புதுச்சேரிப்பயணம் 09
Share
மூன்றாம் நாள் நிகழ்வு
புதுச்சேரிக் கம்பன் விழாவின் 3 ஆம் நாள் விழா 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
அமர்வில் சிந்தனை அரங்கம் முதன்மை பெற்றிருந்தது.
சிந்தனை அரங்கத்திற்கு பேராசிரியர் மு.இராமச்சந்திரன் தலைமையேற்றிருந்தார்.
ஆங்கிலத்துறைப் பேராசிரியரான இராமச்சந்திரன் யாழ்ப்பாணக் கம்பன் விழா விலும் கலந்து கொண்டவர்.
சிந்தனை அரங்கில் புலவர் ம. இராமலிங்கம்,பேராசிரியர் தி.மு.அப்துல் காதர், இலக்கியச் சுடர் க.இராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்துல் காதரைத் தவிர ஏனையவர்கள் யாழ்ப்பாணக் கம்பன் விழாவில் பங்கேற்ற பேச்சாளர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தனியுரை இடம்பெற்றது.
தனியுரைக்கான நிகழ்ச்சி அமைப்பை ராம்ராஜ் காட்டன் நிறுவன அறக்கட்டளை பொறுப்பேற்றிருந்தது.
நெடிது நின்றனன் எனும் பொருளில் மாண்புமிகு நீதியரசர் இரா.சுரேஷ்குமார் உரையாற்றினார்.
இந் நிகழ்விற்கு ராம்ராஜ் காட்டன் அறக்கட்டளை நிறுவுநர் சே.ஆர்.நாகராசன் தலைமை வகித்தார்.
ராம்ராஜ் கொட்டன் வேட்டி, சேட் என்பன உலகம் முழுமையிலும் அறியப்பட்டவை என்பது தெரிந்ததே.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நாகராஜன் நிகழ்வில் தலைமையேற்றார் என் பது இங்கு ஈண்டு கவனிக் கத்தக்கது.
மூன்றாம் நாள் விழாவின் மாலை அமர்வில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஏற்பாடா கியிருந்தன.
அதில் ஒன்று முத்து சில்க் ஹவுஸ் நிறுவன அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வாழும் மறை எனும் பொருளில் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் தனியுரை.
மிகச் சிறந்த பேச்சாளர், மனித நேயப் பண்பாளர், திரைப்பட இயக்குநர், யாழ்ப் பாணம் மற்றும் கொழும்புக் கம்பன் கழக விழாக்களில் பலமுறை பங்கு பற்றியவர்.
அவரின் உரைக்குள் நிறைந்த தகவல்கள் புள்ளிவிபர ரீதியாக அடங்கியிருக்கும்.
முத்து சில்க் ஹவுஸ் உரிமையாளர் பெ.நமச்சிவாயம் இந் நிகழ்விற்குத் தலைமையேற்றார்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் 58 ஆவது விழாவின் மூன்றாம் நாள் இறுதி நிகழ்வாக, மேன் முறையீடு இடம்பெற்றது.
வேல் சொக்கநாதன் அறக்கட்டளையின் நிறுவுநர் வேல் சொ.இசைக்கலைவன் முன் னிலையில், இடம்பெற்ற இம் மேன்முறையீட்டு மன்றிற்கு, மாண்புமிகு நீதியரசர் வி.இராம சுப்பிரமணியன், முனைவர் தெ.ஞானசுந்தரம், புதுச்சேரி கலெக்டர் ஈ. குலோத்துங்கன் ஆகியோர் நடுவராக அமர்ந்தனர்.
முதல் நாள் பட்டிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்வதன் பொருட்டே மேன்முறையீட்டு நீதிமன்று கூடியது.
இங்கு நோக்கர்கள் சார்பில் நோக்கர்களில் ஒருவராக இருந்த இரா.மாதுவும் இந்திரஜித் சார்பில் பர்வீன் சுல்தானாவும் மாரீசன் சார்பில் நானும் கும்பகர்ணனின் சார்பில் உமா தேவராஜன் அவர்களும் வாதிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம்.
