தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 10
ஆக, கத்தோலிக்கம், இஸ்லாம் ஆகிய மதங்கள் உலகளவில் தலைமைப் பீடங்களைக் கொண்டிருப்பதுடன் முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய மார்க்கத்திற்கான பாதுகாப்பையும் பலப்படுத்தி நிற்கின்றன.
மேற்குறித்துரைத்த கத்தோலிக்கம்-இஸ்லாம் ஆகிய மதங்களின் தலைமைப் பீடங்கள் பலம் பெற்றிருக்கும் அதேவேளை பெளத்த மதத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கம் பெளத்தத்தை ஆட்சி மதமாக ஆக்கி வைத்துள்ளது.
ஆம், இலங்கை பெளத்த- சிங்கள நாடு என்பதனூடு அரசியலமைப்பில் பெளத்த மதத்திற்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக அஸ்கிரிய-மல்வத்தப் பீடங்களின் கட்டளைகளை மீறி, செயற்பட முடியாத சிங்கள அரசுகளே இதுகாறும் இந்த நாட்டில் இருந்து வருகின்றன.
இந்த நாட்டின் பிரதமராக இருந்த சேர்.ஜோன் கொத்தலாவல மட்டுமே பெளத்த துறவிகளை பெளத்த மதத்தோடு நிறுத்துவதற்கு முயற்சி செய்தார்.
ஆயினும் அவரின் முயற்சியை சிங்கள அரசியல் தரப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதன் காரணமாக பெளத்த துறவிகள் ஆட்சி அதிகாரங்களில் செல்வாக்கு செலுத்துவது மேலோங்கிற்று.
உண்மை. இந்த நாட்டின் ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பதாக இருந்தால் அதற்கு பெளத்த பீடங்களின் ஆசியும் ஆதரவும் தேவை என்ற நிலையானது, இலங்கைத் திருநாட்டில் பெளத்தத்தின் செல்வாக்கும் அதிகாரமும் எத்துணை பலம் கொண் டுள்ளது என்பதைக் காட்டி நிற்கும்.
ஆம், இந்த நாட்டின் ஜனாதிபதியாயினும் சரி, பிரதமராயினும் சரி அவர்கள் பதவியேற்ற கையோடு அஸ்கிரிய-மல்வத்த பீடங்களுக்குச் சென்று மகா நாயக்கர்களின் கால்களைத் தொட்டு வணங்குகின்ற நடைமுறை இன்றளவும் இந்த நாட்டில் நீடிக்கின்றது எனில், பெளத்தத்திற்கான பாதுகாப்பும் பெளத்த பீடங்களின் வலிமையும் எவ்வாறாக உள்ளது என்பதை உணரமுடியும்.
இங்கு தான் இந்து மதம் பற்றி நாம் சிந்திக்கும் போது மனிதன் எந்தவித தடைகளும் இன்றி-கட்டுப்பாடுகளும் இன்றி தன்னை உணர்ந்து கொண்டு, தன் தலைவனாகிய இறைவனின் தாழை வணங்குகின்ற பக்குவ நிலையைத் தானாகப் பெற்றாக வேண்டும்.
அதாவது உன்னையே நீ அறிந்து இப்பூமியின் கண் நிகழ்ந்த உன் மானிடப்பிறப் பயனானது இறைவனின் திருவடிகளை அடைந்து பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவ தற்கானதாகும்.
எனவே பரிபக்குவ நிலையை தானாக அடைவதை இந்து மதம் சுட்டி நிற்கின்றது.
இந்து மதம் என்பது “தர்மம்” ஆகும். அதாவது இந்துக்கள்-சைவர்கள் பிற உயிர்களைக் கொன்று பூசிக்காமல்-உயிர்களை வருத்தாமல் நல்லன செய்து வாழ வேண்டும் என்பதாகும்.
உலகில் இந்து மதம் தவிர்ந்த ஏனைய மதங்கள் புலாலுண்பதை- உயிர்க் கொலையை மறுதலிக்க வில்லை என்பதற்குள் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளுமே ஏனைய சமயங்களின் தார்ப்பரியமாக உள்ளதை உணர முடியும்.
ஆம், வள்ளுவப் பெருமானிடம் சென்ற சிலர் ஐயனே! இந்த உலகில் எல்லா உயிர்களும் யாரைத் தொழுது வணங்கும் எனக் கேட்கிறார்கள்.
அதற்கு ஐயன் வள்ளுவன், அன்பர்களே! யாரெல்லாம் பிற உயிர்களைக் கொன்று புலாலுண்பதை மறுக்கிறார்களோ அவர்களையே எல்லா உயிரும் தொழும் என்கி றார்.
“கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி எல்லா உயிருந்தொழும்” என் பது வள்ளுவன் இந்த உலகிற்கு உரைத்த உண்மைப் பொருள்.
ஆம், புலால் உண்பதற்காக உலகம் முழுவதிலும் நடந்தாகின்ற உயிர்க் கொலைகள் அதனால் உயிரினங்கள் படுகின்ற வதைகள் இந்தப் பூமியின் கண் அன்பையும் இரக்கத்தையும் பிறஉயிர்களை நேசிக்கின்ற ஜீவ காருண்யத்தையும் வேரறுத்து விடுகின்றன.
இங்கு ஓர் உண்மையைக் கூறியாக வேண்டும்.
அதாவது சைவம் என்பதன் எதிர்ப்பதம் அசைவம் ஆகும்.
ஆக, ஒரு சமயமானது, தான் பூசிக்கின்ற உணவின் அடிப்படையில் தன்னை இனங்காட்டுகிறது என்பது இந்த உலகின் கண் இருக்கக் கூடிய மிக உயர்ந்த மெய்ஞானத் தத்துவமாகும்.
உண்மை. சைவ சமயம் என்றால், இங்கு அசைவத்திற்கு இடமேதுமில்லை. சைவத்தில் அசைவம் இருந்தால் அது சைவமன்று.
அதாவது ஒரு பாற்குடத்தில் ஒரு துளி விசம் கலந்து விட்டால் அது நஞ்சுப் பாலாகுவது போலவே அசைவ உணவு உண்பவர்கள் சைவர்களன்று.
ஆம், இன்று சைவ சமயத்தவர்களில் பெரும்பாலானவர்கள் புலாலுண்பதை பிரியமாக கொண்டுள்ளனர் என்ற உண்மையையும் இங்கு கூறித்தான் ஆக வேண்டும்.
தொடரும்…


