வியாசர் பதில்கள்
Share
1) நல்லது-கெட்டதை எவ்வாறு பிரித்துப் பார்ப்பது வியாசரே?
தேவா-மாதகல்
நல்லதை பால் என எடுத்துக் கொள்வோம். அதில் கலக்கும் நீர் கெட்டது.
இதைப் பகுத்தறிவதற்கு நாம் அன்னமாக இருக்க வேண்டுமென்றில்லை. பாலை அளவீடு செய்யும் லாக்டோ மீற்றராக இருந்தாலே போதும். மலிவு விலையில் உடுப்புகள் போட்டு விற்பனை செய்வார்கள். அதில் மலை போல உடுப்புகள் குவிந்து கிடக்கும்.
அதில் நல்லதெது எமக்கு அளவானது எது என்று தெரிவு செய்யத் தெரிகிறதல்லவா? பிறகேன் இது தொடர்பில் மனம் வருந்திக் கொள்ள வேண்டும்.
2) மதவாதம் இலங்கையை விட்டு அகன்று போகுமா வியாசரே?
விஜயகுமார்-யாழ்ப்பாணம்
பெரும்பான்மை – சிறுபான்மை எனும் பாகுபாடு இந்த நாட்டிலிருந்து என்றைக்குத் துடைத்தெறியப்படுகின்றதோ அன்றைக்கே இங்கு மதவாதம் அற்றுப்போகும்.
ஏனெனில் சிங்கள மக்களிடம் தாம் சிங்கள பெளத்தர்கள் எனும் பெருமைமிகு குணம் இருக்கவே செய்கிறது.
இந்தப் பெருமை பித்தம் முத்தி பெளத்திரமான கதையாய் சிங்கள பெளத்தன் என்பது ஒரு இனமத-மதவாத அடையாளம் ஆகிவிட்டது.
இதற்கு தூபமிட்டவர்கள் பெரும்பான்மை அரசியல்வாதிகள் என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை.
3) நட்பு காதலாக மாறுமா வியாசரே?
சுகி-ஆனைக்கோட்டை
ஆரம்பத்தில் நட்பு அதன்பின் காதல் என்பது தான் காதலினது எழுதாவிதி.
இதில் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். இரண்டு நண்பர்கள் பிரிந்தால் பிரிதலின் பின்னரும் பசுமை நினைவுகள் ஒளி வீசும்.
ஆனால் பிரிந்து சென்ற காதலர்களிடம் ஆளாழுக்கு அவதூறு நிறைந்த கதைகளையே பேசுவார்கள்.
ஆதலால் காதலை விட காதலர்களை விட நட்பும் நண்பர்களும் என்றும் சிறந்தது என்பேன்.
4) மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக ஓடி விபத்துக்குள்ளாக்குபவர்கள் பற்றி?
ஜெ.ஜெ – யாழ்ப்பாணம்
பச்சை மட்டை வைத்தியம் தான் இவர்களுக்கான சரியான உபயம்.
மோட்டார்சைக்கிளை வேகமாக ஓடி தங்கள் வாழ்வை அழிக்கிறார்கள் என்றால் பேசாமல் விட்டு விடலாம்.
ஆனால் அடுத்தவர்கள் வாழ்வைச் சீரழிக்கும் இவர்களை வெழுக்காமல் வேறு எதைச் செய்வது.
அண்மையில் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் றேஸ் ஓடும் காவாலிகளினால் ஒரு இளம் தாய் கொல்லப்பட்டிருக்கிறாள்.
பாலர் பாடசாலையிலிருந்து பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போவதற்காகச் சென்ற போது இந்த விபத்து நடந்திருக்கின்றது.
ஒருவேளை பிள்ளையை ஏற்றிக் கொண்டு வரும் போது குறித்த விபத்து நடந்திருந்தால்…
5) அரசர்கள், ஆன்மீகத் தலைவர்கள் பதவி ஏற்கும் போது தமது சொந்தப் பெயரில் பதவியேற்பதில்லை. அது போலத்தான் உங்கள் பெயரும்?
இராமஜெயபாலன்
வியாசர் ஆகிய நான் வலம்புரியின் வியாசர் கேள்வி பதில் பகுதியில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தவிர்த்து நடுவு நிலையாய் பதில் வழங்குவேனென உறுதியளிக்கின்றேன்.
இவ்வாறு உறுதி உரை வழங்க வேண்டும் என்பது எமக்கும் விருப்பம் தான்.
என்ன செய்வது நாம் ஒன்று நினைக்க கடவுள் வேறொன்று நினைக்கின்றாரே.
அதுசரி எமது பெயரில் உங்களுக்கு என்ன ஐயம் இருக்கிறது என்று கூறவேயில்லையே?
6) பழைய நக்கல் நையாண்டி வியாசரிடம் குறைந்து விட்டதே. காரணம் என்ன?
தர்மா – ஆனைக்கோட்டை
வ யதாகி விட்டது. குடும்பம், பிள்ளை-குட்டியயன்றாகி விட்டது.
அதன் பிறகும் அதே நக்கல் நையாண்டியுடன் நான் நிற்க, மனைவி வீட்டு வாசலில் விளக்குமாத்துடனல்லவா நிற்கிறாள்.
ஏற்கனவே நெஞ்சு புண்ணாகிக் கிடக்கிறது. இதில் மஞ்சமும் புண்ணாக வேண்டுமா?
இந்தக் கேள்விக்கான பதிலுக்குப் பின்னர் என் நிலை என்ன ஆகப்போகிறதோ என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் பேயாகப் பிறந்தால் நாக்கு நீட்டித்தானே ஆக வேண்டும்.
7) காவிக்குள் மறைந்திருக்கும் மிருகங்களை என்ன செய்ய?
இனியா-கிளிநொச்சி
நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானதாய் இருக்க வேண்டும்.
அப்போதே இந்த நாடு மனித உரிமைகளில் முன்னேறும் நீதி வழங்கலில் முழுமை பெறும்.
சிறுபான்மையினருக்கு ஒரு சட்டமும் பெரும்பான்மையினருக்கு வேறொரு சட்டமும் நடை முறைப்படுத்தும் போது எதுவும் தெரியவில்லை.
ஆனால் இப்போது காவி பாவியாகி விட அந்தப் பாவியை சட்டம் காவி விட சிறுபான்மையினருக்கு நடந்த அதே நிலை; அன்று தமிழர் – சிங்களவர். இன்று காவிகள் – சிங்களவர்கள் அவ்வளவு தான்.
8) அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலில் பிரதமராகப் போகின்றாராமே உண்மையா வியாசரே?
சிவம்-வதிரி
எனக்கு உங்கள் கேள்வியை வாசிக்கும் போது நஸ்ரூதீன்ஷாவின் ஒரு அருமையான ஆழமான கருத்து நினைவுக்கு வந்தது.
‘நகரங்களைக் கொழுத்தியது யார் என்பதல்ல கேள்வி.. பைத்தியக்காரனின் கையில் தீப்பெட்டியைக் கொடுத்தது யார் என்பது தான் கேள்வி.’
அமெரிக்கர்கள் ட்ரம்பிடம் தீப்பெட்டியைக் கொடுத்தது போல இஸ்ரேலியர்களும் கொடுப் பார்களா?


