நிலக்கரியின் தரத்தினால் ஏற்படும் மேலதிக செலவுகளை மக்களிடம் வசூலிக்க அனுமதி இல்லை
Share
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் காரணமாக ஏற்படும் மேலதிக செலவுகளை, மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது மின் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கக் கூடாது என இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளின் போது மின் உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காகச் செலவிடப்படும் நியாயமான செலவுகள் மட்டுமே கருத்திற்கொள்ளப்படும் என இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தின் போதும் நிலக்கரி தரம் காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், வருங்காலக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளின் போதும் இவ்வாறான செலவுகளை மின்சாரக் கட்டணத்தில் உள்ளடக்காமல் இருக்க ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.


