Type to search

Articles தரிசனம்

தரிசனம்

Share

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 21

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற இத்தரிசனத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது இரண்டு செய்திகளை அறிய முடிந்தது.

அந்த இரண்டு செய்திகளும் சமயம் சார்ந்தவை. அவை பற்றி இங்கு பிரஸ்தாபிப்பது அவசியமாகிறது எனக் கருதுகிறோம்.

ஆம், குறித்த இத்தரிசனத்தை எழுதிக் கொண்டி ருக்கும் போது, ஓர் அன்பர் என் தொலைபேசிக்கு அழைப்பெடுத்தார். அவரிடம் இனம்புரியாத பதற்றம் இருந்ததை அவரின் குரல் கூறிநின்றது.

என்ன சங்கதி? என வினவினோம். இன்று (21.05.2026) அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோயில் கொடியேற்றம். அங்கு முரண்பாடுகள் நிலவுகின்றன.

சிலவேளைகளில் கொடியேற்றம் தடைப்பட்டுவிடும் நிலைமை உள்ளது. ஒரு கணம் பாருங்கள் என்றார்.

உண்மையில் அந்தச் செய்தி வேதனை தந்தது. ஓர் ஆலயத்தின் கொடியேற்றம் தடைப்படுகின்ற அளவுக்கு எங்கள் ஆலயங்களில் முரண்பாடுகள் உச்சம் பெற்று விட்டனவோ என்பதே அந்தக் கவலைக்கான காரணம்.

இதை என்னுடன் இருந்தவர்களிடம் கூறிய போது, அதில் ஒருவர்; ஏன்? ஒரு முறை வண்ணை வீர மாகாளி அம்மன் ஆலயக் கொடியேற்றம் நடைபெறாமல் தர்க்கம் நடந்தது.

ஈற்றில் யாழ்ப்பாண நீதி மன்றுக்கு விவகாரம் சென்றதையடுத்து, நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் அன்றைய தினம் மாலைப் பொழுதிலேயே கொடி யேற்றம் நடத்த வேண்டியதாயிற்று என்றார்.

என்ன செய்வது, ஒரு காலத்தில் மக்களிடையே ஏற்பட்ட பிணக்குகளை எங்கள் சைவ ஆலயங்கள் தீர்த்து வைத்தன. ஆலயத்தில் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்வதனூடு பிணக்குகள் தீர்க்கப்பட்டன.

இன்று உலகம் முழுமையிலும் இருக்கக்கூடிய நீதிமன்றங்களில் ‘நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை..’ எனச்சத்தியம் செய்கின்ற மரபு சைவ ஆலயங்களில் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்கின்ற எங்கள் சைவ நீதி, உலக நீதியாக மலர்ந்ததன் வெளிப்பாடாகும்.

ஆனால் இன்று அதே சைவாலயங்களை நீதிமன்றங்களில் நிறுத்திய எங்களை அந்த இறைவன் எங்ஙனம் மன்னிப்பான் என்பதோடு இந்த விடயத்தைப் பின்னர் தரிசிக்கலாம்.

இங்கு நாம் கூறிய இரண்டாவது விடயம் ‘பாதபூசை’ பற்றியதாகும்.

ஆம், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் தமிழகத்திலுள்ள திருச்செங்கோடு என்ற இடத்தில் நடக்கும் கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்ற போது, அவருக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூடவே அவருக்குப் பாத பூசை செய்து அவரை வரவேற்றார்கள்.

இப்போது கம்பவாரிதிக்கு நடந்த பாதபூசை தொடர்பில் ஒரு சில சமூக வலைத்தளங்களில் மிக மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம்.

பொதுவில், பாதபூசை என்பது நம் சைவப் பண்பாட்டு மரபில் இருக்கக்கூடிய ஒன்றே.

அத்தகைய பண்பாட்டு மரபுகள் நம்மிடையே உச்சம் பெறாவிடினும் தமிழகத்தில் அந்த நடைமுறை இன்னமும் உயிர்ப்போடு உள்ளது.

இங்கு பாதபூசை என்பது யாருக்குச் செய்யப்படுகிறதோ அவர் தொடர்பில் அந்த மக்கள் உயர்ந்த மதிப்பும் மரியாதையும் பக்தியும் கொண்டுள்ளனர் என்பது தான் பாதபூசையின் வெளிப்பாடு.

இங்கு சில சம்பிரதாயங்களை நாம் விரும்பாவிடினும் மற்றவர்களுடைய மனம் நொந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் உண்டு என்பதையும் உணர்ந்தாக வேண்டும்.

