கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பயங்கரம் :துடிதுடிக்க உயிரிழந்த மாணவி!
Share
இந்தியாவின் இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் வீதியில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபால்பூர் பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் என்பவரின் மகளான சியா குலேரியா, வழமைபோல கல்லூரிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முகமூடி அணிந்து உந்துருளியில் வந்த நபர் ஒருவர், மாணவியை வழிமறித்து விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளார்.
பின்னர், மாணவியைக் கீழே தள்ளி கழுத்தை வெட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இத்தாக்குதலில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தை தொடர்ந்து தப்பியோட முயன்ற 32 வயதான ரிஷு பாட்டியால் என்ற நபரை அங்கிருந்த பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.
ஆத்திரமடைந்த மக்கள் அவரைத் தடியால் தாக்கியுள்ளதுடன், சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து குறித்த நபரை மீட்டெடுத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மதுபோதைக்கு அடிமையானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர் மறுப்புத் தெரிவித்தமையால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
எனினும், கொலைக்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் வெளியிட்டு வரும் நிலையில், குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என மாநில அரசு உறுதியளித்துள்ளது.


