் பின்பு சொன்னார்.
“இதோ பாருங்கள். நீங்கள் எல்லோரும் புத்திசாலிகள். உங்களுக்கு எது நல்லது எது கெட்டது என்கிறது நல்லா தெரியும். நீங்கள் மேற்கொண்டு ஏதாவது படிக்க வேண்டும் என்று நினைத்தால் வேறு எங்கே வேண்டும் என்றாலும் போகலாம்.
அதற்கு நான் தடை சொல்ல மாட்டேன்.
ஆனால் உங்களாலே குற்றம் சாட்டப்பட்ட அவன். எப்படி என்றால் அவனுக்கு எது நல்லது? எது கெட்டது? என்றது எல்லாம் தெரியாது. அதனாலே தான் திருடினான்.
நீங்கள் சொல்வது மாதிரி அவனை அடித்துத் துரத்தி விடுகிறோம் என்று வையுங்கள்.
அவனுக்கு எப்படி நல்லது கெட்டது தெரியும்? அவனுக்கு அதை யார் சொல்லிக் கொடுக்கிறது? அதனாலே இங்கேயே இருக்கட்டும் அதுதான் சரி! இதுக்காக நீங்கள் எல்லோரும் என்னை விட்டுப் போனாலும் சரி.
அவனை நான் விரட்ட மாட்டேன்!” என்றார். இவ்வளவையும், திருடிய அந்தச் சீடன் கேட்டுக்கொண்டே இருந்தான். அவன் கண்களிலே கண்ணீர்.
அப்படியே எழுந்திரித்து வந்தான். குருவின் காலிலே விழுந்தான்.
அவன் கண்ணீரில் அவனது தீமை கழுவப்பட்டது.
சீடர்களுக்குக் குருவின் பெருமை புரிந்தது.
ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்று வையுங்கள். நல்லா படிக்கின்ற பையனுக்குத்தான் பாடம் சொல்லிக் கொடுப்பேன் என்றால் அது ஒரு பெரிய விடயமா?
மோசமாக படிக்கின்றவனையும் மாற்றிக் காட்டுகிறேன் என்பதுதான் பெருமை.
இந்தக் காலத்து குரு ஒருவர் ஒரு ஆசிரமம் வைத்து நடத்திக்கொண்டு வந்தார். நிறைய பேர் தினம் வருவார்கள் போவார்கள். ஒருநாள் ஒருவன் வந்தான்.
அந்த குரு முன்னாடி போய் நின்றான். “ஐயா” என்னை உங்க சீடனாக ஏத்துக்கணும்!” என்றான.
அந்த குரு நிமிர்ந்து பார்த்தார். “உன்னுடைய நோக்கம் என்ன?” என்று கேட்டார். “ஐயா உங்களிடம் கொஞ்ச நாள் இருந்தேன் என்றால் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
அதன் பிறகு வெளியிலே போய் ஒரு நல்ல தொழில் தொடங்கி வாழ்க்கையிலே முன்னுக்கு வரணும் என்பது தான் என்னுடைய நோக்கம்!” என்றான்.
“நீ சொல்றது சரி… ஆனால் உன்னாலே இங்கே நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்ன செய்வாய்?” என்றார் அவர்.
அப்படி ஆச்சு என்றால் என்ன… உங்களை மாதிரியே ஆசிரமம் ஆரம்பித்து அதற்குக் குருவாக இருந்து விட்டுப் போகிறேன்!” என்றான்!
தென்கச்சி.கோ.சுவாமிநாதன்


