Type to search

Editorial

பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் வெளிவராதது ஏன்?

Share

இறவாத பேறு தரும் அமிர்தத்தைப் பெறும் பொருட்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகின்றனர்.

மந்தர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பை நாணாகவும் கொண்டு தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் மறுபக்கமுமாக நின்று வாசுகிப் பாம்பை இழுத்து இழுத்துப் பாற்கடலைக் கடைகின்றார்கள்.

நம் புராணக் கதைகளில் தேவர்களும் அசுரர்களும் ஒன்றாக இணைந்த இடம் இதுவேயாம். அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் வாசுகிப் பாம்பை நாணாக்கிக்கடைய, வலி தாங்க முடியாத வாசுகிப் பாம்பு ஆலகால விடத்தை அப்படியே கக்கிற்று.

அந்தோ! அமிர்தத்தை வேண்டிக் கடைந்தவர்கள் தங்களைத் துரத்திவரும் ஆலகால விடத்தைக் கண்டு தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

தேவரீர்! எங்களைக் காத்தருள்க! என சாட் சாத் சிவப்பரம்பொருளிடம் மன்றாடுகின்றனர்.

கருணையே உருவமான சிவப்பரம்பொருள் தேவர்களையும் அசுரர்களையும் காத்தருளும் பொருட்டு ஆலகால விடத்தை அப்படியே தன் கையால் அள்ளி உண்டார்.

இதனை “… ஆல நஞ்சு கண்டு அவர் மிக இரிய…” என்று கூறும் சுந்தரமூர்த்தி நாயனார், “…அமரர்கட்கு அருள் புரிவது கருதி…” என்றார்.

அதாவது, அமிர்தத்தைப் பருகும் நோக்குடன் பாற்கடலை தேவர்களுடன் அசுரர்களும் சேர்ந்து கடைந்தாலும் ஆலகால விடத்தை தன் கண்டத்தே வைத்த பித்தனின் செயல், தேவர்களைக் காக்கும் பொருட்டே என்பது சுந்தரரின் முடிவு.

அதாவது அசுரர்கள் அதர்மம் செய்பவர்கள். தர்மத்தை அறியாதவர்கள்.

ஆக, தர்மத்தை அறியாத – அதர்மத்தைச் செய்கின்ற அசுரர்களைக் காப்பாற்றுவதென்பது வாதத்திற்குரியது.

எனவே தேவர்களைக் காப்பாற்றுவதன் பொருட்டு சிவன் ஆலகால விடத்தை தன் கண்டத்தே வைக்க, நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்குமாகியது போல தேவர்களைக் காப்பாற்றும் நற்காரியத்தால், அசுரர்களும் காப்பாற்றப்பட்டனர் என்பது ஏழாம் திருமுறை தந்த சுந்தரரின் தீர்மானம்.

இப்போது இவை வாதத்திற்குரியதன்று. மாறாக, பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் வெளிவராதது ஏன்? என்பதுதான் விவாதத்திற்குரியது.

இங்கு தான் ஓர் உண்மை புலப்படுகிறது.

அதாவது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது அமிர்தம் வெளிப்பட்டிருந்தால், இருதரப்புமே தங்களால்தான் அமிர்தம் வெளிப்பட்டதென உரிமை கோரி இரு தரப்பும் சண்டையிட்டிருக்குமேயன்றி, அமிர்தத்தை அருந்தியிருக்கமாட்டா.

ஆக, சாட்சாத் ஈஸ்வரன் வாசுகியினூடு ஆலகால விடத்தை தருவித்து இருதரப்பிற்கும் முரண்பாடு இல்லாமல் தடுத்து உதவினார்.

இந்தக் கதை ஏனிங்கு எனில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு பிணை கிடைக்க யார் காரணம் என்ற வாதப்பிரதிவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பும் உண்டென்பதால், அஃது தர்க்கமாகி என்னால் – உன்னால் – அவரால் என்று பிணைக்கு உரிமை கோரினால் நிலைமை என்னவாகும்.

இதை நினைத்தபோது, ஏதோ பிணையால் நம்மவரிடையே பிணக்கு ஏற்படாமல் அச் சங்கரனே நமைக் காப்பாற்றட்டும் என்று நம் மனம் நினைந்தகால் ஆலகால விடத்துக் கதையும் வந்துற்றது.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link