657 இந்தியச் சிலைகளைத் திருப்பி அளித்த அமெரிக்கா!
Share
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 657 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு தொன்மையான இடங்களும், சிலைகளும் உள்ளன. இந்த சிலைகளின் மதிப்பு, சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் இருக்கும். அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் திருடிச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு கடத்தி வரப்பட்ட சிலைகளை பல நாடுகள் பறிமுதல் செய்து வைத்துள்ளன. அவற்றை திரும்ப பெறும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அமெரிக்கா அரசு பல சிலைகளை இந்தியாவிடம் திருப்பி அளித்துள்ளது.
தற்போது இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 657 பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் சிலைகளை அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. இதன் மதிப்பு 14 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் 117 கோடி ரூபாய்).
இந்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள், நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. சத்தீஸ்கரின் அவலோகிதேஸ்வரர், அபய முத்ரா புத்தர், நடன விநாயகர் போன்ற அரிய சிலைகள் இதில் அடங்கும்.
மற்றொரு முக்கியப் பொருள், 7.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள சிவப்பு மணற்கல் புத்தர் சிலையாகும். இந்த நடவடிக்கை, கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றது.
பழம்பொருள் கடத்தல்காரர் சுபாஷ் கபூர் மற்றும் தண்டனை பெற்ற கடத்தல்காரர் நான்சி வீனர் ஆகியோருடன் தொடர்புடைய சர்வதேச கடத்தல் கும்பலிடம் தொடர் விசாரணைகளின் மூலம் இந்தப் பழமையான சிலைகள் மீட்கப்பட்டன.
” திருடப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் சிலைகளை மீட்டு தாயகம் கொண்டுவரும் முயற்சிகள் தொடரும் என மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் எல் பிராக் ஜூனியர் தெரிவித்தார்.


