Type to search

தரிசனம்

தரிசனம்

Share

இந்து ஆலயங்களிலும் அவற்றின் பரிபாலனங்களும் 4

தென்னிந்தியத் திருச்சபை யின் முக்கிய தலைவர் ஒருவரை கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சந்தித்தேன்.

பொதுவில் தென்னிந்தியத் திருச்சபையில் இருப்பவர்கள் சைவ சமயத்தில் இருந்து மதம் மாறியவர்கள்.

அவர்களின் மதமாற்றம் கல்வி, உத்தியோகம் என்பன சார்ந்து ஏற்பட்டதாகும்.

எனினும் அவர்கள் சைவ சமயத்துடன் நெருக்கமாகப் பழகுகின்ற இயல்பை உடைய வர்கள்.

தவிர, சைவ சமயப் பண்பாடுகளிலும் அவர்கள் போதிய விளக்கத்தைக் கொண்டவர்கள்.

இதைவிட, சைவ சமயத்தி லிருந்து மதம் மாறிய போதிலும் அவர்கள் தங்களுக்குத் தங்கள் பெற்றோர்களால் சூட்டப்பட்ட சைவப் பெயர்களை மாற்றியமைக்க விரும்பவில்லை.

ஆம், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயராக இருந்த அம்பலவாணர் அவர்கள் அதே பெயரிலேயே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

இப்போது நான் சந்தித்த தென்னிந்தியத் திருச்சபையின் முக்கியஸ்தர் கூறிய விடயத்தை அறிய நீங்கள் ஆவலாக இருப்பீர்கள். இங்கு அவர் என்னிடம் கூறியது; சைவ சமயத்திலிருந்து மதம் மாறியவர்கள் பின்னாளில் வேதனைப்பட்டார்கள் என்பதாகும்.

இவ்வாறு ஓர் உண்மையை வெளிப்படையாகக் கூறுகின்ற அளவில் அவரின் மனநிலை பரந்திருந்தது.

என்ன செய்வது, இப்போது மதமாற்றச் சபைகள் கூட்டங்கள் நடத்தி சைவ சமயத்தவர் களை மதம் மாற்றுகின்றனர்.

உண்மையில் இதைப்போன்ற ஒரு பாவச் செயல் வேறு எதுவுமாக இருக்க முடியாது. யாதும் ஊரே யாவரும் கேளிர்-என சமத்துவம் பேசிய நம் தமிழ் மண்ணில் மதமாற்றம் இடம்பெறுவதும் மத மாற்றத்திற்காகக் கூட்டங்கள் நடத்துவதும் நியாயமானதன்று.

தவிர, இத்தகைய செயல்களை பெளத்தர்கள் மத்தியில், இஸ்லாமியர்களின் இடங்களில் செய்ய முடியுமா என்ன?

ஆக, சைவ சமயத்தவர்கள் எல்லோரையும் நேசிப்பவர்கள். பிறமத எதிர்ப்புக் கொண்டிராதவர்கள். பிற சமயங்களை மதிக்கின்ற உயர்ந்த குணவியல்பு உடையவர்கள் என்பதால், அந்த நல்ல குணத்தை பலவீனமாகக் கருதி, சில மத மாற்றச் சபைகள் பிரசாரம் செய்கின்றன. அவர்களின் பிரசாரங்கள் வறுமைப்பட்ட மக்களை நோக்கியதாக இருப்பதால், ஏழ்மை காரணமாக மதம் மாறுகின்ற அவலத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் ஆளாக வேண்டியுள்ளது.

மதம் மாறியதுடன் சம்பவம் முடிந்து விட்டது என்றால் பரவாயில்லை. அதுதான் இல்லை. சைவக் கடவுள்கள், கோயில்கள் என அனைத்தையும் சாத்தான்களாகச் சித்தரிக்கின்ற சிறுமைத்தனத்தை மதமாற்றிகள் மதம் மாறுபவர்களிடம் கூறிவைக்க- சைவக் கடவுள்களுக்குப் படைத்த பிரசாதங்களை அவர்கள் சாத்தானிற்கு படைக்கப்பட்டதாக மனப் பிரமை கொண்டு அதை வெறுக்கின்றனர்.

