இன்று ஒரு தகவல்
Share
குருவும் சீடனும்
நாங்கள் நிறைய குருமார்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றோம். சீடர்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருக்கின்றோம். சீடர்களிலே இரண்டு வகை உண்டு.
குருமார்கள் பார்த்து தேர்ந்தெடுக்கின்ற சீடர்கள் ஒரு வகை.
இன்னொரு வகை எப்படி என்றால் சீடர்களே குருமார்களைத் தேர்ந்தெடுப்பது.
குருமார்கள் சீடர்களைத் தேர்ந்தெடுக்கிறது தான் உயர்வு, நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கமாட்டார். தேர்ந்தெடுத்தது மாதிரி ஒரு பிரமையை உண்டு பண்ணுவார். அவ்வளவுதான்.
ஏன் என்றால் அவர் தேர்ந்தெடுத்திருக்கிறது தெரிந்தால் இவனுக்கு அகங்காரம் அதிகமாகும். ஒரு ஞானி இருந்தார். சுபிஞானி.
அவரிடம் ஒரு சீடன்… இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். இவன் அவரிடம் அடிக்கடி ‘அதைச் சொல்லிக் கொடுங்க… இதைச் சொல்லிக் கொடுங்க” என்று தொந்தரவு பண்ணிக்கொண்டே இருந்தான். அவர் பார்த்தார்.
ஒரு நாள் கூப்பிட்டார். ஒரு கல்லை எடுத்து அவன் கையிலே கொடுத்தார். இதை காய்கறிச் சந்தைக்கு எடுத்துக்கொண்டு போ… அங்கே போய் இதை விற்று விட்டு வா என்றார்.
அந்தக் கல் பார்ப்பதற்கு அழகா இருந்தது. பெரிதாக இருந்தது. அந்த குரு சொன்னார்.
“இதோ பார். இந்தக் கல்லை உண்மையிலேயே விற்றுவிடாதே! விற்பது மாதிரி நடி! பல பேரைப் பார் அவர்களை நல்லா கவனித்து விட்டு வா!” என்றார்.
இவன் அந்தக் கல்லை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போனான். பல பேர் அதைப் பார்த்தார்கள்.
இந்தக் கல்லை காய்கறி விற்பனை செய்வதற்கு எடைக்கல்லாக உபயோகப் படுத்தலாம் என்று நினைதார்கள். சில பேர் குழந்தைகளுக்கு இதை வாங்கிக்கொடுத்து விளையாடச் சொல்லலாம் என்று நினைத்தார்கள்!
இப்படி நினைத்து அந்தக் கல்லை குறைந்த விலைக்குக் கேட்டார்கள். இவன் திரும்பி வந்தான். குருவிடம் சொன்னான். ‘இந்தக் கல்லை எல்லோரும் குறைந்த விலைக்கே கேட்கிறார்கள். அதிக பட்சம் பத்து காசுக்கு மேலே இதை விற்க முடியாது!” என்றான்.
குரு இப்ப மறுபடியும் சொன்னார்.
சரி நீ இப்ப தங்கம் விற்கிற இடத்துக்குப் போ.. அங்கே போய் முயற்சி செய்து பார்!” என்றார். அங்கே போயிட்டுத் திரும்பி வந்தான்.
அங்கே இதை ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கலாம். அங்கே இருக்கிற மக்கள் ரொம்பப் பெருந்தன்மையானவர்கள்!” என்றான்.
“சரி… இப்ப நீ வைரம் விற்கிற கடைத்தெருவுக்குப் போயிட்டுவா!” என்றார். அங்கே போயிட்டு வந்து சொன்னான்.
அங்கே 50,000 ரூபாய்க்குக் கேட்டார்கள். கொடுக்க கூட முடியாது என்றேன். ஒரு இலட்சம் வரைக்கும் வாங்குவதற்கு ஆசைப்பட்டாங்க. நான் சம்மதிக்கவில்லை. அதன் பின்பு அவங்க இன்னமும் விலையைக் கூட்டிக்கொண்டே போனார்கள் என்ன பைத்தியக்காரசனங்கள்!” -என்றான்.
இப்ப அந்த குரு அந்த சீடனிடம் சொன்னார்: “இதோ பாருப்பா.. நீ விற்கவில்லை என்றதும் அதன் விலை எப்படி அதிகமாகியது?
இது முழுக்க முழுக்க கல்லை விட உன்னைப் பொறுத்த விடயமாக போய்விட்டது. நீ காய்கறிச் சந்தையிலே இருந்தபோது அதன் மதிப்பு பத்துப் பைசாதான் என்று நீயும் நினைத்தாய்! இப்போ.. நீ காய்கறி விற்கிற சந்தையிலே தான் இருக்கிறாய்!
அதாவது உன் மனநிலையின் மதிப்பு பத்துப்பைசா தான். நீ உன்னுடைய மனநிலையை வைரம் விற்கிற கடையைப் போல உயர்த்து! அதன் பின் என்னிடம் வா!” என்றார்.
அதனாலே ஒரு குருவிடம் சீடனாக இருப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்! அப்பதான் அது பயனுள்ளதாக அமையும். இல்லை என்றால் நானும் அந்தக் குருவிடம் ஒரு சீடனாக இருக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கலாம் அவ்வளவு தான்.
ஒருவர் ஒரு குருவைத் தேடிப்போனார். என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். ‘என்னிடம் நீ சீடனாக இருப்பதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறதா?என்று கேட்டார்.
“குருவே! ஏற்கனவே நீங்கள் இருந்த ஜெயிலிலே உங்க கூட இருந்தவன்தான் நான். உங்களை மாதிரியே இப்ப நானும் மாறுவேடத்திலே வந்திருக்கேன். நம்ம இரண்டு பேரையுமே இப்ப வேறு யாருக்கும் அடையாளம் தெரியாது! இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்?என்றான்.
அதோ கூட்டத்திலே.. நாம யாரு என்று தெரியாமல் பக்த கோடிகளிலே ஒருத்தராக உட்கார்ந்திருக்காரே அவருக்கு அடையாளம் தெரியாத வரைக்கும் நமக்கு ஒன்றும் கஷ்டமில்லை!” என்றார் குரு.
“யாரு அது?” என்றான்.நம்ம ஜெயில் சூப்பரிண்டெண்ட்! என்றார்அவர்!
தென்கச்சி.கோ.சுவாமிநாதன்


