தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 28
இலங்கைத் திருநாட்டில் பௌத்தர்களும் சைவர்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழக்கூடிய ஏதுக்கள் இருந்த போதிலும் அஃது சாதித்தியப்படாமல் போனமை துரதிர்ஷ்டமே.
அதேநேரம் பெளத்தர்கள் சைவாலயங்களுக்குச் சென்று வழிபாடாற்றுவது போல, சைவர்களும் பெளத்த விகாரைகளுக்குச் சென்று வழிபாடாற்றுகின்ற நடைமுறைகள் இருந்திருக்குமாயின், இத்தனை தூரம் இன-மத வாதம் தலைவிரித்தாடியிருக்க வாய்ப்பில்லை.
ஆம், பெளத்தர்கள் நல்லூர்க் கந்தனை வழிபட்ட போது, நயினாதீவு நாகபூசணி அம்மனைத் தரிசித்த போது, சைவ மக்கள் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாகவிகாரைக்குச் சென்று வழிபாடாற்றியிருக்க வேண்டும். ஆனால் அதை நம் சைவமக்கள் ஒருபோதும் செய்யவில்லை.
அதேநேரம் கிறிஸ்தவர்கள் சைவாலயங்களுக்குச் செல்வதை-சைவக் கடவுள்களை வழிபடுவதை ஒருபோதும் செய்யவில்லை.
அதிலும் சில கிறிஸ்தவ மதமாற்ற சபைகள் சைவக் கடவுள்களை சாத்தான்கள் என்றும் சைவக் கடவுள்களுக்கு நிவேதனம் செய்த பிரசாதங்களை சாத்தானுக்குப் படைக்கப்பட்டவை என்றும் ஆதலால் அவற்றைத் தாம் உண்ணவில்லை என்றும் கூறி, அதைப் புறந்தள்ளுவதையும் நாம் கண்டுள்ளோம்.
அதிலும் மேற்குறிப்பிட்ட மதமாற்ற சபை சார்ந்த சில அரச அதிகாரிகள் தத்தம் அலுவலகங்களில் இடம் பெறும் சரஸ்வதி பூசை வழிபாடுகளைத் தவிர்ப்பதையும் அலுவலகத்தில் உள்ள சைவக் கடவுள் படங்களை அங்கிருந்து அப்புறப் படுத்தியதுமான தகவல்கள் நம் செவிகளை முட்டிச் சென்று நம் மனங்களை ரணமாக்கியமையும் நடந்தாயின.
இதில் வேடிக்கை என்ன வென்றால், சைவக் கடவுள்களைச் சாத்தான்கள் என்று கூறுபவர்கள் வேறுயாரு மல்லர். இவர்கள் சைவ சமயத்தில் இருந்து மதம் மாறியவர்கள் என்பது தான் இங்கு குறித்துரைக்கப்பட வேண்டிய கசப்பான உண்மை.
ஆம், காலாகாலமாக சைவ சமயத்தில் இருந்தவர்கள்; மதம் மாறியதும் சைவக் கடவுள்களைச் சாத்தான்கள் எனக் கூறுகிறார்கள் என்றால், அவர்களுக்குக் கிடைத்த நிதி உதவி உள்ளிட்ட இதர உதவிகள் எத்துணை என்பது ஊகித்தறியத்தக்கது.
இங்குதான் ஒரு விட யத்தை நாம் கூறியாக வேண்டும். அதாவது கிறிஸ்தவ சமயத்தவர்கள் சைவக் கடவுளை வழிபடுவதற்கும் சைவாலங்களுக்கு வருவதற்கும் தயாரில்லாத போது, சைவ மக்கள் மடுமாதாவின் தேவாலயத்திற்கும் மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கும் மன்னார் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் தேவாலயத்திற்கும் ஊர்காவற்றுறை ஒழுவில் வேளாங்கன்னி மாதாவிடமும் செல்வதைத் தவிர்ப்பதில்லை.
இங்குதான் சைவ சமயத்தவர்களிடம் அறமும் நீதியும் இல்லாமை தெரிகிறது.
ஆம், சைவக் கடவுள்களை வழிபடுகின்ற பெளத்த சிங்களவர்களை மதித்து, விகா ரைகளுக்குச் செல்லாத நம்மிடம் ஒரு பொது நீதி இல்லை என்பதனை இங்கு கூறித்தானாக வேண்டும்.
இதை நாம் கூறும் போது மடுமாதாவையும் மானிப்பாய் அந்தோனியாரையும் வழிபட வேண்டாமென நாம் கூறவில்லை. மாறாக, எங்கள் வழிபடு கடவுளாகிய பிள்ளையார் இருக்கக் கூடிய பெளத்த விகாரைகளுக்கும் நாம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். அதுவே நீதியும் அறமுமாகும்.
பெளத்தர்கள் மதம் மாற்றவில்லை
இலங்கை பெளத்த சிங்கள நாடு என்ற நினைப்பு பெரும்பான்மை இன ஆட்சியாளர்களிடம் இருந்ததாயினும் சைவ சமயத்தவர் உள்ளிட்ட எந்தச் சமயத்தவர்களையும் பெளத்த மதத்திற்கு மாற்றுகின்ற நடவ டிக்கையில் அவர்கள் அறவே ஈடுபடவில்லை.
அதாவது, கிறிஸ்தவ- இஸ்லாமிய மதங்கள் மதமாற்றத்தைப் பிரதானமாகக் கொண்டிருக்க, பெளத்தர்களிடம் மதமாற்றம் என்ற நினைப்பு அறவே இருக்கவில்லை.
இதற்கு, பெளத்தம் இந்து சமயப் பின்னணியைக் கொண்டுள்ளமையும் முக்கிய காரணம் எனக் கூறினால் அது மறுதலிப்புக்குமுரியதல்ல.
தொடரும்…


