முன்பு சார்பாக இருந்தவர் இப்போது இல்லை என்பதற்காக…
Share
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கின்றவர்கள், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலாகி இருக்கின்ற வேளை மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்ற அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சமய சமூக சேவையாளர்கள், தனிநபர்கள் என்போர் போற்றுதலுக்கும் பாராட்டு தலுக்கும் உரியவர்கள்.
காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தில் மாணப் பெரிதுஎன்பார் வள்ளுவர்.
ஆனால் இங்கு தங்களை, தங்கள் குடும்பங்களை நினையாமல் பேரிடர் வந்துற்ற போது மக்கள் பணி செய்வதே மகேசன் பணி என்றுணர்ந்து சேவையாற்றுகின்ற அத்தனை பேரின் திருவடிகளையும் தொட்டு வணங்க முடியும்.
மக்களே! வெளியில் செல்லாதீர்கள், வீடுகளுக்குள் இருங்கள். இதுவே கொரோனாத் தொற்றிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி என அரசு அறிவித்திருக்கையில்,
கொரோனாவுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவமனைக்கு வாருங்கள் என அழைக்கின்ற மருத்துவ சமூகம்;
நீங்கள் வீடுகளில் இருங்கள் உங்களுக்கான கொடுப்பனவை நாங்கள் உங்களைத் தேடி வந்து தருகிறோம் என்று கூறுகின்ற அரச உத்தியோகத்தர்கள்;
உணவுப் பொருள் இல்லை என்றால், எங்களை அழையுங்கள். நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து அவற்றைத் தருகிறோம் என்று கூறவல்ல சமூகப் பற்றாளர்கள் இவர்களில் இறைவன் தெரிகிறான்.
இதற்கு மேலாக ஊரடங்கு வேளையிலும் அலுவலகங்களைத் திறந்திருந்து நிலைமை களைத் கண்காணித்து, நிவாரணப் பொருட்களைப் பங்கீடு செய்து மக்களின் அத்தியா வசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அல்லும் பகலும் பாடுபடுகின்ற அரச உயர் அதிகாரிகள் அவர்களோடு இணைந்து சேவையாற்றுகின்றவர்கள் என அனைவரதும் பணி நன்றி மறவாமைக்குரியது.
எனினும் நம் மண்ணில் தமிழ் அரசியல் வாதிகள் சிலர் அரச உயர் அதிகாரிகளைத் தூற்றுவதிலும் அவர்களைக் கண்டித்து அறிக்கை விடுவதையுமே தங்களின் சமகால அரசியல் பணியாக நினைத்து செயற்படுகின்றனர்.
கொரோனாத் தொற்றின் அபாயம் பேரிடியைத் தந்து நிற்க, அன்றாடப் பொருளாதாரத்தை இழந்து மக்கள் அவலத்தில் இருக்க, இவர்கள் எழுந்தமானத்தில் அதிகாரிகளைத் தூற்றி அறிக்கை விடுவது எந்தவகையில் நியாயமாகும்.
அதிகாரிகள் பிழை விட்டால் – அவர்களின் செயற்பாட்டில் திருப்தி இல்லையயன்றால், அவர்களைச் சந்தித்து உங்கள் கருத்தைக் கூறுங்கள். நிலைமை மோசமாக இருக்கும் இவ்வேளையில் நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம். உங்களுக்குத் தேவை யான உதவிகளை வழங்க நாமும் முன்வரு வோம் என்று கூறுங்கள்.
இதைவிடுத்து முன்பு உங்களுக்கு சார்பாக இருந்தவர் இப்போது அங்கு இல்லையே என்ற ஆத்திரத்தில் புதியவரைத் தூற்றுவது அறமன்று.