மத்திய வங்கி வட்டி விகிதம் உயரும் அபாயம்!
Share
அடுத்த வாரமாகும்போது மத்திய வங்கியின் வட்டி விகிதங்கள் குறைந்தபட்சம் 50 அல்லது 100 அடிப்படைப் புள்ளிகளால் (Basis points), அதாவது 0.5% அல்லது 1% இனால் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று (21) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
வட்டி விகிதங்கள் இவ்வாறு அதிகரித்தால், அதன் நேரடி விளைவாக மக்களிடம் வசூலிக்கப்படும் வரியின் அளவை மேலும் அதிகரிக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் திறைசேரி ஆகியவற்றிடம் சந்தைக் கொள்கைகள் காணப்படுவதாகவும், அதற்கேற்பச் செயல்படுமாறும் அவர் பொறுப்புவாய்ந்த தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்யாவிடில், இந்த நச்சுவட்டம் மேலும் சீர்குலையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“அரசியல் மேடைகளில் எவ்வளவுதான் கூறினாலும் பலனில்லை, சந்தை அரசாங்கத்தை நம்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக என்ன நடக்கும் என்றால், அரசாங்கம் செலுத்த வேண்டிய வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டியேற்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


