Type to search

Articles Helth மருத்துவம்

சிறுவர்களில் ஏற்படும் நிறை அதிகரிப்பு – பாதிப்புக்களும் தீர்வுகளும்

Share

சிறுவர்களில் ஏற்படும் உடற்பருமன் அதிகரிப்பு என்பது, இன்று உலகளாவிய ரீதியில் முக்கியப் பிரச்சினையாக காணப்படுகிறது. எமது பிரதேசத்திலும், இது பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது.

அண்மையில் எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, 20% ஆன சிறுவர்கள் இந்த உடற்பருமன் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றனர். இதற்கு, அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களும், உடற்பயிற்சி அல்லது உடற்செ யற்பாடு அற்ற தன்மையுமே முக்கியமான காரணங்களாக அமைகின்றன.

பொதுவாக எமது பிரதேசத்தில் பெற்றோர்கள், பொருளாதார காரணங்கள் நிமித்தம் இருவரும் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதனால், வீட்டில் சமைத்து உண்ணும் உணவுப் பழக்கவழக்கம் அற்றுப் போய், கடைகளில் கொள்வனவு செய்யப்படும் உடனடி உணவுப் பொருட்களை உண்ணும் நிலை ஏற்படுகின்றது. இதைவிட, கல்விக்காக மேலதிக வகுப்புகளுக்கு இந்த சிறுவர்கள் செல்வதால், அதிகளவான நேரம் ஒரே இடத்தில் இருக்க வேண்டி இருப்பதால், விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் இதர செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக, சிறுவர்கள் வீட் டினுள் முடக்கப்பட்டதாலும், கல்விச் செயற்பாடுகள் கணனி மற்றும் தொலைபேசி ஊடாக நடைபெற்றதாலும், உடற்செயற்பாடுகள் குறைந்து, உடற்பருமன் அதி கரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உடற்பருமன் அதிகரித்த சிறுவர்களில் இப்போது எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் இவர்களின் உடற்பருமன் அதிகரிப்பினால் உடலில் ஏற்படும் அனுசேப மாற்றங்களால், பிற்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். முக்கியமாக நீரிழிவு, உயர் குருதி அமுக்கம், ஈரல் அழற்சி, சுவாசப்பை நோய்கள், எலும்பு சம்பந்தமான நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக காணப்ப டுகின்றது.

இதைவிட, இந்த சிறுவர்கள் பாடசாலைகளில் பகிடிவதைக்கு உள்ளாகலாம். பாட சாலைகளில் எந்த விளையாட்டிற்கும் இவர்களை சேர்த்துக் கொள்ளாத நிலை காணப்படலாம்.

இதனால் இவர்களுக்கு, மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற உளவியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படலாம். இந்த உடற்பருமன் அதிகரிக்கும் பிரச்சினைக்கு என்ன செய்யலாம் என்று பார்த்தால், முக்கியமாக இரு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று உணவுப் பழக்கவழக்கம்; மற்றது அவர்களது செயற்பாடு. உணவுப் பழக்கவழக்கங்களில், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தல், பொரித்த மற்றும் அதிக கொழுப்பு சேர்த்த உணவுகளை உண்பதை தவிர்த்தல், உடனடி உணவுகள் உண்பதை தவிர்த்தல் போன்றவை முக்கியமாகும்.

இதைவிட, இவர்களின் உணவில் மரக்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஒரு கோப்பை உணவில் கால்வாசி பங்கு தானிய வகைகள், கால்வாசி பங்கு சமைத்த மரக்கறி வகைகள், கால்வாசி பங்கு பழவகைகள் மற்றும் கால்வாசி பங்கு புரத உணவுகள் என்ற அளவில் காணப்பட வேண்டும்.

புரத உணவுகள், இந்த சிறுவர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. சிறுவர்கள் சிறிய பசி ஏற்படும் போது, அடிக்கடி உடனடி உணவுகள், பொரியல்கள், சிற்றுண்டிகள் போன்ற உணவுகளை விரும்பி உண்பதுண்டு.

அவ்வாறான நேரங் களில் இவற்றை உண்ண விடாமல் மரக்கறிகள், பழங்கள் என்பவற்றை உண்ணச் செய்வதன் மூலம் தவறான உணவுப் பழக்கவழக்கங்களை தவிர்க்க முடியும்.

இதைவிட, இவர்களை விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். கற்றல் நடவடிக்கைகளின் பின்னர், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு வெளியே ஓடியாடி விளையாட வேண்டும்.

அதோடு, வீட்டு வேலைகள் செய்வதற்கும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம் அவர்களது உடல் நிறையை ஓரளவு கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். இவை அனைத்தையும் விட, குடும்பமாக சில செயற்பாடுகள் செய்ய வேண்டும்.

உணவருந்துதல், வெளியே செல்லுதல், விளையாடுதல், உடற்பயிற்சியில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளை குடும்பமாக மேற்கொள்வதன் மூலம் உளவியல் ரீதியான மகிழ்ச்சி ஏற்படுவதால் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே, அனைவரும் சேர்ந்து, உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, உடற் தொழிற்பாடுகள் என்பவற்றைக் கவனித்து, சிறுவர்களின் எதிர்கால த்தை மேம்படுத்த முயற்சி எடுப்போம்.

பேராசிரியர்,

கீதாஞ்சலி சத்தியதாஸ், குழந்தை வைத்தியநிபுணர்,

போதனா வைத்தியசாலை

யாழ்ப்பாணம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link