Type to search

Headlines Helth மருத்துவம்

ஆரோக்கியமான கர்ப்பம்…வைத்தியர்களின் ஆலோசனை..

Share

மகப்பேறு இன்மை என்பது, உலகலாவிய ரீதியிலும், இலங்கையிலும் குறிப்பாக வட மாகாணத்திலும் முக்கியமானதொரு பிரச்சனையாக பரிணமித்துக்கொண்டு வருகிறது. இந்த பிரச்சனை ஏற்படுவதை எவ்வாறு குறைத்துக்கொள்ளலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த மகப்பேறு இன்மை என்பது கிட்டத்தட்ட ஆறில் ஒரு தம்பதியினரைப் பாதிக்கும்.

திருமணமான பின்னர், எந்தவொரு கருத்தடை முறைகளையும் பயன்படுத்தாமல் குறைந்தது ஒரு வருடம் கிரமமாக உடலுறவு கொள்ளும் போது, அனேகமானவர்களுக்கு குழந்தை தங்குகிறது. கிரமமாக என்றால், மாதவிடாய் தவிர்ந்த காலங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை ஆகும். அதன்படி பார்த்தால் 85% ஆனவர்களுக்கு ஒரு வருட இறுதியில் குழந்தை தங்குகிறது. இன்னும் சிறிது காலம் விட்டுப்பார்த்தால், 92% ஆனவர்களுக்கு இரண்டு வருடங்களின் இறுதியில் குழந்தை தங்குகிறது. ஆகவே, குறைந்தது ஒரு வருடம் முயற்சி செய்தும், குழந்தை தங்கவில்லை என்றால், வைத்தியரை அணுகுவதே நல்லது.

ஆனால், இதில் என்ன முக்கியம் என்றால், சாதாரண உடற்தொழிற்பாடுகளில் இருந்து மாறுபட்ட உடற்தொழிற்பாட்டினை உடைய தம்பதியினர் நேரத்துடனேயே வைத்தியரை சந்திக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, பெண்களை எடுத்துக் கொண்டால், ஒழுங்கற்ற மாதவிடாய் உடையவர்களுக்கு, சூலகத்தில் இருந்து முட்டை வெளிவருவதும் ஒழுங்கற்ற முறையில் காணப்படும். சில சமயம் ஒரு வருடத்தில் மூன்று அல்லது நான்கு தடவைகள் மாத்திரம் முட்டை வெளிவரும் தன்மை காணப்படலாம். அப்படி யானவர்கள் உடனேயே வைத்தியரை அணுகி, பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கான சிகிச்சைகளை எடுக்கவேண்டும்.

அதேபோல், மாதவிடாய் காலத்தில் கடுமையான வலியினை உடையவர்கள் அல்லது உடலுறவு கொள்ளும் போது கடுமையான வலி உள்ளவர்களும் வைத்தியரை நாடி பரிசோதனை செய்து, ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக, Endometriosis என்றநோய் நிலை அதில் பலபேருக்கு இருக்கலாம். இந்த வருத்தமானது. குழந்தை தங்கும் நிலையைமட்டும் பாதிப்பதில்லை. அவர்களது வாழ்க்கை நலத்தையும் பாதிக்கும்.

நேரத்துடன் வைத்தியரை அணுகுதல் என்றால், சிகிச்சைகளைப் பெற வேண்டும் என்பதில்லை. முதலில் அடிப்படையான பரிசோத னைகளை செய்து பார்த்து, அவை சாதாரணமாக இருந்தால், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு வருட ங்கள் முயற்சித்து பார்க்கலாம். பின் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.

அடிப்படை பரிசோதனைகள் என்பதில் முக்கியமானவையாக ஆண்களினுடைய விந்தின் அளவு, விந்தின் தொழிற்பாட்டுத் தன்மை என்பவற்றைப் பரிசோதித்தல் மற்றும் பெண்களின் கர்ப்பப்பை, சூலகம் என்பன சாதாரண நிலையில் உள்ளதா, தொழிற்படுகிறதா என பரிசோதித்தல் ஆகியவை அடங்கு கின்றன. இவற்றிற்கு மேலதிகமாக இன்னும் சில அடிப்படை பரிசோதனைகள் காணப்படுகின்றன. முக்கியமாக, உடல் திணிவு அளவுச் சுட்டி சாதாரண வரையறைக்குள் இருக்கிறதா, நீரிழிவு நோய் இருக்கிறதா, தைரொக்சின் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கிறதா என அறியும் பரிசோதனைகள் இவற்றுள் அடங்கும். மகப்பேறு இன்மை எனும் பிரச்சினை வரும் முன்னரே அதை தடுப்பதற்காக முயற்சிகளை எடுப்பது சிறந்த வழிமுறையாகும். உடல் நிறையை சரியான விதத்தில் பேணுவது அவசியம். இதற்கு, ஆரோக்கியமான உணவு, கிரமமான உடற்பயிற்சி என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் மது அருந்துதல், புகைப் பிடித்தல் என்பனவும் மகப்பேறு இன்மைக்கு முக்கியமான காரணங்களாக அமைகின்றன. இவற்றை தவிர்த்தல் சிறந்தது.

