Type to search

Helth மருத்துவம்

மலச்சிக்கலா… மலத்துடன் இரத்தம் வெளியேறுகிறதா…

Share

மலத்துடன் இரத்தம் வெளியேறுவது என்பது ஒரு சாதாரண பிரச்சினை ஆகும்.

இவ்வாறு மலத்துடன் இரத்தம் வெளியேறுவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.

இவற்றில் சில, எந்தவித நீண்டகால பாரதூரமான பின்விளைவுகளுமற்ற, எளிதில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகள் ஆகும்.

ஆனால் சில, நீண்டகால அடிப்படையில் பாரிய பின்விளைவுகளைக் கொண்டதாகவோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியதாகவோ இருக்கலாம்.

இவ்வாறு மலத்துடன் குருதி வெளியேறும் போது நீங்கள், சில குணாம்சங்களை கட்டாயமாக அவதானிக்க வேண்டும். ஏனெனில், ஒரு வைத்தியரினால் மேற்கொள்ளப்பட வேண்டிய உடற்பரிசோதனை, Endoscopy பரிசோதனை, குருதி பரிசோதனை என்பன இவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாங்கள் நோயாளிகளிடம் இதைப்பற்றி கேட்கும் போது பொதுவாக கவனிக்க வில்லை என்றே கூறுவார்கள். எனவே, மலத்துடன் குருதி வெளியேறும் சந்தர்ப்பங்களில், வெளியேறும் குருதியின் அளவு, எவ்வளவு விரைவாக நீங்கள் வைத்தியரை நாட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்.

குறைந்த நேரத்தில் அதிகளவான குருதி வெளியேறுமாயின் நீங்கள் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். ஆனால், குறைந்த அளவில் குருதி வெளியேறுமாயின் நீங்கள் நிதானமாக வைத்தியரைச் சந்தித்து உங்களுக்குரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மலத்துடன் குருதி வெளியேறும் சந்தர்ப்பங்களில், வெளியேறும் குருதி கருஞ்சிவப்பு நிறமானதா அல்லது பிரகாசமான சிவப்பு நிறமானதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

பிரகாசமான சிவப்பு நிறமான குருதி, மலவாசலுக்கு அண்மையான குடல் பகுதியிலிருந்து குருதி வெளியேறுவதைக் குறிக்கும்.

கருஞ்சிவப்பு நிறமான குருதி, பெருங்குடலின் பிற பகுதிகளில் இருந்து குருதி வெளியேறுவதைக் குறிக்கும். சிலருக்கு, தார் போன்ற, பசை போன்ற மலம் வெளியேற லாம். இதன் அர்த்தம் என்ன வென்றால், எமது உடலில் களம், இரைப்பை அல்லது சிறுகுடல் போன்ற பகுதிகளில் இருந்து இரத்தம் கசிவதாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் நீங்கள் உட னடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.

மலவாசலினூடாக குருதி வெளியேறும் சந்தர்ப்பங்களில், மலம் கழிக்கும் போது மட்டும் குருதி வெளியேறுகிறதா அல்லது மலம் கழிக்காத சந்தர்ப்பங்களிலும் குருதி கசிவு ஏற்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

மலம் கழிக்கும் போது, குருதி வெளியேறுமாயின், அது மலத்துடன் கலந்தபடி வெளியேறுகிறதா அல்லது மலத்திரளையின் மேல் பட்டவாறு வெளியேறுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

மலம் கழிக்கும் போது, மலவாசலில் கட்டிகள் ஏதாவது இறங்குகின்றனவா என்பதை அவதானிக்க வேண்டும். மலம் கழிக்கும் போது, மலவாசலில் தாங்க முடியாத எரிச்சல் உணர்வு ஏற்படுவது, மலவாசலில் உராய்வு காயம் ஏற்பட்டதைக் குறித்து நிற்கும்.

குறுகிய கால அடிப்படையில் பசியின்மை, உடல் மெலிவு, மலங்கழிக்கும் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றம், மலச்சிக்கலும் வயிற்றோட்டமும் மாறி மாறி ஏற்படுதல் என்பன, குடலில் புற்று நோய் ஏற்பட்டுள்ளதை குறித்து நிற்கும் அபாய அறிகுறிகள் ஆகும்.

மேலும், உங்கள் குடும்பத்தில் இரத்த உறவினர்களுக்கு குடல் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்டிருப்பின் அல்லது நீங்கள் புகைக்கும் பழக்கம் உடையவராக இருப்பின், இவ்வாறான அபாய அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.

மலவாசலினூடாக குருதி வெளியேறும் சந்தர்ப்பங்களில், மேற்குறிப்பிட்ட விடயங்களை கவனமாக அவதானித்து மருத்துவருக்கு தெரிவிப்பதன் மூலம் உரிய சிகிச்சைகளை உரிய நேரத்தில் பெற்று உங்கள் ஆரோக்கியத்தை உங்களால் உறுதிப்படுத்திக்கொள்ள முடி யும்.

Dr.வி.துஸ்யந்தன்

குடல், இரைப்பை அறுவைச் சிகிச்சை நிபுணர்

போதனா வைத்தியசாலை,

யாழ்ப்பாணம்.

மண்ணிற சீனி

மண்ணிற சீனியை பலரும் அருமருந்தாக நினைத்துப் பயன்படுத்த ஆரம் பித்திருப்பது அவதானிக்கப்பட்டு வருகிறது.

நீரிழிவு நிலை உள்ளவர்கள் கூட மண்ணிற சீனி பாதுகாப்பானது என நம்பி பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது மருத்துவத்துறையினருக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.

மண்ணிறச் சீனியிலே வெள்ளைச்சீனியிலும் பார்க்க சில ஊட்டச்சத்துக்கள் சற்று அதிகமாகவே காணப்படுகிறது என்ற ஒரு விடயத்தை மூலதனமாக்கி விளம்பரப்படுத்தி அதிகவிலையில் இந்த மண்ணிற சீனி விற்பனையாகி வருகிறது.

அடிப்படையில் மண்ணிறச் சீனியும் வெள்ளைச் சீனியை ஒத்ததே. நிறை அதிகரிப்பு நீரிழிவு என்பவற்றை ஏற்படுத்த வல்லது.

நீரிழிவு நிலை, அதிகரித்த உடல்நிறை போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மண்ணிற சீனியையும் தவிர்த்து விடுவது முக்கியமானதாகும்.

மண்ணிற சீனி உடலுக்கு நல்லது என்ற மயக்க நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

Dr.சி.சிவன்சுதன்,

பொது வைத்திய நிபுணர்,

போதனா வைத்தியசாலை,

யாழ்ப்பாணம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link