50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி
Share
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரெலினா பகுதியில் இன்று (20) காலை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போதே காலை 9:30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. தந்தை, தாய் மற்றும் இரண்டு மகள்கள் பயணித்த இந்த முச்சக்கரவண்டியை மூத்த மகளே செலுத்தியுள்ளார். அவருக்கு முறையான ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் இருந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வளைவு ஒன்றில் எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்ற போது, முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து வட்டவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


