Type to search

Articles தரிசனம்

தரிசனம்

Share

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 21

கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் இலக்கியப் பேராற்றலால் தமிழக மக்கள் அவர் மீது மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டுள்ளனர்.

அவரைத் தமிழகத்திற்கு வரவழைப்பதில் -அவரின் உரையைக் கேடபதில் தமிழக மக்களும் தமிழக அமைப்புகளும் கொண்டுள்ள ஈடுபாட்டை நேரில் கண்டு வியந்தவன் யான்.

உண்மை.அயோத்தியில் அமைக்கப்பட்ட இராமர் கோயிலுக்கு குட முழுக்கு நடைபெறுவதற்கு முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இராமேஸ்வரத்தைத் தரிசிப்பதற்காகவும் இராமேஸ்வரத்தில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவதற்குமாக வருகிறார்.

அங்ஙனம் இராமேஸ் வரத்திற்கு வருகின்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கம்ப இராமாயணத்தை எடுத்துக் கூறுவதற்கான ஏற்பாடுகள் நடந்தாகின்றன.

குறித்த ஏற்பாடுகளில் கம்பராமாயணத்தை பிரதமர் மோடிக்கு எடுத்துக் கூறவல்ல – கம்பராமாயணத்தில் துறைபோன – அதன் இலக்கிய நயத்தைச் சொட்டச் சொட்டச் சொற் திறத்துடன் தரவல்ல தமிழ் இலக்கியப் பேராற்றல் கொண்டவர் யார்? எனத் தமிழக அறிஞர் பெருமக்கள் கூடி ஆராய்கின்றனர்.

ஈற்றில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கம்பராமாயணத்தை எடுத்துக் கூற வல்லவர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் என்று அந்த அறிஞர்சபை தீர்மானிக்க, இராமேஸ்வரத்திற்கு வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்கள் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் இராமாயணத்தை எடுத்துக் கூறிய தென்பது எங்கள் ஈழத் தமிழுக்குக் கிடைத்த பெரும் புகழ்.

இப் புகழை நம்மில் பலர் இன்னமும் அறியாமல் இருந்தாலும் ஈழத் தமிழ் வரலாறு அந்தப் பெரும் புகழைப் போற்றும் காலம் வரும் என்பது சத்தியமான உண்மை.

இதற்கும் அப்பால், தமிழகத்தில் கம்பவாரிதியின் திருக்குறள் வகுப்புகள் நடைபெறுகின்ற போது அதில் தமிழகத்தில் கற்றறிந்த சமூகம் பங்கேற்று பயன்பெறுவதில் காட்டுகின்ற ஆர்வம் சாதாரணமானதன்று.

ஆம், அண்மையில் நம் நாட்டிற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள் கொழும்பில் வைத்து பிரத்தியேகமாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களைச் சந்தித்தார் என்பதற்குள் கம்பவாரிதிக்குத் தமிழகத்தில் இருக்கக் கூடிய உயர்ந்த மதிப்பின் உன்னதம் வெளிப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கம்பன் விழாவை நடத்துகின்ற தமிழ்ப்பணி சாதாரணமானதன்று.

ஆக, தமிழகத்தில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு பாதபூஜை இடம்பெற்றமை என்பது அவர் மீது தமிழக மக்கள் கொண்ட அன்பும் மதிப்பும் மரியாதையும் என்பதற்கப்பால் அவரிடம் இருக்கக் கூடிய பேச்சாற்றலை இறைவன் அவருக்குக் கொடுத்த கொடையாகவும் அந்தக் கொடையை நாங்களும் கேட்கவும் சிந்திக்கவும் அனுபவிக்கவும் கிடைக்கப் பெற்றதைப் பெரும் பேறாகவும் கருதியே அவருக்கான பாதபூசை இடம்பெற்றதென்பதே உண்மையாம்.

எனவே யார் எத்தகைய விமர்சனங்களை – கருத்துப் பகிர்வுகளை முன்வைத்தாலும் அதில் நயத்தக்க நாகரிகத்தைப் பேணுங்கள்.மற்றவர்களுடைய மனங்களை நோகடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.

இன்று நாம் சரியயன நினைப்பது நாளை தவறு என்ற முடிவுக்கு வருவது தான் இயற்கை.

எனவே நாம் நாம் கருதுகின்ற- முன்வைக்கின்ற கருத்துக்கள் என்பன நம்மளவில் ஏற் புடையதேயன்றி அதனை அனைத்து மக்கள் சமூகமும் ஏற்றுக் கொள்ளும் என நினைப்பது பொருத்தமன்று.

ஆகையால் விமர்சனங்கள் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக அமையட்டும்.

அதில் பண்புடைமை மேலோங்கட்டும் என்ற கோரிக்கையோடு இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற தரிசனத்தை தொடர்ந்து தரிசிக்கலாம்.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link