அடிப்படையான பரிசோதனைகளுக்கு அடுத்த கட்டமாக, மேலதிக சோதனைகள் சிலவும் செய்வதுண்டு. அவை என்னவென்று பார்ப் போம். ஒன்று அல்லது இரண்டு வருடங்களின் பின்னரும் குழந்தை தங்கவில்லை என்றால், பெண்களில் முட்டை உருவாகிறதா என்று பார்க்க மற்றும் முட்டைக் கருக்கள் எவ்வளவு இருக்கின்றன என்று பார்க்க சில பரிசோதனைகள் காணப்படுகின்றன. அத்துடன், ஆண்களில் பல விந்து பரிசோதனைகள் காணப்படுகின்றன. இவற்றுடன், விந்தும் முட்டையும் சந்திக்கும் பாதை, சந்தர்ப்பம் எப்படி என்று கண்டறியும் பரிசோதனைகளும் காணப்படுகின்றன. அவற்றில், உடலுறவு கொள்ளும் போது ஏதேனும் பிரச்சனைகள் இருக்கி ன்றதா, கர்ப்பப்பையினுள் சென்ற விந்து முட்டையை சந்திக்கிறதா. கர்ப்பப்பை குழாயில் ஏதேனும் அடைப்புக்கள் காணப்படுகின்றதா என அறியும் பரிசோதனைகளும் உள்ளடங்கும். இப்பரிசோதனை முடிவுகள் சாதாரணமாக இருந்தும் குழந்தை தங்கவில்லை எனில், அதன்பின் உங்கள் வயதின்படி, உங்கள் விருப்பப்படி மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலதிக சிகிச்சை முறைகளாக, முட்டை வெளிவருவதை தூண்டுதல் மற்றும் ஆண்களுடைய விந்தை எடுத்து, அதில் தேவையற்ற பகுதிகளை நீக்கி, விந்து அணுக்களை கர்ப்பப் பையினுள் ஊசிகள் மூலம் செலுத்துதல் (Intra uterine insemination) என்பவை அடங்குகின்றன. இவற்றின் மூலம் 10-15% பலன் கிடைக்கும்.

இந்த சிகிச்சை முறைகளும் பலனளிக்கவில்லை எனில், அடுத்ததாக In vitro fertilization(IVF) முறை மூலம் முயற்சித்துப் பார்க்கலாம். அதாவது பெண்களின் சூலகத்தில் முட்டைகளை வளரச்செய்து, அந்த முட்டைகளை வெளியே எடுத்து, ஆணினுடைய விந்துடன் இணையச்செய்து, முளையம் என்ற கருவை உருவாக்கி, பின்னர் அந்த முளையத்தை சரியான தருணம் வரும்போது பெண்களின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி விடுதலே IVF முறை ஆகும். இம்முறை 30-50% வரை வெற்றிகரமாக பலனளிக்கக் கூடியது. ஆனால், அடிப்படை சிகிச்சை முறைகளில் இருந்து அதிவிசேட சிகிச்சை முறையான IVF இற்கு செல்லும் போது, செலவு அதிகரித்துச் செல் கிறது. இதனால் பெரும்பாலானவர்களுக்கு அதனை செய்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. ஆகவே, மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், மகப்பேறு இன்மையை சாதாரணமான ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல், ஆரம்பத் திலேயே அது குறித்து கவனம் எடுத்து, மாதவிடாய் ஒழுங்கில்லாமல் வருபவர்கள் அல்லது உடல் திணிவுச்சுட்டி கூடியவர்கள் அல்லது விந்து அணு குறையக் கூடிய சந்தர்ப்பம் உள்ளவர்கள் உதாரணமாக, விதைப்பையில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கதிர்வீச்சு மற்றும் வெப்பநிலை அதிகமாக உள்ள இடத்தில் தொழில் செய்பவர்கள் ஆகியோர், நேரத்துடன் வைத்தியரை அணுகி, அடிப்படையான பரிசோதனைகளைச் செய்து, அது சம்பந்தமான வைத்திய ஆலோசனைகளைப் பெறுதல் சிறந்தது.

Dr.ந.சரவணபவா

பெண் நோயியல் மகப்பேற்று

வைத்திய நிபுணர் போதனா வைத்தியசாலை,

யாழ்ப்பாணம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link