இங்கு தான் மதம் மாற்றுபவர்களின் வக்கிரம் எத்தகையதென்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஆம், சைவ சமயத்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உங்களை பேய் பிடித்துள்ளது-பிசாசு தீண்டியுள்ளது எனப் பயப்படுத்தி, அந்தப் பயத்தினூடே சுகப்படுத்தல்-சுகமளித்தல்-ஆரோக்கியமாக்குதல் என்றவாறு மூளைச்சலவை செய்து மத மாற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும் மதம் மாறியவர்கள் மத்தியில் ஏற்பட்ட அவல மரணங்கள், திடீர் உயிரிழப்புக்கள், இளம் வயதில் இறப்பைச் சந்தித்தவர்கள் என ஒரு பெரும் பட்டியல் உண்டு.

ஆனாலும் அதனை எடுத்துரைக்கின்ற தாழ்நிலைச் சிந்தனை சைவ சமயத்தில் இல்லை என்பதற்காக, ஏற்பட்ட இழப்புக்களும் இல்லை என்றாகி விடாது என்பதை மதமாற்றிகள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

தாய்ச் சமயத்திற்கு திரும்பவும் வாருங்கள்

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்பது தரிசனமாக இருக்கையில், உங்கள் தரிசனம் பாதை மாறி விட்டதா? என்று யாரேனும் கேட்கலாம்.

இருந்தும் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் போது தான், நாங்கள் எங்கே தவறிழைத்துள்ளோம் என்பதை உணரவும் உணர்த்தவும் முடியும்.

அந்த வகையில் அந்நியராட்சியில் ஏற்பட்ட மதமாற்றம் என்பது சைவ சமயத்தில் மட்டும் ஏற்பட்டதல்ல. மாறாக பெளத்த மதத்திலும் மதமாற்றம் இடம்பெற்றது.

ஆனால் நாட்டின் சுதந்திரம் என்ற சிந்தனை ஏற்பட்ட போது-சுதந்திர நாடாக இலங்கை அறிவிக்கப்பட்ட போது, மதம் மாறியவர்கள் மீளவும் பெளத்தத்தில் இணைந்து கொண்டனர்.

இவ்வாறு மதம் மாறிச் சென்றவர்கள் மீளவும் பெளத்தத்தில் இணைந்து கொள்வதற்கு பெளத்த பீடங்கள் உயிர்ப்போடு இருந்ததும் நாட்டின் ஆட்சி அதிகாரம் சிங்களத் தரப்பிற்குக் கிடைத்ததும் காரணமாயின.

ஆனால் எங்கள் சைவ சமயத்தில் இருந்து மதம் மாறியவர்கள் மீளவும் சைவ சமயத் திற்கு வரவில்லை. அவ்வாறு வாருங்கள் என எங்கள் சைவ ஆலயங்கள்-அமைப்புகள் அழைப்பு விடவுமில்லை.

ஆம், அந்நியராட்சியில் கத்தோலிக்க சமயத்தைத் தழுவிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்த்தன போன்ற நாட்டின் ஆட்சித் தலைவர்கள் அனைவரும் மீளவும் பெளத்தத்தில் இணைந்து கொண்டு இலங் கையை பெளத்த நாடு என்றனர்.

ஆனால் தமிழர்களின் தலைவராக இருந்த தந்தை செல்வநாயகம் அவர்கள் மீளவும் சைவ சமயத்தில் இணையவில்லை. இங்கு தான் சிங்களத் தலைவர்களுக்கும் தமிழ்த் தலைவர்களுக்குமான வித்தியாசம் வெளிப்படுகிறது.

ஆம், தந்தை செல்வநாயகம் அவர்கள் மீளவும் சைவ சமயத்தைத் தனது தாய்ச் சமய மாக ஏற்றுக்கொண்டு; ஈழத்திருநாட்டின் ஆதிக்குடிகள் தமிழர்கள். இது சிவபூமி. சைவ மக்களின் நாடு எனக் கர்ச்சித்திருந்தால், நம் தமிழர்களின் இன்றைய நிலை உன்னதமாக இருந்திருக்கும்.

என்ன செய்வது தாய்ச் சமயத்தை தரம் தாழ்த்தியதால் இன்று நம் இனம் பாவப்பட்ட- சாபத்திற்கு ஆளான இனமாகத் துன்பப்படுகிறது.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link