மீண்டும் தொடங்கிய போர் ; சாம்பலாகப் போகும் உலகப்பொருளாதாரம்
Share
“அமைதி திரும்ப வேண்டும்” என்ற எண்ணத்தோடு இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தைகளை உலக நாடுகள் பலவும் உற்றுநோக்கி வந்த நிலையில், மீண்டும் மத்திய கிழக்கில் வெடிகுண்டுச் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது.
பெப்ரவரி 28, 2026 அன்று, அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலைத் தாக்க, போர் மூண்டது. இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்திருக்கும் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது ஈரான். சுமார் 40 நாட்கள் நடந்த இந்தப் போர், இடைக்கால அமைதி ஒப்பந்தத்தின்படி ஏப்ரல் 8 ஆம் திகதி நிறுத்தப்பட்டது.
போர் நிறுத்தப்பட்ட பின்னரும், அமைதி ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதனால், கோபமடைந்த ஈரான், ‘போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனானைத் தாக்கினால் மீண்டும் போர் வெடிக் கும்’ எனக் கடுமையாக எச்சரித்தது.
இஸ்ரேலோ, “இடைக்கால ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது’’ என்றது. லெபனானில், ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாகச் சொல்லி, பொதுமக்களையும் கொன்று குவித்தது இஸ்ரேல். பாலஸ்தீ னத்திலுள்ள காஸா மீதும் அவ்வப்போது கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வந்தது இஸ்ரேல்.
கடந்த சில நாட்களாகவே தெற்கு லெபனான் பகுதியில் தீவிரத் தாக்குதல்களை முடுக்கிவிட்டிருந்த இஸ்ரேல், ஈரானின் எச்சரிக்கையையும் மீறி, லெபனான் நாட்டின் சில எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்தது. அந்தப் பகுதிகளில், தங்கள் இராணுவத்தைக் களமிறக்கி, முழுக் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வந்தது இஸ்ரேல். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. பதிலுக்கு இஸ்ரேலும் ஈரான் மீது ஏவுகணைகளை வீசியிருக்கிறது.
பெப்ரவரி 28 ஆம் திகதி தொடங் கிய ஈரான் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வரவில்லை. அதிலிருந்து 100 ஆவது நாளான ஜூன் 7 ஆம் திகதி மீண்டும் தொடங்கி யிருக்கிறது. ஜூன் 7 ஆம் திகதி, இஸ்ரேலை ஈரான் மீண்டும் தாக்கியவுடன், “ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தினால், அது பேச்சுவார் த்தைகளைப் படுகுழியில் தள்ளிவிடும். எனவே, ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கக் கூடாது’’ என வலியுறுத் தினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
ஆனால், அதை மீறித்தான் ஈரானைத் தாக்க உத்தரவிட்டிருக்கிறார் இஸ்ரேல் ஜனாதிபதி நெதன்யாகு. இரு தரப்பும் இடைவிடாமல் தாக்கிக்கொள்வதைப் பார்க்கும்போது, இது மீண்டுமொரு நெடிய போராக மாறும் அபாயம் தென்படுகிறது. இந்தப் போர் மேலும் தொடர்ந்தால், ஏற்கெனவே ஆட்டம் கண்டிருக்கும் உலகப் பொருளாதாரம் படுபாதாளத்துக்குச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
இஸ்ரேலின் தாக்குதலைக் காரணம் காட்டி, உலக வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணைப் பகுதியைத் திறக்க மறுக்கிறது ஈரான். இடைக்கால அமைதி ஒப்பந்தம் போடப்பட்ட பின்னர் சீனா, பாகிஸ்தான், இந்தியாவின் ஒரு சில கப்பல்களை மட்டுமாவது அனுமதித்து வந்தது ஈரான். தற்போது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியிருப்பதால், ஓரிரு கப்பல்கள்கூட ஹார்முஸ் நீரிணையைத் தாண்ட முடியாத சூழல் உருவாக்கியிருக்கிறது. எரிபொருள் தேவைக்கு 80% வெளிநாடுகளையே நம்பியிருக்கும் இந்தியாவுக்கு இது நற்செய்தி அல்ல. ஏற்கெனவே, இந்தியாவில் பெற்றோல், டீசல், சமை யல் எரிவாயுவின் விலையுயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் எகிறிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், “இது பேரிடர்களின்தசாப்தம். முன்னதாக கொரோனா, அடுத்ததாகப் போர்கள். தற்போது போர்களின் விளைவாக மிகத் தீவிரமான எரிசக்தி நெருக்கடியை உலகம் எதிர்கொண்டு வருகிறது. எரிபொருள் வர்த்தகச் சங்கிலி சீர்குலைந்துகொண்டிருக்கிறது. 140 கோடி மக்களின் ஒன்றிணைந்த உழைப்பால் இந்தச் சவாலை இந்தியா சமாளித்துக் கொண்டிருக்கிறது’’ என்று கடந்த வாரம் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. இந்தப் போரின் விளைவாக இந்தியா எதிர் கொள்ளப் போகும்பொருளாதாரச் சங்கடங்களின் முன் னோட்டமாகவே பிரதமர் எச்சரிக்கை மணி அடிக்கும் தொனியில் பேசியிருப்பதாகப்பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
அவர்கள் மேலும் கூறும்போது, “இஸ்ரேல் – ஈரான் மோதல் உடனடியாக நிறுத்தப்படவில்லை யென்றால், இந்தியாவில் எரிபொருள் விலை தாறுமாறாக உயருவதைத் தடுக்க முடியாது. ஒருகட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பும், பொருளா தாரமும் ஆட்டம் காணலாம். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தும்’’ என்றும் சொல்கிறார்கள்.
சில நாடுகளின் அதிகாரப் பசிக்காக உலக நாடுகள் பலவும் எரிபொருள் தட்டுப்பாட்டிலும், விலைவாசி உயர்விலும் சிக்கித்தவிப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. எனவே, இனியாவது அமெரிக்காவும் ஐ.நா சபையும் வெறும் அறிக்கைகளோடு நிறுத்திக்கொள்ளாமல், இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரை உடனடியாக நிறுத்தத் தீவிரமான தூதரக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல்லை யென்றால், இந்தப் போர் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் நெருப்பில் தள்ளி, சாம்பலாக்கிவிடும்!
அப்பாச்சி ஹெலிகாப்டரை வீழ்த்திய ஈரான்
ஈரான், அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதற்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது அமெரிக்க இராணுவம்.
“அமெரிக்க இராணுவத்தின் ‘அப்பாச்சி’ ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளையகபடைகள் ஈரானுக்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதல்களைத் தொடங்கின. ஈரானின் அநியாயமான ஆக்கிரமிப்புக்கு இணையாகக் கொடுக்கப்பட்ட தகுந்த பதிலடியே இந்த இராணுவ நடவடிக்கையாகும்”.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது…
“ஹார்முஸ் நீர்ச்சந்திப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நம்முடைய அதிநவீன அப்பாச்சி ஹெலிகொப்டர் ஒன்றை ஈரானியர்கள் சுட்டு வீழ்த்தியதாக நமது பெருமைமிகு ராணுவம் தற்போது எனக்குத் தகவல் தெரிவித்துள்ளது.அதில் இரண்டு பைலட்டுகள் இருந்தனர், நல்லவேளையாக அவர்கள் இருவரும் எந்தக் காயமும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர்.இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா தகுந்த முறையில், கண்டிப்பாகப் பதிலடி கொடு த்தே தீர வேண்டும்”.


