ஆச்சி அறிவுரை
Share
வீட்டுவளவுக்குள் முளைக்கும் புல்லுக்கு மருந்து அடிக்கிறார்கள் பேராண்டி…
எங்கட சமூகம் தூரநோக்குச் சிந்தனையில்லாத சமூகம். எந்த விடயத்தை எடுத்தாலும் அதில இருக்கிற நன்மை தீமையை அறிஞ்சு நன்மைகளை எடுத்து தீமைகளை விலக்கிற பழக்கம் இல்லை எண்டு தான் சொல்லுவன்.
உதாரணத்துக்கு வீட்டுக்குப் பக்கதில இருக்கிற சின்னப் பெட்டிக் கடைகளில விக்கிற பழவகைகளுக்குக்கூட மருந்தடிக்கிற கொடுமைத் தனம் நடக்கவே செய்யுது.
கிராமப்புறக் கடைகளின்ர வாடிக்கையாளர்கள் அந்தக் கடை முதலாளியின்ர சொந்தக்காரர், ஊர்க்காரர், பக்கத்து ஊர்க்காரர், தெரிந்த வர்கள் நண்பர்களாகவே இருப்பினம்.
ஆனாலும் பெரும்பாலும் அந்தக் கடைகளிலகூட வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்களுக்கு மருந்தடிக்கவே செய்யினம்.
பழங்களுக்கு, பழுக்கிறதுக்காக அடிக்கிற மருந்து பொல்லாத நச்சுத்தன்மை கொண்டது. மருந்தடிச்ச பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்.
அது அந்தக் கடைக்காரருக்குத் தெரிஞ்சும், தன்ர சொந்தக்காரர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அப்பிடிச் செய்யிறது மனச்சாட்சியில்லாத வேலைதானே பேராண்டி. நாலு காசு உழைக்கிறதுக்காக இப்பிடி அடுத்தவையின்ர ஆரோக்கியத்தில விளையாடுறதை ஒருநாளும் ஏற்க முடியாது.
பேராண்டி இப்ப எங்கட சனம் புது விளையாட்டு ஒன்றைத் தொடங்கியிருக்கினம். ஓம், வீட்டு வளவுக்குள்ள முளைக்கிற புல்லுகளுக்கு மருந்தடிக்கிற புது வியாதி எங்கட சனத்திட்டத் தொற்றியிருக்குது. வீட்டு வளவுப் புல்லுக்கு மருந்தடிக்கிறத ஒரு தொழிலாச் செய்யிற அளவில் அந்த வேலை ஓகோ எண்டு ஓடுதாம்.
ஆறு மாதத்துக்கு ஒருக்கா புல்லு மருந்தடிச்சால் போதும். வளவுக்குள்ள புல்லே முழைக்காதாம். வீடும் சுத்தமா இருக்கும். அழகா இருக்கும். தேவையில்லாமல் புல்லுச் செருக்கிறதுக்கு ஆள் பிடிக்கவும் தேவையில்லை, காசு செலவளிக்கவும் தேவையில்லை.
என்ர பரமசிவா! வீட்டு வளவுக்க இப்பிடி தொடர்ந்து புல்லு மருந்தடிச்சால் அந்த மருந்து மண்ணில ஊறி மழை பெய்ய மருந்து கழுவுப்பட்டு நிலத்துக்குள்ள போகும்.
அப்பிடிப் போனால் நிலத்தடி நீருக்குள்ள அந்த மருந்து கலந்திடும். அந்த மருந்து கலந்த தண்ணியைத்தானே நாங்கள் ஒவ்வொரு நாளும் குடிக்கவேணும், குளிக்க வேணும். நிலை இப்பிடியெண்டால், புற்றுநோய் மனிசருக்கு வராமல் என்ன செய்யும். எங்கட சனத்துக்கு தூரநோக்குச் சிந்தனை இல்லையெண்டு நான் சொன்னது ஏன் எண்டு இப்ப புரியுதோ பேராண்டி?
ஆச்சி வருவா…


