நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் சுற்றிவளைப்புக்கள் – 41 கைது!
Share
நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மீன்பிடி மற்றும் பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 41 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், கடற்படையினர், கடற்கரை பாதுகாப்புப் படை மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்துடன் இணைந்து ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15ம் திகதி வரை நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 11 டிங்கி படகுகள் மற்றும் 02 வாகனங்கள் ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் செம்மலை, செட்டிபாளையம், எலிசபெத் தீவு, ஃபவுல் பொய்ன்ட், கிளாப்பன்பர்க் பொய்ன்ட், உப்புரால், நந்திக்கடல் ஏரி, அளம்பில், எலிஃபண்ட் தீவு, திருகோணமலையில் உள்ள புதுவாக்கட்டு, புத்தளத்தில் உள்ள உச்சமுனை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள கொம்மர் பொய்ன்ட் ஆகிய கடலோரப் பகுதிகள் மற்றும் ஏரிகளை மையப்படுத்தி நடத்தப்பட்டன.
இந்த வெற்றிகரமான நடவடிக்கைகளின் மூலம் பெருமளவிலான கடலட்டைகள், வணிகத் தரத்திலான வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 41 சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட டிங்கி படகுகள், வாகனங்கள் மற்றும் உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு, கிண்ணியா, கொட்பே ஈச்சிலம்பற்று, களுவாஞ்சிகுடி, கிளிநொச்சி மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களிடமும், புல்மோட்டையில் உள்ள விசேட அதிரடிப்படையினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


