ஆலடி மாநாடு
Share
வெட்டு மெஷின் கொட்டிய நெல் வயல் முழுக்க முளைத்திருக்கு
வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.
இறைவணக்கத்தடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.
தொடர்ந்து ஆலடியில் அமைதி நில வியது. அமைதியைக் குலைக்க விதானையார் விசுவலிஙகம் குரல் கொடுத்தார்.
விதானையார்:- மண்டைதீவில அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின்ர வேலைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருக்குது என்ன சங்கதி.
கங்காணி:- மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின்ர நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தகாரர்கள் அந்த வேலைத்திட்டத்தில இருந்து நீக்கப்பட்டதாக அறிந்தன்.
இனி புதியதொரு ஒப்பந்தகார நிறுவனம் வேலையைப் பொறுப்பெடுத்தால் தானே வேலைத் திட்டம் நடந்தாகும்.
மூப்பர்:-மண்டைதீவு சர்வதேச விளையாட்டு மைதானத்தை அமைப்பது தொடர்பில சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின்ர அனுமதி பெறப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் இருந்தன.
இது தவிர, எங்கட ஆட்களும் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைத்தால் அதனால், கடல்சார் தாவரங்களுக்கும் மற்றும் பறவைகளுக்கும் குந்தகம் ஏற்படும் என அறிக்கை விட்டவியளல்லோ.
அப்ப அதுகளைச் சாட்டாகக் கொண்டு, மண்டைதீவில அமையவிருக்கிற சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கால தாமதப்படுத்தி மெல்ல மெல்லக் கைவிடுகிறது தானே!
மூப்பர்:- ஓ! ஒரு மாதிரியாக யாழ்ப்பாணம் பழைய பூங்காவில அமைய இருந்த உள்ளக விளையாட்டரங்கிற்கு சமாதி கட்டிப் போட்டம். அதைத் தொடர்ந்து மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கும் உள்ளித் தைலம் வைத்தாயிற்று.
அப்ப ஏதோவொரு பெயரைக் கூறிக் கொண்டு, தமிழினத்தின்ர தலையில மண் ணைக் கொட்டுகிறவர்களுக்கு இது வெற்றி தானே!
வாத்தியார்:- மண்டைதீவில இப்ப அந்த ஊரைச் சேர்ந்தவர்களைத் தவிர, வெளியாரின்ர பிரசன்னம் தான் அதிகமாக இருக்குது.
வீடியோ மிக்சிங், குறுந்திரைப்பட நடிப்பு, காதல் சோடிகளின் இருப்பு என மண்டை தீவுப் பிரதான வீதியில இப்ப ஒரே இளவல்கள் கூட்டம்.
அதோட மண்டை தீவில இயற்கை வனப்பாக இருக்கக்கூடிய கண்ணாச் செடிகள் வளர்ந்து நிற்கின்ற கடல் சூழ்ந்த இடத்தில பொலித்தீன் பைகளும் பிளாஸ்ரிக் பொருட்களும் கொட்டப்படுவதைப் பார்க்கும் போது, அடிவயிறு பற்றி எரியுது.
என்ன மாதிரி இருந்த அந்த இடம் இப்ப காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய் வெளி போல மாறி வருகுது.
இதைத் தடுத்து நிறுத்த வேலணைப் பிரதேச சபையும் ஊர்காவற்றுறைப் பொலி ஸாரும் நடவடிக்கை எடுக்க வேணும்.
இது விடயத்தில மண்டைதீவுச் சந்தியிலும் அந்த ஊரின்ர கரையோரப் பகுதியிலும் இருக்கக் கூடிய கடற்படையினரும் கவனம் செலுத்தி, பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதை முற்றாகத் தடுக்க வேணும்.
இவ்வாறு வாத்தியார் கூற, ஆலடி நிசப்தமாகியது. நிசப்தத்தைக் கலைக்க பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார்.
பண்டிதர்:- ஏன்? வாத்தியார் மண்டை தீவில உள்ள கடல் சார் தாவரங்கள் உள்ள இடத்தில பொலித்தீன் குப்பைகள் கொட்டப் படுவதை எங்கட சூழல் பற்றிக் கதைக்கி றவர்கள் கவனிக்க வில்லையோ.
வாத்தியார்:- சரி, மண்டைதீவுப் பிரதான வீதியின்ர கரையோரங்களில பொலித்தீன் குப்பைகள் கொட்டப்படுவதை நேரில பார்த்து, அதைத்தடுக்க நட வடிக்கை எடுக்கும்படி சூழலியல் சார்ந்தவர்களிட்டயும் கேட்பம்.
இவ்வாறு வாத்தியார் கூற, இடையில் குறுக்கிட்ட சாத்திரியார் சதாசிவம்; எங்கட யாழ்ப்பாணம் பொது நூலகத்தின்ர படிப்பகத்தில wifi வசதி செய்தால், அது தங்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என மாணவர்கள் ஆலடியில ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கினம்.
அதோட யாழ்ப்பாணத்து நூலகத்தில குறைந்தது இரவு பத்து மணிவரை மாணவர்கள் அங்கிருந்து படிப்பதற்கும் வசதி செய்தால், அது பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்கள் அமைதியாக இருந்து படிப்பதற்கு பேருதவியாக இருக்கும் எண்டும் அந்தக் கோரிக்கையில மாணவர்கள் குறிப்பிட்டிருக்கினம்.
உண்மையில கடந்த காலங்களில இரவு 10 மணிவரை மாணவர்கள் படிப்பதற்கான வசதகள் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில செய்து கொடுக்கப்பட்டது.
அதை மீளவும் ஏற்படுத்த வேண் டும் என யாழ்ப்பாண மாநகர முதல்வரிடமும் கெளரவ உறுப்பினர்களிட மும் ஆலடி கோரிக்கை விடுகிறது எனக் கூற, சாத்திரியார் முன் வைத்த கோரிக்கையை ஆலடி ஏகமனதாக நிறைவேற்றியது.
இவ்வாறு ஆலடியில் தீர்மானம் நிறைவேறும் போது சிறாப்பர் கனக சபை ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தார்.
இதனை அவதானித்த விதானையார் என்ன? சிறாப்பர் கடும் யோசனையில இருக்கிறியள்.
சிறாப்பர்:- அண்மையில பெய்த மழைக்கு பிறகு, என்ர வயலைப் போய்ப் பார்த்தன். அங்க வயல் முழுக்க பயிராக இருக்குது. நெல் விதைத்த போது கூட அப்படி பயிர் இருக்கவில்லை.
அப்ப எங்கட நெல் வெட்டுகின்ற மெசினால கொட்டப்படுகிற நெல் எவ்வளவு எண்டு தெரியுது தானே.
என்ன செய்யிறது நெல் வெட்டும் மெசினை அனுபவமானவர்கள் இயக்காமல், ஏனோ தானோ என்று சாரதிகளை வெட்ட விட அவர்கள் விளைந்த நெல்லை வெட்டி வயலுக் குள்ள கொட்டுகினம். அதைத் தான் தற்போது பெய்த மழையில வயல் முழுக்க முளைத் திருக்கிற நெற் பயிர்கள் காட்டிநிற்கின்றன.
இவ்வாறு சிறாப்பர் கூற, அதனைத் தானும் ஆமோதிப்பது போல ஆலடிப் பிள்ளையார் கோவில் கண்டாமணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.


