Type to search

Headlines Local News News

தோட்ட மக்கள் குறித்து ஜனாதிபதியின் பணிப்புரை

Share

தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

திட்வா புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கான இழப்பீடு வழங்குதல், வர்த்தக நட்டஈடு வழங்குதல், வீடுகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

வீடுகளை இழந்து கூடாரங்களில் வாழும் தோட்ட மக்கள் தற்போது நிலவும் மழை காரணமாக, பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதால், அவர்களுக்கு மீள்குடியேற்றத்தில் முன்னுரிமை அளித்துச் செயற்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதுடன், அதற்கான காணிகளை ஒதுக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறும், அக்காணிகளில் நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை அங்கேயே தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.

அண்மைய காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவான டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்பும் செயல்பாட்டின் ஆரம்பத்தில் சில சிக்கலான நிலைகள் காணப்பட்ட போதிலும், முறையான திட்டமிடல் மற்றும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாக அவற்றை வெற்றிகரமாக முறியடித்து, முதற்கட்டப் பணிகளில் கணிசமான பகுதியை முடிக்க முடிந்ததைச் சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பில் அனைவருக்கும் ஜனாதிபதி இதன்போது தனது நன்றியை தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link