ஆம், கடவுள் மறுப்புக் கொள்கையையுடைய ஈ.வே. ரா.பெரியார் அவர்களின் வீட்டில் ஒருமுறை ராஜாஜி அவர்கள் தங்கினார்.

வைகறைப் பொழுதில் ராஜாஜி நீராடி விட்டு வரும் போது, ஈ.வே.ரா.பெரியார் திருநீற்றுத் தட்டை ஏந்திய வண்ணம் காத்திருந்து அவரிடம் கொடுத்தார்.

இதனை அறிந்த பத்திரிகையாளர்கள் ஈ.வே.ராவிடம் ஐயா! நாஸ்திகமும் கடவுள் மறுப்புக் கொள்கையும் கொண்ட தாங்கள் திருநீற்றை ஏந்திய வண்ணம் காத்திருந்து அதனை ராஜாஜியிடம் கொடுத்தீர்களே! இது தகுமா? எனக் கேட்டார்கள்.

அதற்கு ஈ.வே.ரா பெரியார்; ராஜாஜி சைவநெறியைப் பின்பற்றுபவர். எனவே என்னுடைய கொள்கை அவருடைய வழமையான சந்தியாவந்தனத்தை பாதித்து விடக்கூடாது. எனவே அவரின் மரபை ஏற்றுக்கொள்வது தான் மனிதப் பண்பு என்றார்.

ஆம், கம்பவாரிதி அவர்கள் பாதபூசையை விரும்பக் கூடியவரன்று.

ஆனால் அந்த இடத்து மக்களின் வழமையை-அவர்களின் ஏற்பாட்டை-அந்தப் பணியைச் செய்வதற்கெனப் பொறுப்பெடுத்தவர்களின் வகிபங்கைத் தவிர்த்து-நிராகரித்து அவர்களுக்கு மனச்சஞ்சலத்தை ஏற்படுத்துமாறு கம்பவாரிதி அவர்கள் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டார் என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது.

இங்கு தான் ஒரு விடயத்தை நாம் சொல்லியாக வேண்டும். அதாவது விமர்சனங்கள் தேவையானவை. கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.

அதை தடுப்பது ஏற்புடையதன்று. ஆயினும் அந்த விமர்சனங்கள் பண்பாடானதாக-மற்றவர்களும் அதனைப் பார்த்து, அதில் இருக்கக்கூடிய நியாயத்துவங்களை ஆராய்வதாக இருத்தல் மிகமிக அவசியம்.

இலக்கியப் பேராற்றல் கொண்டவர் கம்பவாரிதி

தமிழகத்தின் திருச்செங்கோட்டில் கம்பவாரிதிக்குப் பாதபூசை செய்தார்கள் என்றால் அது கம்பவாரிதிக்கல்ல. மாறாக அவரிடம் இருக்கக்கூடிய இலக்கியப் பேராற்றலுக் கான அங்கீகாரம் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

ஆம், எங்கள் ஈழத்திரு நாட்டின் தமிழ் மகன் ஒருவருக்கு எட்டு கோடி மக்களைக் கொண்ட தமிழகம் பாதபூசை செய்கிறது என்றால், அது கண்டு நாம் பெருமையடைய வேண்டாமோ.

உண்மை. தமிழகத்தில் எத்தனையோ பேச்சாளப் பெருமக்கள் இருப்பினும் அவர்கள் அத்தனை பேரையும் கடந்து, எங்கள் ஈழத்து மண்ணில் வாழ்கின்ற கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் தமிழகத்தில் போற்றப்படுகிறார் எனும் போது அது கண்டு நாம் இறுமாப்பு எய்தாமல் இருக்க முடியாது.

உண்மை. எதிரியாக இருப்பினும் என் ஈழத்தமிழன்-என் இரத்த உறவு, உலகின் எந்த மூலையில் சாதனை படைத்தாலும்-உலகில் எங்கு அவருக்கு மதிப்புக் கிடைத்தாலும் அவர் இருக்கும் திசை நோக்கி நான் நிச்சயம் வணங்குவேன்.

எங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள்-கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் என் இனத்தவராக-என் தேசத்தவராக-என் ஊரவராக ஒருவர் சாதனை படைப்பாராக இருந்தால், அந்தச் சாதனை மக்களால் அங்கீகரிக்கப்படுமாக இருந்தால், அதற்கு உயர் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமாக இருந்தால், அதனை உரிமை கோரி என்னவனுக்குக் கிடைத்த உயரிய மரியாதை என் தாயகத்திற்குக் கிடைத்த உயரிய மரியாதை என நிச்சயம் நாம் புளகாங்கி தமடைய வேண்டும்.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link