Type to search

Articles புதுச்சேரிப்பயணம்

புதுச்சேரிப்பயணம் 07

Share

புதுச்சேரிக் கம்பன் விழாவின் முதல் நாள் அமர்வின் காலை நிகழ்வு நிறைவடைந்த பின் அனைவருக்கும் மதியபோசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுச்சேரி மாநகராட்சிமன்றத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் மதிய போசனம் வழங்கப்பட்டது.

முன்னதாக அந்த மண்டபம் அமைந்த வளாகத்தில் பிரமாண்டமான பதாகைகள் கட்டப்பட்டிருந்தன.

விருந்தோம்பல் நிகழ்விற்கு வருக வருக என அழைக்கின்றோம் என்ற அழைப்பு அந்தப் பதாகைகளில் இடம் பெற்றிருந்தன.

மதிய போசனம் இடம் பெறும் மண்டபத்திற்கு விழாப் பேராளர்கள் வருகை தந்தபோது, மண்டப நுழைவாயிலில் வைத்து அவர்களுக்கு வெள்ளைச் சால்வை அணிவித்து ஏற்பாட்டாளர்கள் வரவேற்றனர்.

அங்கும் போத்தல்களில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குகின்ற நடைமுறை இருப்பதை அவதானிக்க முடிந்தது.

முதல் நாள் விழாவின் மாலை அமர்வு சரியாக மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியது.

முனைவர் தெ.ஞானசுந்தரம் தலைமையில் கம்பன் போற்றும் விவேகம் என்னும் பொருளில் வைகைச் செல்வன், இரெ.சண்முகவடிவேல், இலக்கியச் சுடர் த.இராமலிங்கம் ஆகியோர் உரையாளர்களாகினர்.

தலைமை வகித்த முனைவர் தெ.ஞானசுந்தரம் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமை உடையவர்.

தவிர, வால்மீகி எழுதிய இராமாயணத்தின் மூலமொழியிலும் அவருக்குப் பரீட்சயம் இருந்ததன் காரணமாக, கம்பராமாயணத்தை ஒப்பிடுகை செய்வதில் அவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார்.

நிகழ்வின் ஒரு நாள் அவருக்கு அருகில் இருந்து இராப்போசனம் உண்ணுகின்ற வாய்ப்புக் கிடைத்தது. யுத்த காலத்திற்கு முன்னர் தெல்லிப்பழைக்கு வந்ததாகவும் துர்க்கா துரந்தரி செல்வி.தங்கம்மா அப்பாக்குட்டியின் ஏற்பாட்டில் நடந்த சைவ சித்தார்ந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பொருட்டே அங்கு வந்ததாகக் கூறிய அவர், பின்னாளில் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்பதையும் தெரிவித்திருந்தார்.

இரண்டாம் நாள் நிகழ்வு

மே 10ஆம் திகதி இரண்டாம் நாள் நிகழ்வு காலை, மாலை அமர்வுகளாக இடம் பெற்றன. காலை அமர்வில் இளையோர் அரங்கம் முதன்மைபெற்றிருந்தது. கம்பனில் நான் கண்ட இராமன் என்னும் பொருளில் இடம்பெற்ற இளையோர் அரங்கிற்கு வீ.வீரபாலாஜி தலைமை தாங்கினார்.

24 வயது நிரம்பிய அந்த இளைஞன் கம்பராமாயணத்தில் கொண்டிருந்த விற்பன்னம் கண்டு வியந்தேன்.

தலைமைக்குரிய சிறப்பியல்போடு தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை கனகச்சிதமாகக் கையாண்ட அவரின் ஆற்றல் பாராட்டுதற்குரியது.

தமிழ்த் துறையில் தேர்ச்சி பெற்றவராக இருப்பாரோ என்று நினைத்த போது, அவர் வியாபார முகாமைத்துவத்துறை சார்ந்தவர் என்பதும் தற்போது அவர் வியாபார முகாமைத்துவத்தில் கலாநிதிப் பட்டத்தை மேற்கொள்வதாகவும் கூறியதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

எங்கள் மண்ணில் 24 வயது நிரம்பிய இளைஞன் இளமாணிப் பட்டத்தை மட்டுமே நிறைவு செய்ய முடியும்.

இங்கு தான் இந்தியத் தேசத்தின் கல்வி உச்சத்தில் இருப்பதை உணர முடியும்.

கம்பனில் நான் கண்ட இராமன் என்னும் விடயப் பொருளில் நடந்த இளையோர் அரங்கத்தில் தலைவனாக-செல்வி த.சுரேகா, தோழனாக-செல்வி வீ.ஹேமவர்த்தினி, பரம்பொருளாக செல்வன் சீ.தீபக் ஆகியோர் உரையாற்றினர். மூவரும் 24 வயதுக்குட்பட்டவர்களாகவே இருந்தனர்.

அதிலும் தீபக் என்னும் இளைஞன் இன்னும் வயதில் குறைந்தவர். சிறந்த பேச்சாற்றல்.

தனது பேச்சை ஆரம்பிக்கும் போது, தனது ஊரில் இராமாயணத்தொடர் சொற் பொழிவு நடைபெற்றது. முதல் நாள் என் அம்மா என் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்றார். மறுநாள் நான் என் அம்மாவின் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்றேன்.

அந்தச் சொற்பொழிவைக் கேட்டதன் விளைவாகவே புதுச்சேரிக் கம்பன் விழாவில் பேசுகின்றேன்.

அன்று அந்தத் தொடர் சொற்பொழிவை ஆற்றியவர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் எனக் கூறிய போது கரகோசம் வானை முட்டியது.

தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் எங்கள் கம்பவாரிதியின் உரையால் தமிழ் மீது பற்றுக் கொண்டு கம்பராமாயணத்தைக் கற்கும் ஆர்வத்தை பெற்றான் என்ற செய்தியைக் கேட்ட போது பெருமைப்படாமல் இருக்க முடியுமா என்ன?

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link