Type to search

Headlines Local News News

ஆதார வைத்தியசாலைகளை மேம்படுத்த ரூ. 31,000 மில்லியன் ஒதுக்கீடு!

Share

இலங்கையிலுள்ள ஆதார வைத்தியசாலைகளின் குறைபாடுகளைப் பூர்த்தி செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த வேலைத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இதற்கென 31,000 மில்லியன் ரூபா (31 பில்லியன்) நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

நேற்று (04) பிற்பகல் மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் அரச வைத்தியசாலை கட்டமைப்பை மேலும் முறைப்படுத்தி, உயர்தர வசதிகளுடன் கூடிய நோயாளி பராமரிப்பு சேவைகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்கமைய, வைத்தியசாலைகளின் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சினால் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட விசேட வைத்தியர்கள் ஒன்றிணைந்து, பல மாதங்களாகக் காத்திருக்கும் சிறுநீரகக் கல் நோயாளிகளுக்குப் பல இடங்களில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான முன்மொழிவை வழங்கியுள்ளனர். இதற்காக சுமார் 2,000 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கென சுகாதார அமைச்சு விசேட தலையீட்டை மேற்கொண்டு, மீரிகம அடிப்படை மவைத்தியசாலையின் புதிய நவீன அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய கட்டடத்தில் தேவையான ஊழியர்களை அனுமதித்து, இம்மாதம் 12ஆம் திகதி முதல் அந்த அறுவை சிகிச்சைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் கூறினார். சுகாதார சேவையில் இதுவொரு விசேட சந்தர்ப்பம் எனவும், இந்த வேலைத்திட்டத்திற்காக வெல்லவாய வைத்தியசாலையையும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் குமாரி, சதுரி கங்கானி, வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் நிஹால் வெலிமுன்னி, ஊவா மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.எம். மஹேந்திர செனவிரத்ன, மொனராகலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சேனக ஹேவாமான்ன, வைத்தியசாலை அத்தியட்சகர் விசேட வைத்திய நிபுணர் மதாரா குணசேன மற்றும் மருத்துவ ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link