Type to search

Editorial

நீரின்றி அமையாது உலக உயிர் இங்கு நீரினால் போகுது உயிர்

Share

நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவன். இந்த உலகம் இயங்குவதாயின் அதற்கு அடிப்படை நீர்.

ஆனால் எங்கள் இலங்கைத் திருநாட்டில் நீரினால் உயிர் போவதை எண்ணுங்கால் இதயம் கருகிப் போகும்.

ஆம், கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் நீரில் மூழ்கிப் பலர் உயிரிழந்து போயினர்.

திருகோணமலையில் கடந்த 15ஆம் திகதி சோமாவதி பாலத்தில் நீராடிய தந்தை நீரில் மூழ்குவதைக் கண்ணுற்ற அவரது மூன்று ஆண் பிள்ளைகள் தந்தையைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தபோது, அந்த மூன்று ஆண் பிள்ளைகளும் உயிரிழந்து போன துயரச் சம்பவம் அனைவரும் அறிந்ததே.

இதுபோல கடந்த 16ஆம் திகதி தெதுவோயாவில் நீராடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால் அந்த ஊரே சோகமயமானது.

இதில் மூவர் சிறுவர்கள் என்ற தகவல் கல் மனதையும் கலங்க வைக்கும்.

இதற்கும் மேலாக, கீரிமலைக் கடலில் நீராடிய தெல்லிப்பழை இளைஞன், களனி கங்கையில் நீராடிய சுன்னாகத்தைச் சேர்ந்த மொரட்டுவ பல்கலைக்கழகத்து இறுதியாண்டு மாணவன், புதுக்குடியிருப்பு பேராற்றில் மூழ்கிப் பலியான 20 வயது இளைஞன் என்போரின் உயிரிழப்புகள் நாட்டில் என்னதான் நடக்கிறது என்று எண்ணத் தோன்றும்.

ஆம், நீச்சல் பயிற்சி பற்றி இவ்விடத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்தாயிற்று. இருந்தும் அது விடயத்தில் யாரும் கருசனை கொள்வதாக இல்லை.

இதற்கும் அப்பால், நீராடக் கூடிய இடங்களை இனங்காட்டுவது – அவ்வாறு பொது மக்கள் நீராடுகின்ற இடங்களில் உயிர்க்காப்பு படையினரைக் கடமையில் ஈடுபடுத்துவது, ஆபத்து நிறைந்த கடலில் – ஆற்றில் – குளத்தில் – பாலத்தில் நீராடுவதற்குத் தடை விதிப்பது என்பன மிகவும் அவசியமான விடயங்கள்.

இருந்தும் அது விடயத்தில் நம் நாடு கருசனை காட்டுவதாக இல்லை.

உண்மை. இலங்கையின் கடற்படையில் எத்தனையோ கடற்படை வீரர்கள் ஒரே வேலையைத் திரும்ப திரும்பச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் சிலரை பொதுமக்கள் நீராடுகின்ற இடங்களில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தும்போது அருமந்த உயிர்கள் காப்பாற்றப்படும்.

என்ன செய்வது தண்ணீரைக் கண்டால் அதில் குதித்து நீராடலாம் என்பதைத் தவிர, நம்மவர்கள் அதன் ஆழம் – அதன் சதுப்புத் தன்மை – நீரோட்டம் – சுழி இழுவை என்பன பற்றி எதையும் சிந்திப்பதுமில்லை. நினைப்பது மில்லை.

சிலவேளைகளில் அவை பற்றி யாரேனும் எடுத்துக் கூறினாலும் அதனைச் செவிமடுப்பதுமில்லை என்றளவில், நீரில் முழ்குவதால் ஏற்படுகின்ற மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

எனவே இது விடயத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு பாதுகாப்பான நீர்நிலைகளில் பொதுமக்கள் நீராடுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதேநேரம் ஆபத்து நிறைந்த நீர் நிலைகளில் நீராடுகின்றவர்களைக் கைது செய்து அவர்களை நீதிமன்றில் முற்படுத்தி தண்டம் விதிக்க வேண்டும்.

இதைச் செய்தாலன்றி, நீரில் மூழ்குவதால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களை தடுக்கவும் தவிர்க்கவும் முடியாது.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link