புதுச்சேரிப்பயணம் 10
Share
ஒப்பற்ற தியாகி மாரீசன் எனத் தீர்ப்பு வழங்க வேண்டும். குப்பகர்ணனோ, இந்திரஜித்தோ ஒப்பற்ற தியாகிகள் அல்ல என என் வாதத்தை முன்வைத்து அமர்ந்த போது, நடுவர் ஆயத்தின் தலைமை நீதிபதி ஓய்வு நிலை நீதியரசர் இராம சுப்பிரமணியம் அவர்கள், மாரீசன் நேரில் வந்தால் கூட இப்படி வாதிட்டிருக்க முடியாது எனக் கூறிய போது மன நிறைவு ஏற்பட்டது.
நோக்கர்கள் சார்பில் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களின் மகன் மாது; நோக்கர்கள் மாரீசனை நீக்கியது சரி என வாதிட, ஒப்பற்ற தியாகி இந்திரஜித் என்ற தீர்ப்புக்காக பர்வீன் சுல்தானா வாதிட்டார்.
தொடர்ந்து உமாதேவ ராஜன் கும்பகர்ணனே ஒப்பற்ற தியாகி என முதன் நிலை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன் முறையீட்டு நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஈற்றில் தீர்ப்புரை. மூன்று நீதிபதிகளும் தனித்தனியாகத் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
அதில் முனைவர் தெ.ஞானசுந்தரம், புதுச்சேரிக் கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் தீர்ப்புக்களைக் கூறாமல் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதில் புதுச்சேரிக் கலெக்டர் குலோத்துங்கன், நான் முன்வைத்த விடயங்களை பிரஸ்தாபித்திருந்தார்.
அதில் கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோர் ஒப்பற்ற தியாகிகள் அல்ல என்பதற்கு அவர்களிடம் காணப்பட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி, எனவே அவர்கள் பொருத்தமற்றவர்கள் என நிறுவியமை இந்திய நிர்வாகசேவை பரீட்சையில் கையாளப்படுகின்ற ஒரு நுட்பம் எனக் கூறியதுடன் கும்பகர்ணனும் இந்திரஜித்தும் இராவணனின் உறவுகள். தவிர, இராவணனின் சொத்துக்களை அனுபவித்தவர்கள். ஆனால் மாரீசன் அவ்வாறல்ல என முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனக் கூறி தனது கருத்தைத் தலைமை நீதிபதி உள்ளிட்ட சபைக்கு முன்வைத்தார்.
இறுதியாக நீதியரசர் வி.இராமசுப்பிரமணியன் தீர்ப்பு வழங்கினார்.
தனது தீர்ப்புரையில் மாரீசன் தியாகியல்ல. ஒப்பற்ற தியாகி கும்பகர்ணன் என முதன்நிலை நீதிமன்றததால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி யார் என்று நாம் பார்க்க வேண்டும். அந்தத் தீர்ப்பை வழங்கியவர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்.
ஆக, கும்பகர்ணனே ஒப்பற்ற தியாகி என்று முதன்நிலை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்த மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்கிறது எனக்கூற, சபை கரகோசத்தில் மூழ்கியது.
இங்குதான் ஒரு விடயத்தைக் கூறியாக வேண்டும். அதாவது கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஒரு தீர்ப்பை வழங்கினார் என்றால் அதனை, நிராகரிப்பது கடினம் என்று இந்தியப் பேச்சாளர்கள் கருதுகின்ற நிலையில், கம்பவாரிதியின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றில் வாதிடுவதற்கு இலங்கையைச் சேர்ந்த யான் முன்வந்தமை விமர்சனத்திற்குரியதே.
தொடர்ந்து நன்றியுரையுடன் புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் 58 ஆவது கம்பன் விழா நிறைவு பெற்றது.
இதனிடையே விழா நிகழ்வுகளைத் தவிர, நேரம் கிடைக்கின்ற போது புதுச்சேரியின் முக்கிய இடங்களைப் பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
அந்த வகையில் கம்பவாரிதி அவர்கள் புதுச்சேரிக்குப் போகின்ற போதெல்லாம் தவறாமல் செல்கின்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு இப்போதும் செல்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
ஆஞ்சநேயர் ஆலயம்
புதுச்சேரியில் அமைந்த ஆஞ்சநேயர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 36 அடி உயரமான ஆஞ்சநேயர் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு வீதியூடாக ஆலயத்திற்குள் சென்றோம். அங்கு பரிவார மூர்த்தியாக மேல் திசை நோக்கி பிள்ளையார் எழுந்தருளியுள்ளார்.
அந்தப் பிள்ளையாருக்கு வலம்புரி ஸ்ரீ மஹாகணபதி என்பது நாமம். அந்த நாமம் அடங்கிய பெயர்ப் பலகை அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வலம்புரி மஹாகணபதி என்ற பெயர்ப் பலகையைக் கண்டதும் நான் திகைத்துப் போனேன்.
வலம்புரி விநாயகன். அதிலும் எங்கள் வலம்புரி நாளிதழின் அச்செழுத்தில் (font) வலம்புரி மஹா கணபதி என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்தமை என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.
தொடரும்…


