Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

மனமும் நிறைவும்

ஒரு ஆள் இருந்தான். நிறைய பணம் சம்பாதித்தான். ஆனால் செலவு செய்ய மனது வரவில்லை. கருமி

அவன் என்ன செய்தான் என்றால் சேர்த்த பணம் முழுவதையும் ஒரு மரத்தடியிலே புதைத்து வைத்திருந்தான். வாரத்துக்கு ஒரு தடவை அந்த மரத்தடிக்கு வருவான். புதைத்த இடத்தை ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்பான். அப்புறம் போய் விடுவான்அவ்வளவுதான்.

ஒருநாள் ஒரு திருடன் வந்தான். இவன் புதைத்து வைத்திருந்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டான். இது தெரிந்து விட்டது.

அந்த கருமி புலம்ப ஆரம்பித்துவிட்டான். இவன் புலம்பலைக் கேட்டதும் அக்கம் பக்கத்திலே இருந்த எல்லோரும் ஓடி வந்தார்கள். என்ன விடயம் என்று விசாரித்தார்கள், இவன் சொன்னான்.

ஒரு பெரியவர் கேட்டார். “ஏனப்பா.. வாராவாரம் வந்து இந்த இடத்தைப் பார்க்கறதாகச் சொன்னியே எப்பவாவது இதிலே இருக்கிற பணத்தை எடுத்து செலவு செய்திருக்கியா?” என்று கேட்டார்.

தான் அப்பப்ப வந்து அதை பார்க்கறதுதான் வழக்கம். அதைத் தொட்டதே இல்லை! என்றான்; அவன்.

அப்படின்னா இப்பவும் நீ அதே மாதிரி வாராவாரம் ஒரு தடவை வந்து இந்த இடத்தைப் பார்த்துட்டுப் போகலாமே! அப்படின்னாராம் அந்தப் பெரியவர். அதுவும் சரிதானே!

எவ்வளவு காலமானாலும் அவன் அந்த பணத்தை எடுத்துச் செலவு செய்யப் போறதில்லை. அப்படி இருக்கிறப்போ, உள்ளே பணம் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாமல் போனாலும் ஒன்றுதான்!

இதுலேயிருந்து என்ன புரியுது என்றால் ஒருத்தரிடம் இருக்கிற பணத்தைக் கொண்டு அவர் பணக்காரரா ஏழையா என்று முடிவு செய்யறது சரி இல்லை. அந்த செல்வத்தை அனுபவிக்கிற திறன், பயன்படுத்தற திறன் அதை வைத்துத்தான் அவர் ஏழையா பணக்காரா என்பதை நிர்ணயம் செய்யணும்! அதுதான் சரி!

செலவு செய்யத் தெரியாதவன் சேகரம் செய்வதிலே என்ன பிரயோசனம்?

தலைமுடியே இல்லாதவன் தாராளமா சீப்புகளை வாங்கிச்சேகரம் செய்வது மாதிரிதானே இது.

சில சமயம் செலவு செய்ய நாம தயாராக இருந்தாக்கூட அந்தச் செல்வம் நமக்குப் பயன்படுறதில்லை.

அரேபியாவுலே ஒரு நகை வியாபாரி. விலை உயர்ந்த முத்துக்களையெல்லாம் அவர் வைத்து வியாபாரம் செய்துகொண்டிருந்தார்.

அவர் ஒரு சமயம் ஒரு பாலைவனம் வழியாக ஒட்டகத்திலே! போய்க்கொண்டிருந்தார்.

அப்போது திடீர் என்று கடுமையான புயல் வீச ஆரம்பித்து விட்டது. திசை தவறி இவர் எங்கேயோ வந்துவிட்டார்.

கூட வந்தவங்களையும் காணவில்லை. எங்கே போனாங்களோ தெரியவில்லை.

இவர் ரொம்ப பயந்து போய் அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்தார். வழியே தெரியவில்லை. பசி கடுமையாகிவிட்டது. ஒட்டகத்து முதுகிலே ஒரு மூட்டை இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே ஏதாவது இருகிறதா என்று தேடிப் பார்த்தார். அது வரைக்கும் கண்ணிலே தட்டுப்படாத அபூர்வமான ஒரு பை அவர் கண்ணிலே பட்டுவிட்டது. ஆகா..! அதிலே ஏதாவது சாப்பிடுவதற்கு இருக்கும்! என்று நினைத்து ஆவலாக அதைப் பிரித்துப் பார்த்தார்.

அந்தப் பையிலே விலை உயர்ந்த முத்துக்கள் நிறைய இருந்ததாம்.

அப்பத்தான் அவர் நினைச்சாராம். விலை உயர்ந்த முத்துக்கள் கூட சாப்பிடறதுக்கு உணவாக முடியாது என்பதைப் புரிந்து கொண்டாராம்.

எந்த நேரத்திலே எது நமக்குத் தேவையோ அது நமக்குத் தாராளமாக கிடைக்கணும்.

அப்படி அது கிடைக்கறதுக்கு நம்மிடம் இருக்கிற செல்வம் பயன்படவேண்டும்.

நம் மூலமாக அது நமக்கும் அடுத்தவங்களுக்கும் பயன்படலாம். அதுதான் செல்வத்தின் பயன்.

ஒரு மரத்தடியிலே ஒருத்தன் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான். அந்தப் பக்கமாக வந்த இன்னொருத்தன். “ஏனப்பா அழுதுகொண்டிருக்கிறாய்?” என்றான்.

இந்த இடத்திலே தான் பூமிக்கு அடியிலே பணம் இருக்கு. புதைத்த இடம் தெரியவில்லை அதுதான் அழுகிறேன்! என்றான்.

நல்லா ஞாபகப்படுத்திப் பாரு. எந்த இடத்திலே புதைத்தாய் என்று கேட்டான் அவன்.

அது எப்படி எனக்குத் தெரியும். புதைத்து வைத்திருப்பவன் நான் இல்லையே! எங்கள் எதிர்த்த வீட்டுக்காரன்! என்றான் இவன்.

தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link