தீவகத்தின் பெரும் சொத்து சபாரட்ணம் மாஸ்ரர்
Share
மெய்யியல், வரலாறு, சைவ சித்தாந்தம் என்பவற்றில் புலமைமிக்க பேராசான் ஆ.சபாரட்ணம் அவர்கள் நேற்று முன்தினம் காலமானார் என்ற செய்தி தமிழ் அன்னையை துயரமடையச்செய்துள்ளது.
சபாரட்ணம் மாஸ்ரர் மிகப் பெரும் அறிஞர். பண்பாட்டு செழுமையின் பற்றாளர். எவர் மீதும் அன்பு காட்டுகின்ற கனவான்.
அவரின் அறிவாற்றல் பலரையும் அவர் பால் ஈர்த்தது.
தனது அறிவுப் புலத்தை பல்கலைக்கழக சமூகத்துக்கு வழங்கி அதனூடு கற்றறிந்த சமூகம் உருவாக உழைத்த பெருந்தகை.
இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து எதனையும் அறிவார்ந்த நோக்கில் பார்க்கின்ற பக்குவம் அவரிடம் மிகுந்திருந்தது.
இதன் காரணமாக சபாரட்ணம் மாஸ்ரர் என்றால் அவர் இல்லாதவிடத்தும் அவரை அறிந் தவர் மனத்தால் எழுந்து மதிப்புச் செலுத்துவர்.
அந்தளவுக்கு அவரின் நெகிழ்ந்த மனம் அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.
மெய்யியல், வரலாறு, சைவ சித்தாந்தம் என்பவற்றோடு ஆங்கிலத்திலும் புலமைமிக்க சபாரட்ணம் மாஸ்ரர் அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் ஆய்வுப் பணிகளுக்குப் பேருதவி புரிந்தவர்.
பட்டப்படிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பரந்துபட்ட ஒரு சமூகம் இவரை நாடி நின்ற போது, அவர்களுக்கெல்லாம் உதவுவதையே தனது முதற்பணியாகக் கருதினார்.
மெளனமுனி கைலாசபதி அவர்களின் தத்துவக் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சபாரட்ணம் மாஸ்ரர் மெளனமுனி கைலாசபதியின் சிந்தனைகளை நூலுருப் பெறச் செய்ததுடன், தான் எழுதிய கட்டுரைகளில் கைலாசபதியின் சிந்தனைகளை மேற்கோள் காட்டவும் தவறவில்லை.
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவ சமய விவகாரக் குழு வெளியிட்டு வருகின்ற நல் லைக்குமரன் மலரில் சபாரட்ணம் மாஸ்ரர் எழுதிய கட்டுரைகள் பெறுமதிமிக்கவை என்ப தோடு அவரின் கட்டுரைகள் நல்லைக்குமரன் மலருக்குச் சிறப்புச் செய்தன என்பதையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமானது.
தீவகத்தில் நாரந்தனை மண்ணைச் சொந்த இடமாகக் கொண்ட சபாரட்ணம் மாஸ்ரர் கரம் பொன் சண்முகானந்த வித்தியாலயத்தில் அதிபராக நீண்ட காலம் கடமையாற்றியிருந்தார்.
சுவீடன் உப்சலாப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆய்வாளராக இருந்தமை அவரின் தகைமைக்குத் தக்க சான்றாகும்.
எவரையும் குறைகூறாமல் நல்லதையே சிந்தித்து, என்றும் பணி செய்வது எங்கடன் என்று அறவாழ்வு வாழ்ந்த சபாரட்ணம் மாஸ்ரரின் மறைவால் தீவகம் தனது பெருஞ் சொத்தை இழந்துள்ளது.