மேன் முறையீட்டு மன்று கூடியது.
உண்மையில் அது ஒரு நீதிமன்றம் போலவே காட்சி தந்தது.
அந்த உணர்வோடு பேசுவதிலும் கடினம் இருக்கவே செய்தது.
மேன் முறையீட்டு நீதி மன்றில் பதிவாளராக சு.விஜயகிருஷ்ணன் கடமையாற்றினார்.
இவர் இந்திய தொலைக் காட்சியான தூரதர்சனில் முக்கிய பதவியை வகித்தவர்.
உயர்ந்த பண்புடைமையோடும் சிரித்த முகத்தோடும் தன் வகிபங்கை வெளிப்படுத்தினார்.
முதல் நாள் நடந்த பட்டிமன்றத்தில் நோக்கர்கள் வாக்களிப்பின் மூலம் வழங்கிய தீர்ப்பு, நடுவர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் வழங்கிய தீர்ப்பு என்பன பற்றி தெளிவுபடுத்தி தனது அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றின் தொடக்கமே பதிவாளரின் அறிக்கையாக இருந்தது.
இத்தகைய மேன்முறையீடு எங்கள் யாழ்ப்பாணக் கம்பன் விழாவிலோ அன்றிக் கொழும்புக் கம்பன் விழாவிலோ இடம்பெற்றிருக்காததன் காரணமாக எனக்கு இது புதிய களமாகவே இருந்தது.
வழக்குப் பற்றிய பதிவாளரின் விளக்கத்தைத் தொடர்ந்து, நோக்கர்களின் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட மாரீசனுக்காக வாதிட வேண்டிய பொறுப்பு என்னுடையதாயிற்று.
இந்திரஜித்தை விட, கும்பகர்ணனை விட மாரீசனே ஒப்பற்ற தியாகம் செய்தவர் என வாதத்தை முன்வைத்த நான், நோக்கர்கள் வழமையில் தாம் ஆதரிப்பவருக்கே வாக் களித்துப் பழகியவர்கள்.
ஆனால் இங்கு நீக்குவதற்காக வாக்களித்தல் என்பது நிபந்தனையாக இருந்தாலும் பழக்க தோசம் காரணமாக நோக்கர்கள் வழமைப் பிரகாரம் வாக்களித்திருக்கக் கூடிய சந்தர்ப்பம் உண்டு என என் வாதத்தை முன்வைத்தேன்.
தவிர, கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோர் இராவணனின் சொத்தை அனுப வித்தவர்கள்.
இந்திரஜித் இராவணனின் மகன், கும்பகர்ணன் உடன் பிறந்த தம்பி. இவ்வாறாக உறவு நிலை இருக்கும் போது ஒப்பற்ற தியாகி என்ற வகைமைக்குள் அந்த இரண்டு பேருமே அடங்க முடியாது.
மாறாக, தன் உயிர் போகப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டும் மாய மானாகப் போன மாரீசனே ஒப்பற்ற தியாகி.
மேலும், சீதையைக் கவர்ந்து செல்லுகின்ற இராவணனின் செயலை முதலில் கண்டித்தும் நீ அழியப் போகிறாய் என்று எச்சரித்தும் இராவணன் முன் நின்று அவனிடம் துணிந்து கூறியவன் மாரீசன் என என்வாதம் நகர்ந்தது.
நோக்கர்களால் நீக்கப்பட்ட – மாரீசனைபட்டிமன்றத்திற்கு நீதிபதியாக இருந்த கம்ப வாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் மாரீசன் தியாகம் செய்யவில்லை என்று கூறி நோக்கர் கள் வழங்கிய தீர்ப்பை வழி மொழிந்த பின்னர், மாரீசனுக்காக வாதிடுவதென்பது மகா கடினம் என்று தெரிந்தும் என் கட்சிக்காரரான மாரீசனுக்காக என் வாதங்களைத் அடுக்கினேன்.
தொடரும்…


